வி. சாமுவேல்
ஜானுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே சைக்கிள் மீது ஆர்வம் வந்துவிட்டது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளின் சைக்கிள்களை அவ்வப்போது இரவல் வாங்கி, ஓட்டிக் கொண்டிருந்தான். சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்பதுதான் அவனுக்கு ஒரே ஆசை.
சைக்கிள் பற்றி ஏராளமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தான். சைக்கிள் பாகங்கள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி. பத்திரிகைகளில் சைக்கிள் பற்றிய செய்தி வந்தால் உடனே அதை வெட்டி, ஒரு நோட்டில் ஒட்டி வைத்துக்கொள்வான்.
சைக்கிளில் தம்பி பீட்டரைப் பின்னால் வைத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்வதுபோல்தான் அவனுக்குப் பெரும்பாலும் கனவு வரும். ஆனால், ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு அவனுடைய அப்பாவுக்கு வசதி இல்லை. அதனால் தன்னுடைய ஆசையைப் பெரும்பாலும் அவன் வெளிப்படுத்திக்கொள்ளவே மாட்டான். ஆனாலும், அவன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவனின் ஆசை தெரியாமல் இல்லை. வாங்கிக் கொடுக்கத்தான் முடியவில்லை.
வேலையை முடித்து விட்டு இரவு பத்து மணிக்கு வந்தார் அப்பா.
“ஏன் இவ்வளவு நேரம்?”
“கடைசி பஸ்ஸை விட்டுட்டேன். அதனால் நடந்து வர்றதுக்கு இவ்வளவு நேரமாயிருச்சு. ஜானும் பீட்டரும் எங்கே?”
“காலையிலும் நீங்க போற நேரத்துக்கு பஸ் வர மாட்டேங்குது. ராத்திரியும் இப்படின்னா என்ன ஆகறது? முதலில் ஒரு சைக்கிள் வாங்கி, வேலைக்குப் போயிட்டு வாங்க” என்றார் அம்மா.
”ஜானுக்கு ஒரு சைக்கிள் வாங்கவே என்னால முடியலை. எனக்கு வாங்கச் சொல்றீயா?” என்றபடி அறைக்குள் நுழைந்தார் அப்பா. ஜான் கடிதம் எழுதிக்கொண்டிருந்தான்.
“என்ன ஜான், இந்த வருஷமும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குக் கடிதம் எழுத ஆரம்பிச்சிட்டீயா? அப்படி என்னதான் ஒவ்வொரு வருஷமும் எழுதறே?”
“அது கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் எனக்கும் மட்டுமான விஷயம். நீங்க பார்க்கக் கூடாது. வேலைக்குப் போகும்போது இதை போஸ்ட் பண்ணிடுங்கப்பா” என்றவன் தொடர்ந்து எழுத ஆரம்பித்தான்.
கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் இரவு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு அனுப்பி வைப்பார் என்று ஜானும் பீட்டரும் காத்திருந்தனர். வழக்கம்போல் அவர்கள் எதிர்பார்த்த சைக்கிள் பரிசாக வரவில்லை. சாக்லெட்களும் சில புத்தகங்களும் பரிசாக வந்திருந்தன. ஜானுக்கு ஏமாற்றமாக இருந்தது.
இதுக்கெல்லாம் வருத்தப்படக் கூடாது ஜான். நம்மளவிடக் கஷ்டப்படறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு அந்த உதவி கிடைத்தால் நல்லதுதானே?” என்றார் அப்பா.
நீங்க சொல்வதும் சரிதான். எனக்கு வருத்தமெல்லாம் இல்லை. புகழ்பெற்ற சைக்கிள் கம்பெனி ஒரு போட்டி அறிவிச்சிருக்கு. நான் அதில் கலந்துக்கப் போறேன். கிறிஸ்துமஸுக்கு மறுநாள் டவுனுக்குக் கூட்டிட்டுப் போறீங் களா?” என்று கேட்டான் ஜான்.
“அடடா! அதைவிட எனக்கு வேற என்ன வேலை? கண்டிப்பா போகலாம். எல்லோரும் தயாராகுங்க, நள்ளிரவு பிரார்த்தனைக்கு நேரமாயிருச்சு” என்றார் அப்பா.
வியாழக்கிழமை ஜானும் அவன் அப்பாவும் டவுனுக்குச் சென்றார்கள். சைக்கிள் தொடர்பான இரு மதிப்பெண் கேள்விகள் 25, 5 மதிப்பெண்கள் 5 கொடுக்கப்பட்டிருந்தன. 2 மணி நேரம் தேர்வு நடத்தப்பட்டது. ஏற்கெனவே சைக்கிள் தொடர்பான விஷயங்களை அறிந்து வைத்திருந்ததால் ஜானுக்கு வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஒன்றரை மணி நேரத்திலேயே எழுதி முடித்துவிட்டான். மகிழ்ச்சியாக வெளியே வந்தான்.
“இந்தப் போட்டிக்கான பரிசு என்ன, ஜான்?”
“ஜெயிக்கிற ஒருவரை இந்த கம்பெனியின் தலைமை இடமான ஜெர்மனிக்கு அழைச்சிட்டுப் போவாங்கப்பா. பரிசு கிடைக்கு மான்னு தெரியலை, போட்டியில் கலந்துகிட்டதே சந்தோஷமா இருக்குப்பா” என்றான் ஜான்.
“அதுதான் நல்லது. பஸ் ஏற்றி விடறேன். வீட்டுக்குப் போயிரு. நான் வேலைக்குப் போகணும்” என்று ஜானை மட்டும் அனுப்பி வைத்தார் அப்பா.
ஜனவரி முதல் நாள். காலையில் எழுந்து ஜானும் பீட்டரும் வெளியே வந்தனர். வாசலில் பளபளவென்று ஓர் அழகான சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. கனவா, நனவா என்று ஜான் தன்னை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டான். நிஜம்தான்.
“அப்பா, அம்மா... எப்படி இந்த சைக்கிள்?”
“ம்... கிறிஸ்துமஸ் தாத்தாதான் பரிசா அனுப்பியிருப்பார்” என்று சிரித்தார் அப்பா.
“சைக்கிள் கேட்டுதான் மூணு வருஷமா கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குக் கடிதம் எழுதிட்டி ருந்தேன். என்னோட கோரிக்கையை நிறைவேற்றி வச்சிட்டார்” என்று துள்ளிக் குதித்தான் ஜான்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
“அப்பா, இந்தப் புத்தாண்டுப் பரிசை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். நானும் பீட்டரும் ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றோம். இனி பள்ளிக்கும் சைக்கிளிலேயே ரெண்டு பேரும் போயிடறோம்” என்று சொல்லிவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான் ஜான்.
“என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க? உங்களுக்குதான் ஒரு சைக்கிள் வாங்கச் சொன்னேன். நீங்கதான் பஸ் இல்லாமல் நடந்து வர்றீங்க” என்று வருத்தப்பட்டார் அம்மா.
“இவனும் எத்தனை வருஷமா கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குக் கடிதம் எழுதிட்டு இருக்கான்! குழந்தைகளோட இந்த மகிழ்ச்சிக்கு முன்னால என்னோட கஷ்டம் எல்லாம் மாயமாயிருச்சு” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, ஜானும் பீட்டரும் திரும்பி வந்தனர்.
அப்போது ஒரு டெம்போ வண்டி வாசலில் வந்து நின்றது. ஜானின் வீடா என்று ஒருவர் விசாரித்தார். மிகப் பெரிய சைக்கிள் ஒன்றை இறக்கினார்.
“யாருங்க? எதுக்கு இந்த சைக்கிள்?” என்று கேட்டார் அப்பா.
“சைக்கிள் கம்பெனி நடத்திய போட்டியில் தம்பிக்குதான் இரண்டாம் பரிசு. அதான் இந்த சைக்கிள்” என்றார் வந்தவர்.
“குழந்தைதானே போட்டியில் கலந்துகிட்டான், பெரியவங்க சைக்கிளைக் கொடுக்கறீங்களே?”
“சார், தம்பிக்கு எந்த சைக்கிள் வேணும்னு கேட்டோம். அவன்தான் பெரியவங்க சைக்கிளைத் தேர்ந்தெடுத்தான். நான் வரேன். வாழ்த்துகள் ஜான்” என்றபடி விடைபெற்றார் அவர்.
“ஏண்டா, இப்படிப் பண்ணினே?”
“நான் இந்த வருஷம் சைக்கிள் கேட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குக் கடிதம் எழுதியதும் உங்களுக்காகத்தான்” என்ற ஜானைக் கட்டி அணைத்துக்கொண்டார் அப்பா.
“நல்ல அப்பா, நல்ல மகன். நீ அப்பாவுக்காக சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கே! அவர் கிறிஸ்துமஸ் தாத்தா பெயரில் உனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கார்!” என்றார் அம்மா.
ஜான் திகைத்து நின்றான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago