மாய உலகம்: காண்பதற்கு எத்தனை கண்கள் வேண்டும்?

By செய்திப்பிரிவு

மருதன்

ஒரு மலையால் சரிந்து, சரிந்து சிறு குன்றாக மாற முடியும். குன்றால் உடைந்து, உடைந்து குட்டிக் குட்டிக் கற்களாக மாற முடியும். குட்டிக் குட்டிக் கற்களை எல்லாம் வாரி அணைத்துக்கொள்ள ஒரே ஒரு நதி பாய்ந்து வந்தால் போதும். ஆக, ஒரு மலையைக் கரைக்க என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

ஓர் இலையை அசைக்க எவ்வளவு காற்று தேவை என்று கேட்டால் என்னால் சொல்ல முடியும். ஒரு விதையை எது மரமாக மாற்றுகிறது? ஒரு மேகம் எப்போது மழையாக உருவாகிறது? முழு பூமிக்கும் ஒளியூட்ட கதிரவன் எவ்வளவு கதிர்களை வீச வேண்டும்? ஓர் இரவை அழகாக்க எவ்வளவு நட்சத்திரங்கள் மின்ன வேண்டும்? நான் அறிவேன்.

எத்தனை முயன்றும் என்னால் புரிந்துகொள்ள முடியாத புதிர் ஒன்று உண்டு. அது நீங்கள்தான் என்கிறார் இலக்கியத்துக்கான நோபல் விருது பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர், பாப் டிலான். உங்களை எதைக் கொண்டு அசைப்பது? எதைக் கொண்டு கரைப்பது? எதைக் கொண்டு சின்னச் சின்னத் துண்டுகளாக உடைப்பது? எப்படி உங்களை நதியில் கலப்பது? தெரியவில்லை.

எது நடந்தால் நீங்கள் உங்கள் தலையைத் திருப்பி உங்களைச் சுற்றிள்ள உலகையும் அதிலுள்ள உயிர்களையும் காண்பீர்கள்? ‘என் சூழல் நன்றாக இருந்தால்தான் நான் நன்றாக இருக்க முடியும்’ என்பதை நீங்கள் உணர வேண்டுமானால் அதற்கு இன்னும் எத்தனை காடுகள் அழிய வேண்டும்? எத்தனை துப்பாக்கிகள் வெடித்தால் போர் வேண்டாம் என்பீர்கள்? வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை நீங்கள் உணர வேண்டுமானால் எவ்வளவு ரத்தம் இன்னும் சிந்தப்பட வேண்டும்?

எத்தனை காதுகள் இருந்தால் மனிதனின் அழுகுரலை உங்களால் கேட்க முடியும்? எவ்வளவு கண்கள் உங்கள் முகத்தில் இருந்தால் மனித துயரத்தை நீங்கள் காண்பீர்கள்? உங்களைச் சுற்றியுள்ள வறுமை உங்களை வந்து தீண்ட வேண்டுமானால் அது இன்னும் எத்தனை கொடுமையானதாக மாற வேண்டும்? ஒரு மனிதனின் வலிக்காக நீங்கள் வருந்த வேண்டும் என்றால் அந்த வலி எவ்வளவு பெரியதாக வளர வேண்டும்?

ஒரு மனிதனின் கண்ணீரைத் துடைக்க உங்களுக்கு எவ்வளவு நீளமான கரங்கள் தேவைப்படும்? எவ்வளவு கால்கள் இருந்தால் ஓடோடிச் சென்று ஒரு மனிதனை அழிவிலிருந்து மீட்பீர்கள்? எவ்வளவு பெரிய தோள் இருந்தால் அதில் அவர் சாய்ந்துகொள்ள இடம் கொடுப்பீர்கள்? நீங்கள் பதைபதைக்க வேண்டுமானால் ஒரு மனிதனுக்கு எத்தனை பெரிய அநீதி இழைக்கப்பட வேண்டும்? எத்தனை வாய்கள் இருந்தால் இன்னொருவருக்காக உங்கள் குரல் ஒலிக்கத் தொடங்கும்?

இன்னும் பெரியதாக, இன்னும் அகலமாக, இன்னும் ஆழமாக உங்கள் நெஞ்சம் மாற வேண்டுமானால் அதற்கு என்னவெல்லாம் தேவைப்படும்? இன்னும் இன்னும் அன்பும், இன்னும் இன்னும் கருணையும் அந்த நெஞ்சை நிறைக்க வேண்டுமானால் அதற்கு எத்தனை கடவுள்கள் பிறந்து வந்தாக வேண்டும்?

உங்களை உருக்குவதற்கு இன்னும் எத்தனை ஆயிரம் பாடல்கள் தேவைப்படும்? உங்கள் கண்களில் கனிவு தோன்றுவதற்கு எத்தனை ஆயிரம் இசைக் கருவிகள் ஒலிக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் சக மனிதனாக நீங்கள் கருத வேண்டுமானால் அதற்கு இன்னும் எவ்வளவு கவிதைகள் தேவைப்படும்? கூர்ந்து கவனிக்கும் திறன் உங்களுக்கு அமைய வேண்டுமானால் இன்னும் எவ்வளவு ஓவியங்கள் தீட்டப்பட வேண்டும்? எத்தனை கதைகள் படித்தால் உங்கள் மனம் விரியும்?

ஒரு பறவை வானோடு வானாகக் கரைந்து செல்வதற்கு அது எவ்வளவு உயரத்துக்குப் பறக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் மேலே, மேலே உயர்வதற்கு எவ்வளவு பெரிய வானம் தேவைப்படும்? எத்தனை தங்கச் சுரங்கங்களைக் கொடுத்தால் உங்கள் தேவைகள் முடிவடைந்து மற்றவர்கள்மீது அக்கறை செலுத்த ஆரம்பிப்பீர்கள்? எத்தனை கிரகங்களைக் கொடுத்தால் எல்லோருக்கும் ஒரு வீடு பகிர்ந்து கொடுப்பீர்கள்? எத்தனை தங்கச் சுரங்கங்களை உங்களிடம் கொடுத்தால் ‘இது போதும்’ என்று நிறைவு காண்பீர்கள்?

விடுதலை என்றால் என்ன என்பதை நீங்கள் கற்பதற்கு இன்னும் எத்தனை கரங்களில் விலங்கு பூட்டப்பட வேண்டும்? எவ்வளவு இருள் உங்களைச் சூழ்ந்தால் வெளிச்சத்தை நீங்கள் நாடத் தொடங்குவீர்கள்? நீங்கள் எழுந்துகொள்வதற்கு இன்னும் எத்தனை முறை கீழே விழ வேண்டும்? எத்தனை இரவுகள் உறங்கினால் நீங்கள் ஒருவழியாக விழித்தெழுவீர்கள்? இதுதான் சரியான பாதை என்பதைக் கண்டறிய இன்னும் எவ்வளவு தூரம் நீங்கள் நடந்துசெல்ல வேண்டும்?

எத்தனை முறை வரலாற்றைப் பதிவு செய்தால் கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள்? அறம் என்றால் என்ன, ஏன் அது மனிதனுக்கு அடிப்படையானது என்பதைப் புரியவைக்க எத்தனை ஆயிரம் நீதி போதனைகளை உங்களுக்காக உருவாக்க வேண்டும்?

விடை காண வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். மலை உடைந்து, உடைந்து நதியில் கலந்ததுபோல் நீங்கள் கரைந்து, கரைந்து இந்த உலகோடு ஒன்று கலக்க வேண்டும். அதற்காகத்தான் நான் பாடுகிறேன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்