எட்டுத் திக்கும் சிறகடிக்கும் கதைகள் - இலங்கை: பின்போவின் பெரிய உடல்! -

By செய்திப்பிரிவு

யூமா வாசுகி

குட்டித் திமிங்கிலம் பின்போ, மிகவும் வருத்தத்துடன் தன் அம்மாவிடம் சொன்னது: “அம்மா, என் நண்பர்களான மீன்குஞ்சுகள் என்னைக் குண்டுப் பையா என்று அழைத்துக் கேலி செய்கின்றன… நான் ஏன் இப்படிக் குண்டாகிவிட்டேன்? மற்ற மீன்குஞ்சுகள் எவ்வளவு சிறியவையாக, அழகாக இருக்கின்றன!”

பின்போவுக்கும் மற்ற மீன்குஞ்சுகளுக்கும் கடலடியில் கண்ணாமூச்சி விளையாடுவதுதான் மிகவும் பிடிக்கும்.

மீன்குஞ்சுகள் ஒளிந்துகொள்ளும்போது, பின்போ எவ்வளவு தேடினாலும் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. அவை அவ்வளவு சிறியவையாக இருந்தன. ஆனால், பின்போ எவ்வளவு பெரிய பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தாலும், அதன் உடலின் பாதி வெளியே தெரியும். அதனால், கண்ணாமூச்சி விளையாட்டில் அது எப்போதும் தோற்றுப்போகும்.

அம்மா திமிங்கிலம் சொன்னது: “மகனே, நீ கவலைப்படாதே. நாம் சாதாரண மீன்களைப் போன்றவர்கள் அல்ல. நாம் திமிங்கிலங்கள். கடலின் மிகப் பெரிய உயிரினம். இந்தப் பெரிய உடல் நம் பெருமைக்குரியது. நீ இன்னும் வளர்வாய். மீன்களுக்கு இல்லாத நிறைய சிறப்புகள் நமக்கு உண்டு. மனிதர்களைப்போல நாமும் பாலூட்டிகள்தான். நம்மால் மட்டும்தான் நெற்றியிலிருந்து தண்ணீரைப் பீய்ச்சியடிக்க முடியும். கடலில் உள்ள எல்லா உயிரினங்களைவிடவும் நாம்தான் சக்தி மிகுந்தவர்கள்.”

பின்போ சிணுங்கியது: “அம்மா, வலிமை இருந்து என்ன பயன்? நான் கண்ணாமூச்சி விளையாட்டில் ஜெயிப்பதுதான் எனக்கு முக்கியம். வலிமையோ உடல் பருமனோ எனக்குத் தேவையில்லை.”

ஒருநாள் மீன்குஞ்சு சொன்னது: “பின்போ, நாம் நீண்ட தூரம் நீந்திச் சென்று கடலின் அக்கரையைப் பார்ப்போமா?”

“கடலின் ஓரத்தில்தான் விளையாட வேண்டும் என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். அதனால் நான் உங்களுடன் வரமாட்டேன்” என்று பின்போ சொன்னது.

“நீ குண்டனாக இருந்தாலும் மிகவும் கோழைதான். திமிங்கிலக் குட்டி என்றால் தைரியம் வேண்டாமா?”

தங்களுடன் வரும்படி மீன்குஞ்சுகள் அதைக் கட்டாயப்படுத்தின.

“வலியப் போய் ஆபத்தில் சிக்கிக்கொள்வதற்குப் பெயர் தைரியம் அல்ல. எப்படியானாலும் நான் உங்களுடன் வரமாட்டேன்” என்று பின்போ உறுதியாகச் சொல்லிவிட்டது.

“நீ அம்மாவின் வாலைப் பிடித்துக்கொண்டு வீட்டிலேயே இரு. நாங்கள் போகிறோம்” என்று மற்ற மீன் குஞ்சுகள் கிலுகிலுவென சிரித்துக்கொண்டு ஆழ் கடலை நோக்கி நீந்தத் தொடங்கின.

சற்று நேரத்துக்குப் பிறகு, மீன்குஞ்சுகள் எல்லாம் பயந்து கத்தும் ஓசை கேட்டது.

உடனே பின்போ, சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றது. அப்போது மீன்குஞ்சுகள் அச்சத்துடன் கரையை நோக்கி விரைந்து நீந்திக்கொண்டிருந்தன. அவற்றை ஒரு பெரிய சுறாமீன் துரத்தி வந்துகொண்டிருந்தது. மீன்குஞ்சுகளை எல்லாம் அப்படியே விழுங்கிவிட வேண்டும் என்று சுறா வாயைத் திறந்தபடியே வந்தது.

பின்போவைக் கண்டதும் சுறா அதிர்ச்சியடைந்தது. திறந்திருந்த வாயைப் பட்டென்று மூடிக்கொண்டது. பின்போ, சுறாவைப் பார்த்து கோபத்துடன் உறுமியது. சுறா திரும்பி மின்னல் வேகத்தில் நீந்தி மறைந்துவிட்டது.

மீன்குஞ்சுகள் பின்போவின் உடலின் பின்னால் ஒளிந்துகொண்டு பார்த்தன. அவற்றால் நம்பவே முடியவில்லை. எவ்வளவு பெரிய சுறாமீன் அது! பின்போவைப் பார்த்ததும் எப்படிப் பயந்து ஓடுகிறது!

தங்கள் நண்பனான பின்போவின் வீரத்தை அப்போதுதான் அவை புரிந்துகொண்டன.

“தைரியம் என்றால் வலியப் போய் ஆபத்தில் சிக்கிக்கொள்வதல்ல. வரும் ஆபத்தை துணிச்சலுடன் எதிர்த்து நிற்க வேண்டும் என்றுதான் பின்போ நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது” என்றன.

பின்போவை எப்போதும் கேலி செய்துகொண்டிருந்ததை நினைத்து மீன்குஞ்சுகள் வருந்தின.

ஒரு நாள் விளையாடுவதற்காகக் கூடியபோது பின்போ சொன்னது: “நண்பர்களே, நீங்கள் புதிய காட்சிகளைப் பார்ப்பதற்காக நீண்ட தூரம் ஆபத்தான பயணம் செல்ல வேண்டியதில்லை. எல்லோரும் என் தலையில் ஏறி அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் இதுவரை பார்க்காத காட்சிகளை எல்லாம் நான் காட்டுகிறேன்.”

மீன்குஞ்சுகள் பின்போவின் தலையில் ஏறி அமர்ந்துகொண்டன.

பின்போ கடலின் மேல்தளத்துக்கு வந்த பிறகு, சக்தியுடன் தண்ணீரை மேலே பீய்ச்சியடித்தது. அப்படி வந்த தண்ணீருடன் சேர்ந்து மீன்குஞ்சுகளும் மேலே சென்றன!

இப்படி உயரத்துக்குச் சென்றதால் மீன்குஞ்சுகள் பல காட்சிகளைப் பார்த்தன. ஆகாயம், பறவைகள், சூரியன், மேகங்கள், கப்பல்கள், தூரத்தில் உள்ள இடங்கள் என்று எவ்வளவு அற்புதமான காட்சிகள்!

மீன்குஞ்சுகளுக்குப் பெருமகிழ்ச்சி! கடலுக்கு அடியில் உள்ள காட்சிகளை மட்டுமே பார்த்திருந்த அவற்றுக்கு, இந்தக் காட்சிகள் பெரிதும் வியப்பளித்தன. அவை பின்போவைக் கட்டிப்பிடித்து நடனமாடின. “எங்கள் பிரியமான நண்பனே, உன்னை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்!” என்று பாடின.

தன் பெரிய உடலை நினைத்து பின்போ பெருமை கொண்டது. தன் வலிமை மற்றவர்களுக்குப் பயன்படுவதை நினைத்து மிகவும் மகிழ்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்