டைனோசார் விலங்கைப் பார்த்திருக்கிறார்களா? யானையைவிட ரொம்ப உயரமாக இருக்கும். கிட்டத்தட்ட உங்கள் பள்ளிக்கூடக் கட்டிடத்தைவிடப் பெரியதாக இருக்கும் இதன் உருவம். மனிதர்கள் எல்லாம் பிறப்பதற்குச் சில கோடி வருஷங்களுக்கு முன்னாடியே பூமியில் வாழ்ந்த அபூர்வமான விலங்குதான் இந்த டைனோசார்.
அனகோண்டா பாம்பு மாதிரி வளைந்த தலை. ஓணான் மாதிரி முதுகு. நீண்ட வால். சிங்கம், புலிக்கு இருப்பது போல நான்கு கால்கள். முன்புறக் கால்கள் கொஞ்சம் குட்டையாகப் பார்ப்பதற்கு கைகள் போல இருக்கும். நம் வீட்டுச் சுவரில் ஓடும் பல்லி, யானையைவிடப் பெரியதாக வளர்ந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் டைனோசார்.
மனிதர்களே பிறப்பதற்கு முன்பு பூமியில் வாழ்ந்த இந்த விலங்கை யார் கண்டுபிடித்தது தெரியுமா? இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ரிச்சர்டு ஓவன்தான் கண்டுபிடித்தார். விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர் இவர். ஒருமுறை பூமிக்கடியில் கிடைத்த விலங்குகளின் எலும்புகளை வைத்து ஒரு பெரிய மிருகத்தை உருவாக்கினார். நீங்கள் வீடு கட்டி விளையாடுவதுபோல, குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை காண்பது போல எலும்புகளை அங்கும் இங்கும் பொருத்தி ஒரு பெரிய விலங்கை உருவாக்கினார். அப்படி உருவான விலங்கிற்குப் பெயர் வைக்க வேண்டும் இல்லையா? அப்போதுதான் ‘டைனோசரஸ்’என்று பெயர் வைத்தார் ரிச்சர்டு.
ரிச்சர்டு கண்டுபிடித்த பல்லி
சரி, ரிச்சர்டு ஏன் இந்தப் பெயரை வைத்தார்? டைனோஸ் (deinos) என்றால் கிரேக்க மொழியில் பயங்கரமான (terrible) என்று அர்த்தம். சரோஸ் (sauros) என்றால் பல்லி (lizard) என்று அர்த்தம். அதாவது, அவர் உருவாக்கிய அந்த உருவம் பார்ப்பதற்குப் பயங்கரமான பல்லி போல இருந்ததால், ‘டைனோஸ்’ஸையும், ‘சரோஸ்’ஸையும் இணைத்து அந்தப் பெயரை வைத்தார். ஆங்கிலத்தில் ‘டைனோசார்’ என்று ஆனது. ரிச்சர்டு கண்டுபிடித்தற்குப் பிறகும் டைனோசார் குறித்து ஆராய்ச்சிகள் பல நடந்தன.
ஆனால், இந்த விலங்கு எப்படிக் குழந்தைகள் விரும்பும் கதைகளுக்குள் வந்தது? ரிச்சர்டு உருவாக்கிய டைனோசார் விலங்கின் மாபெரும் உருவம் வெளிவந்ததும் உலகமெங்கும் இதைப் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. பெரிய உருவமாக இருக்கிற யானை எப்படி உங்களுக்கெல்லாம் பிடித்திருக்கிறதோ, அதுபோல இந்த டைனோசாரும் எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்துப் போய்விட்டது. அதன் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் ஆர் நைட் என்பவர் முதன்முதலாக டைனோசாரை ஓவியமாக வரைந்தார். இவருக்குச் சின்ன வயதிலிருந்தே விலங்குகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். வங்கப் புலி உட்பட உலகில் உள்ள பெரும்பாலான விலங்குகளை, ஓவியமாக வரைந்துள்ளார். ரிச்சர்டு உருவாக்கிய டைனோசார் உருவம் சார்லஸுக்குப் பிடித்துப்போய், அதை வைத்துதான் டைனோசார் ஓவியத்தை வரைந்தார்.
சினிமாவில் நடித்த டைனோசார்
டைனோசார் ஓவியத்தை வைத்து படக்கதையும் உருவானது. வின்ஸர் மெக்கே டைனோசாரை வைத்துக் குழந்தைகளுக்காக நிறைய நகைச்சுவை கதைகளை உருவாக்கினார். அதன் பிறகு மைக்கேல் கிரைண்டன், ஜூராசிக் பார்க் நாவலை எழுதினார். இந்த நாவலில்தான் டைனோசார்கள் மீண்டும் பிறந்து வருவதுபோல எழுதினார். பிறகு அதுதான் படமாகவும் எடுக்கப்பட்டது. ஆனால், ஜூராசிக் பார்க் படத்தில் டைனோசாரைப் பயங்கரமான, மனிதர்களைக் கொல்லும் வில்லன் போலக் காட்டியிருப்பார்கள்.
உண்மையில் விலங்குகள் மனிதர்களைத் தேடி வந்து கொல்வது கிடையாது. நாம் அதைத் தொந்தரவு செய்தால் அது கோபப்படும். அவ்வளவுதான். விளையாடும்போது யாராவது தொந்தரவு செய்தால் உங்களுக்குக் கோபம் வரும் இல்லையா? அதுபோல கோபப்படும். விலங்குகள் சாப்பாடுக்காக இல்லாமல், வேறு எதற்காகவும் இன்னொரு விலங்கைக் கொல்வது கிடையாது. ஆக, விலங்குகளில் சினிமாவில் வருவது போல வில்லன் எல்லாம் கிடையாது சரியா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago