கீர்த்தி
தேன்மலைக் காடு செழிப்பாக இருந்தது. மான், முயல், நரி, அணில் போன்ற விலங்குகள் அன்போடு பழகி வந்தன. அவற்றில் அண்ணன் தம்பிகளான இரு குரங்குகளும் இருந்தன. அவை இரண்டும் எப்போதும் மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டே இருந்தன.
அண்ணன் குரங்கின் பிறந்தநாள் வந்தது. அதனை அறிந்த அணில், அழகான பூச்செண்டைக் கொடுத்து, வாழ்த்துச் சொன்னது.
“இந்த வாடிப்போன பூக்களை எல்லாம் எங்கே பறித்து வந்தாய்? வேறு நல்ல பூக்கள் கிடைக்கவில்லையா?” என்று கேட்டது அண்ணன். அதைக் கேட்டு அருகில் நின்றிருந்த தம்பி சிரித்தது. அணிலின் முகம் வாடிவிட்டது.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த மான், “அணில் எவ்வளவு அன்போடு உனக்குப் பூச்செண்டு கொடுத்திருக்கிறான். அவனுக்கு நன்றி சொல்வதை விட்டுவிட்டு, இருவரும் அவனைக் கேலி செய்ததில் எந்த நியாயமும் இல்லை” என்றது.
“மானே, இந்தப் பூக்களை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும்? இலைகளாக இருந்தாலாவது உனக்குத் தின்னத் தந்திருப்போம்” என்று தம்பி சொன்னது. அதைக் கேட்டு அண்ணன் சிரித்தது. ‘இவர்களைத் திருத்த முடியாது’ என்று நினைத்த மான், அங்கிருந்து நகர்ந்தது.
மறுநாள் மயில் மகிழ்ச்சியாகத் தோகையை விரித்து ஆடிக்கொண்டிருந்தது.
“என்ன மயிலக்கா, உனக்குத்தான் ஆடவே தெரியவில்லையே. தோகையை விரித்தபடி நீ நடந்து காட்டுவதை நாங்கள் ஆட்டம் என்று ஒப்புக்கொள்ள வேண்டுமா?” என்று கேலி செய்தது தம்பி. அண்ணன் சிரித்தது. மயில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றது.
அப்போது குயிலின் இனிமையான பாடல் கேட்டது. உடனே குயில் பக்கம் திரும்பியது அண்ணன். “குயிலக்கா, ஜலதோஷம் பிடித்திருக்கிறதா உனக்கு? குரல் கர்ணகடூரமாக இருக்கிறதே! ஏதேனும் மருந்து சாப்பிட்டுவிட்டுப் பிறகு பாடலாமே!” என்று கேலி செய்தது.
முயல் கேரட்டுகளை எடுத்துக்கொண்டு வந்தது. அதை வாங்கிச் சாப்பிட்ட குரங்குகள், “இப்படிக் கசக்கிறது. கேரட்டு இனிப்பாகத்தானே இருக்கும். இதுபோன்ற ருசியற்ற கேரட்டுகளை நாங்கள் சாப்பிட்டதே இல்லை. பாகற்காய்க்குச் சிவப்பு வண்ணம் பூசிக்கொண்டு வந்துவிட்டாயா?” என்று கிண்டல் செய்தன. வேகமாக ஓடிவிட்டது முயல்.
காட்டிலுள்ள மற்ற விலங்குகளும் பறவைகளும் குரங்குகளிடம் எவ்வளவோ அறிவுரை சொல்லிப் பார்த்துவிட்டன. ஆனால், குரங்குகள் திருந்தவே இல்லை.
ஒருநாள் மாலை கருமேகங்கள் திரண்டு வந்தன. இன்னும் சற்று நேரத்தில் மழை பெய்யலாம் என்று தோன்றியதால் பறவைகளும் விலங்குகளும் மழைக்கு மறைவான இடத்தை நோக்கிச் சென்றன.
குரங்குகள் மட்டும் எங்கும் செல்லவில்லை. அவை இரண்டும் ஒரு கூடாரம் அமைக்க ஆரம்பித்தன. தென்னை மர ஓலைகளைக் கொண்டு தம்பி பாய்போலப் பின்னியது. அண்ணன் கம்புகளை மண்ணில் நட்டு வைத்தது.
தம்பி பாய் பின்னி முடித்ததும் அதைப் பார்த்த அண்ணன், “இது என்ன பாய் பின்னியிருக்கிறாய்? மழை வந்தால் ஒழுகும்” என்று பாயைக் கிழித்துப் போட்டது.
தம்பிக்குக் கோபம் வந்தது. “நீ மட்டும் என்ன நட்டு வைத்திருக்கிறாய்? லேசாகக் காற்று வீசினால்கூட சாய்ந்து விழுந்து விடுமே!” என்று சொன்னபடி, கம்புகளை உடைத்துப் போட்டது.
பிறகு அண்ணன் பாய் பின்னத் தொடங்கியது. தம்பி கம்புகளை நட்டு வைத்தது. ஆனால், மீண்டும் ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சொல்லி, கலைத்துப் போட்டன.
இருட்டிவிட்டது. கடும் மழை பெய்தது. இரு குரங்குகளுக்கும் எங்கே போவது என்று புரியவில்லை. அங்கும் இங்கும் ஓடின. குளிர் தாங்காமல் நடுங்கத் தொடங்கின. அருகில் எந்த விலங்குகளையும் காணவில்லை. இரண்டும் ஒரு மரத்தடியில் போய்ப் பதுங்கியிருந்தன. ஆனாலும் மழையிலிருந்து தப்பிக்க இயலவில்லை.
இரவு முழுவதும் பெய்த மழை, அதிகாலையில் சற்று ஓய்ந்தது.
இரண்டு குரங்குகளையும் காணாமல் அவற்றின் நண்பர்களான மான், நரி, முயல் போன்றவை தேடி வந்தன. குளிரில் மயங்கிக் கிடந்த குரங்குகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தன.
முயல் காய்ந்த சருகுகளைக் கொண்டு வந்து தீமூட்டியது. அதில் குரங்குகள் இரண்டும் குளிர்காய்ந்தன. மானும் முயலும் உணவு கொடுத்தன. சாப்பிட்ட பிறகு குரங்குகளுக்கு ஓரளவு உடல்நிலை சரியானது.
குரங்குகள் இரண்டும் தலையைக் குனிந்தபடி இருந்தன.
“நண்பர்களே, நீங்கள் இதுவரை யாரையும் பாராட்டியதில்லை. எல்லோரது செயலிலும் குற்றம் கண்டுபிடித்து குறை சொல்லி வந்தீர்கள். உங்களுக்குள்ளேயே குற்றம் சொல்லிக்கொண்டீர்கள். அதனால் துன்பம் அடைந்தது நீங்கள் இருவரும்தானே! இந்த உலகில் குறை இல்லாதவர்கள் யாரும் இல்லை. பிறரைப் பாராட்டுபவர்கள் பிறரது வெற்றியையும் தன் வெற்றியாகக் கொண்டாட முடியும். இனிமேலாவது குற்றம் சொல்லாமல் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்” என்றது மான்.
அன்றோடு அந்தப் பழக்கத்தை கைவிட்டன குரங்குகள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago