சென்னை சரித்திரம் | காலத்தை வென்ற 11 சாதனைகள்
17-ம் நூற்றாண்டில்
- சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1664-ல் உருவான அரசு மருத்துவமனை, பிறகு 1770-ல் தற்போதுள்ள இடத்துக்கு இடம்பெயர்ந்தது. அதுவே நாட்டின் முதல் அரசு மருத்துவமனை.
- தமிழ்நாடு ஆவணக் காப்பகம், 1670-ல் உருவாக்கப்பட்டது. நவீன ஆவணக் காப்பக உத்திகளைப் பின்பற்றிய உலகின் பழமையான காப்பகம் இது.
- இந்தியாவின் முதல் வங்கி மெட்ராஸ் பேங்க். இது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1682/3-ல் கவர்னர் கிரிஃபோர்டால் தொடங்கப்பட்டது. முறைப்படியான பங்கு பிரிப்புடன் 1788-ல் தொடங்கப்பட்ட முதல் வங்கி, கர்னாடிக் வங்கி. அதுவே பின்னர் பாரத ஸ்டேட் வங்கியாக உருவெடுத்தது.
- சென்னை மாநகராட்சி 1688-ல் அமைக்கப்பட்டது. அந்த வகையில் உலகிலேயே இரண்டாவது பழமையான நகராட்சி அமைப்பு. அதற்கு முன்னர் லண்டன் மாநகராட்சி மட்டுமே உருவாகியிருந்தது.
18-ம் நூற்றாண்டில்
- இந்திய ராணுவத்தில் உள்ள மிகவும் பழமையான ரெஜிமென்ட், மெட்ராஸ் ரெஜிமென்ட். 1758-ல் உருவாக்கப்பட்ட இதன் தற்போதைய தலைமையகம் குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ளது.
- இந்தியாவின் முதல் வானியல் ஆய்வகம் 1792-ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகம் கொடைக்கானலுக்கு மாற்றப்படும்வரை, இந்த ஆய்வகமே இந்திய ஸ்டாண்டர்டு நேரத்தை நிர்ணயித்து வந்தது. இந்த இடத்தில்தான் தற்போது வானிலை ஆய்வு மையம் இருக்கிறது.
19-ம் நூற்றாண்டில்
- பிரிட்டிஷ் நில அளவையாளர் கர்னல் வில்லியம் லாம்ப்டனால் இந்தியாவின் முதல் நில அளவை 1802-ல் சென்னை பரங்கிமலையில் தொடங்கப்பட்டது. இந்த நிலஅளவையே நவீன இந்திய வரைபடம் உருவாவதற்குக் காரணம்.
- சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை 1819-ல் தொடங்கப்பட்டது. ஆசியாவிலேயே பழமையான கண் மருத்துவமனையான இது, உலகிலேயே இரண்டாவது பழமையான கண் மருத்துவமனையும்கூட.
- தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம் (1856). இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையமும் அதுவே.
- இந்தியாவின் மூன்றாவது பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் (1857).
20-ம் நூற்றாண்டில்
இந்தியாவின் முதல் வானொலி ஒலிபரப்புச் சேவை, சென்னை பிரெசிடென்சி ரேடியோ கிளப்பில் சி.வி. கிருஷ்ண சாமியால் 1924-ல் தொடங்கப்பட்டது. உலகில் வானொலி சேவை தொடங்கி வெறும் நான்கே ஆண்டுகளில், இந்த வசதி உருவாக்கப்பட்டிருந்தது.
ஆதாரம்: வரலாற்று ஆய்வாளர் வி. ஸ்ரீராமின் குறிப்புகள்