மருதன்
என் பெயர் பக். என்னைப் போன்ற குதூகலமான ஓர் உயிரை நீங்கள் எங்கும் பார்த்துவிட முடியாது. மரங்கள் சூழ்ந்த மில்லரின் பெரிய வீட்டில் பிறந்தேன், நான்கு ஆண்டுகள் அவரையே சுற்றிச் சுற்றி வளர்ந்தேன். இந்த வீடுதான் என் உலகம். இந்த வீடுதான் என் விளையாட்டு மைதானம்.
நான் எதைப் போட்டு உடைத்தாலும் எதன் மீது ஏறி நின்றாலும் எதைக் கடித்துக் குதறினாலும் மில்லர், ‘என்ன பக்? இப்படியா செய்வது?’ என்று என் தலையில் ஒரு செல்லத்தட்டு தட்டிவிட்டு, ‘பார் பக் என்னவெல்லாம் செய்திருக்கிறது’ என்று வீட்டிலுள்ள எல்லோரிடமும் என் அட்டகாசங்களை உற்சாகத்தோடு விவரிப்பார். ஒரே ஒரு கடுஞ்சொல்? ஒரு முகச்சுளிப்பு? ம்ஹூம். ஒரு நாய்க்கு இதைவிட வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்?
’அது எப்படி பக், எந்த நேரம் பார்த்தாலும் ‘ஈஈ’ என்று காதைக் கிழித்துக்கொண்டு புன்னகை செய்துகொண்டிருக்கிறாய்’ என்று பக்கத்து வீட்டு புஸுபுஸு ஜப்பான் குட்டி முதல் எப்போதும் விரைப்பாக வளையவரும் எதிர் வீட்டு மெக்ஸிகோ தாத்தா வரை வீதியிலுள்ள எல்லா நாய்களும் என்னிடம் ஏக்கத்தோடு கேட்டுவிட்டன. ‘அன்பைப் பொழியும் மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும்போது இதைவிடவும் அகலமாகச் சிரிக்கலாம்‘ என்று ‘ஈஈஈஈ’ என்று வாயை இன்னும் நன்றாகப் பிளந்து காட்டுவேன்.
ஒரு நாள் நான் கடத்தப்பட்டேன். எப்படி, யாரால் என்று தெரியாது. வழக்கம்போல் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு மிதப்போடு வரவேற்பறையில் படுத்துக்கிடந்தபோது சத்தம் போடாமல் யாரோ வந்து என்னை அப்படியே அமுக்கிப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். மில்லர் என்னை இப்படித் தூக்குவதும் கொஞ்சுவதும் வழக்கம் என்பதால் கண்மூடி அப்படியே கிடந்தேன். சுதாரித்து எழுவதற்கள் என் உலகமும் என் புன்னகையும் என்னைவிட்டு வெகு தொலைவுக்குப் போயிருந்தன.
பாழடைந்த ஓர் அறைக்குள் என்னைத் தூக்கிப்போட்டுவிட்டு கதவைச் சாத்தினார் அந்த மனிதர். இரவெல்லாம் சுருண்டு படுத்துக்கிடந்தேன். சின்னச் சத்தம் கேட்டாலும் திடுக்கிட்டு எழுந்து நின்றேன். என்னை விழுங்கிவிடுவதைப் போல் சூழ்ந்து நின்றது இருள். எத்தனை மணி நேரம் இப்படியே உணர்வற்றுப் படுத்துக்கிடந்தேன் என்று நினைவில்லை.
’ஏய் எழுந்திரு’ என்ற சத்தம். ஒரு துண்டு எலும்பு என்னை நோக்கி வீசப்பட்டது. நான் அசையாமல் படுத்திருந்தேன். ’சாப்பிடுகிறாயா இல்லையா’ என்று கோபத்தோடு கத்தியபடி என்னை அவர் எட்டி உதைத்தார். அழுதேன். வலியல்ல காரணம், அவமானம்.
மில்லரைப் பழி வாங்குவதற்காக அவருக்கு மிகவும் பிடித்த என்னை இவர் கடத்தி வந்திருக்கிறார் என்பதை நான் உணர்வதற்குள் அவரிடமிருந்து கைமாறி இன்னொருவரிடம் நான் வந்து சேர்ந்திருந்தேன். ஒரு பெரிய சவுக்கை எடுத்துவந்து, நன்றாக அதை உருவிவிட்டுவிட்டு என்னைப் பார்த்தார் அந்தப் புதிய மனிதர்.
‘ஓ, நீதான் அந்தத் திமிர் பிடித்த பக்கா? உன்னை எப்படி அடக்குகிறேன் பார்‘ என்று கத்தியபடி சாட்டையை அவர் என்மீது சுழற்றினார். மின்னல் வெட்டியதைப் போல் இருந்தது. அலறியபடி துள்ளிக்குதித்தேன். ஒரு துண்டு சதை தெறித்து என் முன்னால் வந்து விழுந்தது.
மறுநாள் அவர் வீசிய எலும்பைப் பாய்ந்து பற்றிக்கொண்டேன். அவசரமாக உண்டேன். அவர் கடகடவென்று இளித்தார். தினமும் அடி விழுந்துகொண்டே இருந்தது. ‘இந்த நாய் ஒரு பூனையாக மாறும்வரை விடப்போவதில்லை’ என்று தன் நண்பனிடம் சொல்லிச் சிரித்தார்.
ஒரு நாள் என்னை இழுத்துச் சென்று என்னைப் போலவே அச்சத்தில் உறைந்துகிடந்த மற்ற நாய்களோடு சேர்த்துக் கட்டினார். எங்கள் எல்லோருடைய கழுத்திலும் ஒரு கயிறு இப்போது தொங்கிக்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் இணைத்து மற்றொரு முனையில் ஒரு வண்டியைப் பொருத்தினார். ‘ம், ஓடு. தங்கத்தைக் கண்டுபிடிக்கும்வரை ஓடு’ என்று இன்னொரு முறை சாட்டையை வீசினார். நாங்கள் குரைத்தபடியே ஓட ஆரம்பித்தோம். காடு, பனி, ஆறு அனைத்தையும் கடந்து ஓடினோம். ஒரு துண்டு தங்கமும் கிடைத்தபாடில்லை. அவர் சலிப்போடு மீண்டும் எங்களைத் தாக்கினார். விழுந்து புரண்டு மீண்டும் ஓடினோம்.
ஒரு நாள் வனப்பகுதியில் அவர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது, முதல் முதலாக அந்த ஒலியைக் கேட்டேன். எங்கிருந்து வருகிறது, என்ன, ஏது என்று எதுவும் புரியவில்லை என்றாலும், அந்த ஒலி எனக்கு நெருக்கமானது போல் இருந்தது. என் காதுகளையும் கண்களையும் கூர்மையாக்கிக்கொண்டேன். இருளில் மின்னும் கண்களோடு ஓநாய்கள் என்னை நெருங்கி வந்து என் முகத்தை உற்றுப் பார்த்தன. பிறகு மெலிதாக ஒன்றுபோல் குரல் எழுப்பின. என் உடல் சிலிர்த்துக்கொண்டது. என்னை அறியாமல் என் வாய் மெல்ல பிளந்தது. என்னை அறியாமல் என்னிடமிருந்து வெளிவந்தது அந்த ஒலி. ஓநாயின் ஊளை.
அதற்குள் அந்த மனிதர் விழித்தெழிந்து என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘இது நாயல்ல, ஓநாய்’ என்று அவர் முணுமுணுத்தபோது முதல் முறையாக அவர் கண்களில் பயத்தைக் கண்டேன். அந்தப் பயம் என்னை உந்தித் தள்ளியது. நான்கு கால்களையும் அழுத்தமாக நிலத்தில் ஊன்றி எழுந்து நின்றேன்.
நிதானமாக அவர் கண்களை உற்றுப் பார்த்தேன். என் காதுகள் மேல்நோக்கி விரைத்துக்கொண்டன. என் உடலிலுள்ள ரோமம் எல்லாம் அதிரும்படி முழு உடலையும் குலுக்கிவிட்டுக்கொண்டேன். அவர் மெல்ல மெல்ல பின்னுக்கு நகர ஆரம்பித்தார்.
நான் நிதானமாக முன்னுக்கு நகர்ந்தேன். என் உடலிலுள்ள பலம் அனைத்தையும் ஒன்று திரட்டி, வானை நோக்கி என் தலையை உயர்த்தி ஊளையிட்டேன். அவர் பயத்தில் உறைந்து நின்றார். ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்து அவரை நெருங்கினேன். என் மூச்சுக்காற்று அவரைத் தீண்டும் அளவுக்கு நெருங்கிய பிறகு, என் வாயைத் திறந்து கூர்மையான பற்களை வெளியில் காட்டியபடி இன்னொரு முறை ஊளையிட்டேன்.
‘‘கேள், என் பெயர் பக். நான் ஒரு நாய். நான் ஓர் ஓநாயும்கூட. நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நானல்ல, நீயே தீர்மானிக்கிறாய். உலகின் எந்த மூலைக்கு நீ ஓடி ஒளிந்துகொண்டாலும் கானகத்தின் இந்தக் குரல் உன்னைப் பின்தொடரும். மனிதர்கள் அனைவரும் மனிதர்களாக மாறும்வரை கானகத்தின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும்.’
(ஜேக் லண்டன் எழுதிய The Call of the Wild கதையிலிருந்து வெளிப்படும் குரல்).
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago