பால் கொதித்தால் ஏன் பொங்குகிறது?

By வி.தேவதாசன்

காலையில் தூங்கி எழுந்தவுடன் பசும்பால் குடிப்பது கவினுக்குப் பிடிக்கும். அன்றைய தினம் அம்மா, அப்பா இருவரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர்.

“அம்மா இன்னிக்கு நானே பால் காய்ச்சுறேன்” என்று சொன்னபடியே சமையலறையை நோக்கி நடந்தான் கவின். அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை வேடிக்கை பார்க்க ரஞ்சனி அவனைப் பின்தொடர்ந்தாள்.

பால் பாக்கெட்டை எடுத்து அதன் நுனியைக் கத்தரியால் வெட்ட முயற்சித்தான் கவின்.

“டேய் நிறுத்துடா. பாத்திரத்தை அடுப்பில் வைக்காமல் பால் பாக்கெட்டை பிரித்தால் பாலை எங்கே ஊத்துவ?” எனக் கேட்டாள் ரஞ்சனி.

“ஆஹா! மறந்துட்டேனே” என்று கூறிய கவின், பால் பாத்திரத்தைத் தேடிப் பிடித்து அடுப்பில் வைத்தான். பின்னர் பாக்கெட்டைப் பிரித்துப் பாலை பாத்திரத்தில் ஊற்றினான்.

அடுப்பைப் பற்ற வைத்த கவின், கொஞ்சம் சர்க்கரை போடலாம் என்று நினைத்து ஒரு பாட்டிலை எடுத்தான்.

“டேய் அது உப்பு பாட்டில். சர்க்கரை பாட்டில் இங்கே இருக்கு பார். உப்புக்கும், சர்க்கரைக்கும் வித்தியாசம் தெரியாதவனெல்லாம் பால் காய்ச்ச வந்துட்டான். அப்புறம் மொத்த பாலிலுமா சர்க்கரையைப் போடுவார்கள்?” என்று கவினைக் கேலி செய்தாள் ரஞ்சனி.

அதனால் அந்த முயற்சியை கவின் கைவிட்டு, இருவரும் பாலை பார்க்க ஆரம்பித்தனர். பால் கொதிக்கத் தொடங்கியது. நன்றாகக் கொதித்த பால் பொங்கி மேலே வந்தது. அடுத்து என்ன செய்வது எனக் கவினுக்குத் தெரியவில்லை. அதற்குள் பால் பொங்கி கீழே வழிந்துவிட்டது.

“அம்மா! பால் பொங்கி கீழே ஊத்துது… பால் வெளியே வருது…” என கத்தியபடியே வெளியே ஓடினான் கவின். அடுப்பை அணைத்தாள் ரஞ்சனி.

“பால் பொங்கினால் அடுப்பின் சூட்டைக் குறைக்க வேண்டும். இல்லையென்றால் பால் கரண்டியை எடுத்து பாலைக் கலக்கிவிட வேண்டும்” என்று கூறியபடியே சமையலறைக்கு வந்த நிலா டீச்சர், மீண்டும் அடுப்பை பற்ற வைத்தார்.

சற்று நேரத்தில் மீண்டும் பால் கொதித்தது. கரண்டியால் கலக்கிக் கொண்டிருந்ததால், இப்போது பால் பொங்கவில்லை. நன்றாகக் கொதித்த பின்னர், பாலை அடுப்பிலிருந்து இறக்கி கவினுக்கும், ரஞ்சனிக்கும் கொடுத்தார் நிலா டீச்சர்.

“கரண்டியால் கலக்கியபோது மட்டும் பால் ஏன் பொங்கவில்லை அம்மா?” என்று கேட்டான் கவின்.

“பாலில் நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், தாதுப் பொருள்கள் உள்ளன. பாலைக் கொதிக்க வைக்கும்போது தனது கொதிநிலையை அடையும் நீர், கொதித்து நீராவியாக மாறுகிறது. அதேநேரத்தில் கொழுப்பு, புரதம் போன்றவை தனியாகப் பிரிந்து பாலின் மேல்புறத்தில் ஆடையாகப் படர்கின்றன.

அந்த நேரத்தில் நீராவி மேல் நோக்கி ஆவியாகச் செல்கிறது. ஆனால், அந்த நீராவியை மேலே செல்லவிடாமல் பாலில் படர்ந்துள்ள பாலாடை தடுக்கிறது. அப்போது அந்த ஆடையைத் தள்ளிக்கொண்டு நீராவி மேலெழும்பி வரும். இதைத்தான் பால் பொங்குகிறது என்கிறோம்.

அடுப்பின் வெப்பத்தைக் குறைத்தால், பாலில் உள்ள நீருக்குக் கிடைக்கும் வெப்பத்தின் அளவு குறையும். இதனால் பாலில் உள்ள நீர் கொதிநிலையை எட்டும் வேகமும் குறையும்.

அதேபோல் பாலைக் கரண்டியால் கலக்கும்போது பாலின் மேலே படர்ந்திருக்கும் பாலாடை உடைக்கப்பட்டு, நீராவி மேலே செல்வதற்கான தடை நீக்கப்படும். தடையின்றி நீராவி மேலே செல்வதால் பால் பொங்குவதும் நின்றுவிடுகிறது” என்றார் நிலா டீச்சர்.

“அம்மா பாத்திரம்கூட இல்லாமல் பால் காய்ச்சும் வித்தை கவினுக்கு மட்டும்தான் தெரியும்” என்றாள் ரஞ்சனி.

பாத்திரத்தை அடுப்பில் வைக்காமல் பால் பாக்கெட்டைப் பிரித்ததற்காக ரஞ்சனி தன்னைக் கேலி செய்கிறாள் என்பதை புரிந்துகொண்ட கவின், “உனக்கு அதாவது தெரியுமா? பாலை காய்ச்சிக் கொடுத்தால், குடிக்க மட்டும்தான் தெரியும்” என்று பதிலடி கொடுத்தான்.

அவர்கள் பேசிக்கொள்வதன் அர்த்தம் புரியாமல் நிலா டீச்சர் முழித்துக் கொண்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்