மருதன்
சிலர் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் சென்று பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தனக்குப் பிடித்த எல்லாப் புத்தகங்களையும் வாங்கிவிட வேண்டும் என்று சிலர் விரும்பலாம். “அப்படி உங்களுக்கு ஏதேனும் விருப்பம் இருக்கிறதா அலெக்சாண்டர் ஃப்ளெமிங்” என்றால் “ஓ, இருக்கிறதே” என்பார். பிறகு கண்கள் முழுக்கக் கனவுகளோடு விவரிப்பார்: இந்த உலகிலுள்ள எல்லாக் கிருமிகளையும் ஒன்று விடாமல் சேகரித்து எடுத்துவந்து வீடு முழுக்க நிரப்பி வைக்க வேண்டும்!
உங்களுக்கு எப்படிப்பட்ட புத்தகங்கள் பிடிக்கும் ஃப்ளெமிங்? கிருமிகளின் வாழ்க்கை வரலாற்றை விரும்பிப் படிப்பேன். உங்களை ஒரு தீவில் கொண்டுபோய் விட்டால் என்ன செய்வீர்கள்? அங்கே ஏதேனும் நோய்க் கிருமி இருக்கிறதா என்று தேடுவேன். உங்களுக்கு வரையத் தெரியும் என்று சொல்கிறார்கள். என்ன வரைவீர்கள்? விதவிதமான நுண்ணுயிர்களை விதவிதமாக வரைவேன். நீங்கள் இதுவரை அதிகம் யாரோடு மனம் விட்டுப் பேசியிருக்கிறீர்கள்? பாக்டீரியாவிடம்தான்.
‘அடடே, நேற்று பார்த்தபோது காணவில்லை. இப்போது இங்கே ஒளிந்துகொண்டி ருக்கிறாயா?’ என்று உற்சாகமாகவோ, ‘ஏய் குட்டி, அதற்குள் இவ்வளவு வளர்ந்துவிட்டாயா?’ என்று ஆச்சரியமாகவோ, ‘நாளை பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. உன்னைப் பார்க்காமல் எப்படி இருப்பேனோ?’ என்று உணர்ச்சிபூர்வமாகவோ ஃப்ளெமிங் தன் அறையில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றால், அது ஏதோ ஒரு புதிய பாக்டீரியாவோடு என்பதை அறிக.
பொழுது விடிந்தால் போதும், ஒரு கண்ணை மட்டும் திறந்து ஓடோடிச் சென்று உருப்பெருக்கியின் முன்னால் முதுகை வளைத்து, காணாததைக் கண்டதுபோல் ஆவலோடு கிருமியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார் என்றால் மீண்டும் எப்போது நிமிர்வார் என்று ஒருவருக்கும் தெரியாது. பென்சிலின் கண்டுபிடித்து நோபல் எல்லாம் வென்ற பிறகும் இந்த வழக்கத்தை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. என்ன செய்வது, சிறு வயதில் ‘தொற்றிக்கொண்ட பழக்கம்’ என்று புன்னகை செய்வார்.
ஸ்காட்லாந்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு பெரிய பண்ணை வீட்டில் பிறந்து வளர்ந்தவர் ஃப்ளெமிங். அப்போது எங்களிடம் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியாது. எவ்வளவு இருந்தாலும் அதை வைத்து ஒன்றும் வாங்கியிருக்க முடியாது என்று மட்டும் தெரியும். காரணம், கடைகள் என்று பெரிதாக எதுவும் இருக்காது. பொழுதைப் போக்குவதற்கு ஒரு வழிதான் இருந்தது. வேடிக்கை பார்ப்பது. மிகவும் சிறியது என்றாலும் பார்க்கப் பார்க்க விரிந்துகொண்ட போனது என் உலகம்.
“ஒரு வண்டோ பட்டாம்பூச்சியோ மண்புழுவோ என் பக்கம் வந்தால் போதும். அதுவே என்னைவிட்டு அகலும்வரை வியப்போடு பார்த்துக்கொண்டே இருப்பேன். ஒவ்வொரு பறவையையும் துரத்திக்கொண்டு ஓடுவேன். ஆடு, மாடு, ஆந்தை, பன்றி என்று ஒவ்வொன்றையும் தனித்தனியே நாள் முழுக்கக் கவனிப்பேன். ஓக் மரங்களைச் சுற்றிச் சுற்றி வருவேன். இலையிலுள்ள கோடுகளை எண்ணுவேன். ஒவ்வோர் ஓடையையும் பின்தொடர்ந்து சென்று அது எங்கே அருவியாக மாறி விழுகிறது என்று கண்டுபிடிப்பேன். ஈரத்தோடு இருக்கும் பாறையின் மீது அமர்ந்துகொண்டு பாசியைச் சுரண்டியெடுத்து உள்ளங்கையில் பரப்பி உற்றுப் பார்ப்பேன்.”
பெரிய ஊருக்குக் குடிபெயர்ந்து, பெரிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயின்று, ஆவென்று வாய் பிளக்க வைக்கும் பெரிய மதிப்பெண் களைப் பெற்று, ஒரு பெரிய மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஒரு பெரிய மருத்துவராகவும் ஆய்வாளராகவும் ஃப்ளெமிங் மாறிய பிறகும் சின்னஞ்சிறிய கிருமிதான் அவரை இறுதிவரை ஈர்த்துக் கொண்டிருந்தது.
புண்ணிலிருந்தும் குருதியிலிருந்தும் சளியிலிருந்தும் நீங்கள் படிக்கவே அஞ்சும் பல இடங்களிலிருந்தும் கவனமாக நோய்க் கிருமிகளைத் திரட்டியெடுத்து வந்து, தட்டில் பரப்பி, பூனைக்குட்டிக்கோ நாய்க்குட்டிக்கோ செய்வதுபோல் வேளா வேளைக்கு உணவு கொடுத்து, வளர்ந்திருக்கிறதா, வளர்ந்திருக்கிறதா என்று உறங்காமல் கொள்ளாமல் கவனித்து, குறிப்புகள் எடுத்து, ஆராய்ந்துகொண்டே இருந்தார். ‘நான் வளர்க்கும் குட்டி இன்னின்ன குறும்புகள் எல்லாம் செய்கிறது. உன் குட்டி ஒழுங்காக அடங்கி இருக்கிறதா? அது என்னவெல்லாம் செய்கிறது என்று விரிவாக எழுது. நான் அதை விசாரித்ததாகவும் சொல்’ என்று சக ஆய்வாளர்களுக்குக் கடிதம் எழுதி ஒப்பீடுகள் செய்துகொண்டே இருந்தார்.
நோக்கம் ஒன்றுதான். எல்லா நுண்ணுயிர்களும் எல்லாக் கிருமிகளும் மோசமானவையல்ல. தீங்கு விளைவிக்கும் கிருமி எது, அது எந்த நோயோடு ஓர் உடலுக்குள் நுழைகிறது, எப்படி வேக வேகமாகப் பரவுகிறது, எப்படி உடலை முற்றிலுமாகக் கைப்பற்றி வீழ்த்துகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அந்தக் கிருமியின் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆற்றலை உடல் பெற்றிருக்கிறதா, ஆம் எனில் அந்த ஆற்றலை எப்படித் தூண்டிவிட்டு அதிகப்படுத்துவது என்று கண்டுபிடிக்க வேண்டும். இயன்றால் எந்த மனித உடலுக்குள்ளும் நுழைய முடியாதபடிக்குத் தடுப்பூசி மூலம் நோய்க் கிருமிகள் அனைத்தையும் நம்மைவிட்டு ஒதுக்கி வைக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு கிருமியையும், அதன் ஒவ்வோர் இயல்பையும், ஒவ்வோர் அசைவையும் ஃப்ளெமிங் தெரிந்துகொண்டாக வேண்டும்.
“கிருமியே, என் காலம் குறைவானது. நீயோ ஒழிக்க, ஒழிக்க வளர்ந்துகொண்டே போவாய். அடக்க, அடக்கத் திமிறி எழுந்துகொண்டே இருப்பாய். உனக்கு முடிவே இல்லை என்பதை நான் அறிவேன். அதற்காக அதிகம் மகிழாதே! எனக்கு முன்பு லூயி பாஸ்தேர் இதே போராட்டத்தை முன்னெடுத்தார். அவர் விட்ட இடத்திலிருந்து நான் தொடர்கிறேன். எனக்குப் பிறகு இன்னொருவர் வருவார். அவருக்குப் பிறகு இன்னொருவர்.
நீ வளர, வளர உன்னை உற்றுக் கவனிக்க ஆயிரம் கண்கள் வளர்ந்து வரும். நோய் வளர, வளர அறிவியலும் வளரும். கிருமிகள் பல்கிப் பெருகப் பெருக, மருத்துவ ஆய்வாளர்களும் பல்கிப் பெருகுவார்கள். இன்று என் கையில் ஒரு பென்சிலினை ஏந்தியிருக்கிறேன். நாளை ஆயிரம் கரங்களில் ஆயிரம் வடிவங்களில் ஆயிரம் பென்சிலின்கள் தோன்றும். ஒவ்வொன்றும் உன்னை நோக்கிப் பாய்ந்துவரும். ஒவ்வொன்றும் உன்னை வீழ்த்தும்.
எப்போதெல்லாம் உன் பலம் ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் எங்கள் கரங்கள் ஒன்றிணைந்து உன்னை எதிர்க்கும். நீ விதைக்கும் அச்சத்தை, நீ பரப்பும் இருளை, நீ ஏற்படுத்தும் அழிவை எங்கள் அறிவியல் முறியடிக்கும். எங்கள் அறிவைக்கொண்டு, அறிவின் ஒளியைக்கொண்டு, ஒளியின் ஆற்றலைக்கொண்டு ஒவ்வொரு மனிதனையும் நாங்கள் மீட்டெடுப்போம்.”
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago