ஒரு நாள் பாதிரியார் ஒருவர் லியோ டால்ஸ்டாயை நாடி வந்தார். "நீண்டகாலமாக நான் உங்களை வாசித்து வருகிறேன். நீங்கள் எழுதும் ஒவ்வொரு சொல்லிலும் இயேசு கிறிஸ்துவைத் தரிசிக்கிறேன். உங்களைவிட உன்னதமான கிறிஸ்தவர் ஒருவர் இருந்துவிட முடியாது. மகிழ்ச்சி. அதே நேரம் ஒரு சின்ன மனக்குறையும் உண்டு. உங்களை இதுவரை ஒருநாள்கூட நான் தேவாலயத்தில் கண்டதில்லையே ஏன்?”
”ஏனென்றால் நான் கடவுளை நம்புவதில்லை” என்றார் டால்ஸ்டாய். பாதிரியார் திகைத்தார். ஆனால், நீங்கள் கிறிஸ்துவைப் பெயர் சொல்லியே அழைத்து எழுதியிருக்கிறீர்களே. நான் ஒரு கிறிஸ்தவன் என்றல்லவா நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள்? பிறகு எப்படி நீங்கள் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்க முடியும்?”
”இதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமானால் ஒரு குட்டி சொற்பொழிவையே நிகழ்த்த வேண்டியிருக்கும் பரவாயில்லையா?” என்று புன்னகை செய்தபடி விளக்கத் தொடங்கினார் டால்ஸ்டாய்.
”பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் நான் உங்கள் தேவாலயத்துக்கு வந்தேன். பரிசுத்தமான அந்தப் பளிங்கு கட்டிடம் எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. அங்கே நான் கண்ட தேவ குமாரன் எனக்கு அந்நியமானவராகத் தோன்றினார். அவர் உதடுகள் அழுத்தமாக மூடிக்கிடந்தன. என்னால் அவரை நெருங்கிச் செல்ல முடியவில்லை என்பதோடு அவராலும் என்னை நெருங்கிவர இயலவில்லை. ஒரு வகையான இறுக்கத்தை அங்கே என்னால் உணர முடிந்தது. அந்த இறுக்கம் மெல்ல மெல்லப் பரவி தேவ குமாரனின் முகத்தை அடைந்து அங்கேயே உறைந்து நின்றுவிட்டதை உணர்ந்தேன்.
இந்தத் தேவ குமாரன் நான் படித்த கிறிஸ்து அல்ல என்று ஏனோ எனக்குத் தோன்றியது. அவரால் எப்படி இறுக்கமான, பரிசுத்தமான, அமைதியான இடத்தில் அடைபட்டுக் கிடக்க முடியும்? அவர் வனாந்திரத்திலும் பள்ளம் மேடுகளிலும் அலைந்து திரிந்தவர் அல்லவா? நம் உள்ளேயும் நமக்கு வெளியிலும் பரவிக்கிடக்கும் அழுக்கைச் சுத்தம் செய்த அவர் கரங்கள் எப்படிப் பளிங்கு போல் சுத்தமாக இருக்க முடியும்?
என் கிறிஸ்து ஒரு மனித குமாரன். தினம் தினம் சாலையில் கடந்து செல்லும் சாமானிய மனிதரைப் போன்றவர் அவர். எந்தப் பளபளப்புகளும் அவர் மீது ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. பிரகாசமான ஒளி எதுவும் அவர் தலைக்குப் பின்னாலிருந்து புறப்பட்டு வரவில்லை. தூய வெள்ளை அங்கி எதுவும் அணிந்திருக்கவில்லை அவர். இன்ன நிறம் என்று சொல்ல முடியாத, கசங்கிய ஆடை ஒன்றைத் தன்னுடலின் மீது எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார். அவர் என்னை நெருங்கி வந்து நேரடியாகப் பேசுகிறார். அவர் சொற்கள் எனக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன.
எனவே அவர் எனக்கு நெருக்கமானவர். அவர் என் தோழர். கிறிஸ்துவின் தோழராக வாழ்வது எளிதல்ல. குறை சொல்லாமல் முள் கிரீடத்தை வாங்கி அணிந்துகொள்ளும் வலு கொண்டவரே அவருடைய தோழராக இருக்க முடியும். தன் அங்கியைக் கழற்றி முகமறியாதவருக்கு அளித்துவிட்டு, குளிரில் நடுங்கியபடி வீட்டுக்கு நடந்து செல்பவரால்தான் அவர் தோழராக இருக்க முடியும். பாவி என்று உலகமே தூற்றுபவரை ஒரு மனிதனாக மட்டும் காணும் கண்களைக் கொண்டிருப்பவரே அவர் தோழராக இருக்க முடியும். உங்களை நோக்கி வெறுப்பை உமிழ்பவரை அமர வைத்து கோப்பை நிறைய, நுரை ததும்பத் ததும்ப அன்பை நிரப்பிக் கொடுப்பவரே அவர் தோழராக இருக்க முடியும்.
எனவே அவர் ஒரு தேவ குமாரனாக மாற்றப்பட்டிருக்கிறார். இது ஒரு சுலபமான ஏற்பாடு. ஒரு மனிதனை கடவுளாக மாற்றுவதில் உள்ள மிகப் பெரும் வசதி அவரை இனிமேல் நீங்கள் வழிபட்டால் மட்டும் போதும் என்பதுதான். ஒரு கடவுளைத் திருக்கோயிலுக்குள் உங்களால் பத்திரப்படுத்திவிட முடியும். அவர் சொற்களை ஓர் ஏட்டுக்குள் புதைத்து அதைப் புனித நூலாக அறிவித்துவிடவும் முடியும்.
கௌதமர் என்றொரு மனிதர் இருந்தார். செயலால் மட்டுமல்ல சிந்தனையாலும் ஓர் உயிரையும் வதைக்காதீர்கள். வேறுபாடின்றி ஒட்டுமொத்த உலகையும் அள்ளி அணைத்துக்கொள்ளுங்கள் என்றார் அவர். எளிய செய்திதான். ஆனால், அதன் கனம் அதிகம் என்பதால் கௌதமரை நாம் புத்தராக மாற்றிவிட்டோம். அவருடைய அன்பும் அகிம்சையும் புனித உபதேசங்களாகச் சுருங்கிவிட்டன.
அந்த உபதேசங்களை மீண்டும் சொற்களாக மாற்ற வேண்டியிருக்கிறது. அதற்குத் தேவ குமாரனை மனித குமாரனாக மாற்ற வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் நான் எழுதுகிறேன். இது அனைவருக்கும் சாத்தியமா என்று நீங்கள் கேட்பீர்கள். இந்தியாவிலிருந்து காந்தி எனக்கு எழுதிய ஒரு கடிதத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
‘அன்புள்ள டால்ஸ்டாய், உங்கள் வழியில் நானும் என் ராமனை ஒரு மனித குமாரனாக மாற்றியிருக்கிறேன். அவனுடைய இன்னொரு பெயர் ரஹீம். அவன் புத்தரின் நீட்சி. கோயில் கோயிலாக அல்ல, வீதி வீதியாகத் திரிந்து அவனை நான் கண்டடைந்திருக்கிறேன். எனக்கு அவன் அளித்த ஒரே சொல், அகிம்சை. வன்முறையும் வெறுப்பும் எங்கெல்லாம் செழித்திருக்கிறதோ அங்கெல்லாம் அகிம்சையை நான் நிரப்பிக்கொண்டிருக்கிறேன். எங்களை அடிமைப்படுத்தியிருக்கும் பிரிட்டனை இதே அகிம்சையைக் கொண்டு வென்றெடுக்க முடியும் என்று நம்புகிறேன்.’
காந்தி நிச்சயம் வெல்வார். எதிரி என்றொருவரை அன்பு உருவாக்குவதே இல்லை என்பதால் அது வெல்ல முடியாததாக இருக்கிறது. புத்தரிடமிருந்து நீண்டுவந்திருக்கும் கரம் அது. அதைத்தான் கிறிஸ்து பற்றிக்கொண்டார். அதே கரத்தை ரஷ்யாவிலிருந்து நானும் இந்தியாவிலிருந்து காந்தியும் பற்றிக்கொண்டு நிற்கிறோம். நான் ஒரு பௌத்தன் என்றால் காந்தியும் ஒரு பௌத்தர். நான் கிறிஸ்தவன் என்றால் காந்தியும் கிறிஸ்தவர். அவருடைய ராம் ரஹீமாகவும் இருப்பதால் நாங்கள் இருவருமே இஸ்லாமியர்களாகவும் இருக்கிறோம்.
நம்மை நோக்கி நீளும் கரம் ஒன்றுதான் என்பதால் அதைப் பற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரும் ஒன்று என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என் எழுத்து. அதுதான் என் வாழ்க்கை. அதுதான் என் உயிர் மூச்சு.”
- மருதன், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago