ஆதி
கரோனா நோய் என்றால் என்ன, இந்தக் காலத்தில் ஏன் நம்மை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது, வீட்டுக்குள்ளேயே இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன நெருக்கடிகள் போன்றவற்றைப் பற்றிப் பேசவும் விளக்கவும் கீழ்க்கண்ட நூல்கள் நிச்சயம் உதவும்.
ஐ.ஏ.எஸ்.சி. எனப்படும் Inter-Agency Standing Committee உலகம் முழுவதும் நடத்திய ஆய்வின் அடிப்படையில், ‘நீதான் எனது ஹீரோ' (My Hero is You) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளுக்குக் கரோனா வைரஸ் பற்றிய புரிதலையும் வைரஸ் தாக்கத்திலிருந்து குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது பற்றியும் அழகான படங்களுடன் கதை வடிவில் சுவாரசியமாகக் கதை எழுதப்பட்டுள்ளது.
இந்த நூலை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் வாசிக்க முடியும். செம்மொழிமணி-புரட்சிக்கவி ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் தளத்திலும், அமேசான் நிறுவனத் தளத்திலும் இந்த நூலை இலவசமாக வாசிக்கலாம்.
இணையத்தில் வாசிக்க: https://bit.ly/35r1pqw
‘புதிய கரோனா வைரஸ்: பாதுகாப்பாக இருக்கலாம்' (The Novel Coronavirus: We Can Stay Safe) என்ற நூலை பெங்களூருவைச் சேர்ந்த பிரதம் புக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் ஏற்கெனவே வெளியிட்டுள்ள நூல்களில் இடம்பெற்ற புகழ்பெற்ற கதாபாத்திரங்கள் இந்த நூலில் தோன்றுகிறார்கள். புதிய கரோனா வைரஸ் பரவிவரும் காலத்தில் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் எப்படி இருப்பது என்று அவர்கள் வழிகாட்டுகிறார்கள். ஆங்கிலம், தமிழ் மட்டுமல்லாமல் பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்த நூல் கிடைக்கிறது.
இணையத்தில் வாசிக்க: https://bit.ly/2VUQylA
தொபாகச்சி என்ற பூதம் ஓர் ஊரிலிருந்த சோப்புகளை எல்லாம் மாயமாக மறைய வைத்துவிடுகிறது. இதனால் அந்த ஊரில் கரோனா வேகமாகப் பரவுகிறது. அதைத் தடுக்க அந்தக் கிராம மக்களுக்கு தமாஷா என்ற யானை உதவுகிறது. யானையின் உதவியுடன் அந்த ஊர் குழந்தைகள் புதிய வழியைக் கண்டு சோப்பைத் தயாரித்துவிடுகிறார்கள், கரோனாவும் விரட்டப்பட்டுவிடுகிறது. பிரபல சிறார் எழுத்தாளர் கீதா தர்மராஜன் எழுதிய ‘மாயமான சோப்பின் மர்மம்!' (The Mystery of the Missing Soap) என்ற கதை இது. கதா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த நூலை, லதா ராமகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பூந்திக்கொட்டை அல்லது சோப்புக்காய் எனப்படும் காயைக் கொண்டு வீட்டிலேயே சோப்பு தயாரிக்கும் முறையும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் வாசிக்க: https://bit.ly/3aY2ojp
‘கோவிட்-19 பற்றிய புரிதல்கள் - குழந்தைகளின் முதற்கட்ட முயற்சி' என்ற தமிழ் நூலை Inklink அறக்கட்டளை, யுனிசெப் அமைப்புடன் இணைந்து உருவாக்கியுள்ளது. குழந்தைகள் மூலமே உருவாக்கப்பட்டுள்ளதுதான், இந்த நூலின் சிறப்பு. நெருக்கடியான இந்தக் காலத்தில் கரோனா தொடர்பாக 12-18 வயதுக் குழந்தைகளுக்கு இணையம்வழிப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு, ஆலோசகர்களின் உதவியுடன் குழந்தைகளே இந்த நூலை உருவாக்கியிருக்கிறார்கள். சென்னை மாநகரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு கண்ணகி நகரில் தற்போது வாழ்ந்துவரும் குழந்தைகள் இந்த நூல் உருவாக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
இணையத்தில் வாசிக்க: https://uni.cf/2zOAPfn
இதைத் தவிர, கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேறு பல ஆங்கில நூல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.
# மனுவேலா மோலினா எழுதியுள்ள 'Corona Virus' என்ற ஆங்கில விழிப்புணர்வு நூலை www.mindheart.co/descargables இணையதளத்தில் வாசிக்கலாம்.
# நர்ஸ் டாட்டி எழுதியுள்ள 'Dave the dog is worried about Corona Virus' என்ற ஆங்கில விழிப்புணர்வு நூலை www.nursedottybooks.com என்ற இணையதளத்தில் வாசிக்கலாம்.
# லண்டனைச் சேர்ந்த ‘நோசி குரோவ்' நிறுவனம் வெளியிட்டுள்ள ‘Corona Virus - A book for Children' என்ற ஆங்கில விழிப்புணர்வு நூலை www.nosycrow.com என்ற இணையதளத்தில் வாசிக்கலாம்.
# குழந்தைகள் நலனுக்காகச் செயல்பட்டுவரும் ஐ.நா.வின் சார்பு நிறுவனமான ‘யுனிசெஃப்',‘Talking about Corona Virus-19 with Young Children'என்ற ஆங்கிலச் செயல்பாட்டு நூலை வெளியிட்டுள்ளது. இந்தக் காலக் குழந்தைகளுக்கு ஸ்டிக்கரை வெட்டி ஒட்டுதல், படங்களை வெட்டி ஒட்டும் செயல்பாடு பிடித்திருக்கிறது. கரோனாவைப் பற்றி விளக்கும் இந்தப் புத்தகம் அந்த வாய்ப்பைக் குழந்தைகளுக்கு வழங்குகிறது. அத்துடன் கரோனா பற்றி ஒரு குழந்தை என்ன உணர்கிறது என்பதை வெளிப்படுத்தவும், கரோனா தொடர்பான அச்சங்களைப் போக்கும் வகையிலும் இந்த நூல் அமைந்துள்ளது.
இணையத்தில் வாசிக்க: https://uni.cf/2VTftWS
# ‘Caroline Conquers her Corona Fears' என்ற நூலை அமெரிக்காவின் எல்.எஸ்.யு. மருத்துவ அறிவியல் மையத்தைச் சேர்ந்த மன நல மருத்துவர்களான கெல்லி காமெல்ஃபோர்டு, கிறிஸ்டல் வாகன், எரின் துகன் ஆகியோர் எழுதியுள்ளனர். வீட்டுக்குள்ளேயே இருக்கும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் என்ன செய்யலாம், செய்ததைக் குறித்துவைப்பது, எப்படி மன நலத்தை மேம்படுத்திக்கொள்வது ஆகிய அம்சங்கள் எளிய முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் இது ஒரு வண்ணமடிக்கும் நூலும்கூட.
இணையத்தில் வாசிக்க: https://bit.ly/2YqkVSL
# ‘What is Covid-19 - A Guide for Kids' என்ற நூலை அமெரிக்காவைச் சேர்ந்த அர்கன்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை, ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. கரோனா வைரஸ் குறித்து அறிமுகப்படுத்தும் எளிமையான இந்த நூல், ஒரு செயல்பாட்டு-வண்ணமடிக்கும் நூலும்கூட.
இணையத்தில் வாசிக்க: https://bit.ly/2Ysrp3I
கொஞ்சம் பாடம்
ஊரடங்குக் காலத்தில் பாடநூல் சாராத அதேநேரம் அறிவை வளப்படுத்தும் நூல்கள் பலவற்றை, வாசிக்க நேரம் ஒதுக்குவது முக்கியமானது. அதேநேரம், இந்தக் காலத்தில் பாடநூல்களை வலிந்து திணிக்காமல், ஒவ்வொரு பாடத்தின் பின்பகுதியிலுள்ள செயல்பாடு, விளையாட்டுகளைக் குழந்தைகளைச் செய்துபார்க்கச் சொல்லலாம். அந்த வகையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் அனைத்துப் புதிய பாடநூல்களும் http://tnschools.gov.in/textbooks, http://www.tnscert.org/tnscert/ebooks/ ஆகிய இணையதளங்களிலும், என்.சி.ஆர்.இ.டி. நிறுவனத்தின் நூல்கள் http://ncert.nic.in/ebooks.html, http://ncert.nic.in/textbook/textbook.htm ஆகிய இணையதளங்களிலும் இலவசமாகக் கிடைக்கின்றன. பதிவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்து இணையதளங்களில்...
‘இந்து தமிழ்' மாயா பஜார் இணைப்பிதழில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேல் வெளியான கதைகள், கட்டுரைகள், படைப்புகள் குவிந்து கிடக்கின்றன. தவறவிட்ட படைப்புகளையும், ஒருவேளை ஏற்கெனவே படித்திருந்தால் பிடித்த படைப்புகளை மீண்டும் ஒரு முறையும்கூட வாசிக்கலாம்.
குழந்தைகளுக்கான வாசிப்பு, செயல்பாடுகள் அடங்கிய 'தி இந்து யங் வேர்ல்ட்' இதழ் நடத்தும் https://ywc.thehindu.com/ என்ற பிரத்யேக இணையதளத்தை ஒரு மாத காலத்துக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம். அதேபோல் பதின்ம வயதுக் குழந்தைகளுக்கான வாசிப்பு, செயல்பாடுகள் அடங்கியது 'தி இந்து இன்ஸ்கூல்' இதழ். https://eschool.thehindu.com/ என்ற இணையதளத்தை ஒரு மாதத்துக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம். கரோனா தொடர்பான அறிவியல்பூர்வத் தகவல்கள், விழிப்புணர்வுத் தகவல்கள் அடங்கிய இணையதளம் இது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago