நிலக்கரியை எப்படி உருவாக்குகிறார்கள்? எத்தனை நாட்களில் உருவாக்குகிறார்கள், டிங்கு?
- செ. மகதி, 5-ம் வகுப்பு, இந்து தொடக்கப் பள்ளி, வடக்கு அழகு நாட்சியாபுரம், தென்காசி.
நிலக்கரி என்பது இயற்கையாகக் கிடைப்பது. அதை யாரும் உருவாக்கவில்லை, மகதி. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அடர்ந்த காடுகளும் சதுப்பு நிலங்களும் இருந்தன. இயற்கைப் பேரிடரில் இந்தக் காடுகள் நிலத்துக்குள் புதைந்துவிட்டன.
மீண்டும் காடுகள் தோன்றுவதும் புதைவதும் தொடர்ந்துகொண்டே இருந்தன. காலப்போக்கில் இந்தப் புதையுண்ட தாவரங்கள் புதைப் படிவங்களாக மாறின. இந்தப் புதைப் படிவங்களைத்தான் நிலக்கரி என்கிறோம். நிலக்கரியில் கார்பன் அதிகமாக இருக்கிறது. இதனால் முக்கிய எரிபொருளாக நிலக்கரி பயன்படுகிறது.
கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் யார், டிங்கு?
- வி. பொன்தர்ஷினி, 11-ம் வகுப்பு, கமலாவதி மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம்.
நேரத்தை அளவிடுவதற்குச் சூரிய கடிகாரம், நீர் கடிகாரம் எல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்தன. கி.பி.1510-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் ஹென்கின் நேரத்தைக் காட்டும் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பிறகு 1656-ம் ஆண்டு டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் ஊசல் (பெண்டுலம்) கடிகாரத்தை உருவாக்கினார். இவர்தான் ஒருநாளைக்கு 24 மணி நேரம், ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிடங்கள், ஒரு நிமிடத்துக்கு 60 நொடிகள் என்று பிரித்தார். தொடர்ந்து பல முன்னேற்றங்களையும் செய்தார். இன்றைய கடிகாரங்களுக்கு முன்னோடி ஹியூஜென்ஸ் உருவாக்கிய கடிகாரங்கள்தான், பொன்தர்ஷினி.
ஜோதிடம் உண்மையா? உனக்கு நம்பிக்கை இருக்கிறதா, டிங்கு?
- ர. பரணிதா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.
- ச. ரேகா ஸ்ரீ, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.
என் நண்பர் ஒருவர் நன்றாகப் படிக்கக் கூடியவர். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம். அவரது ராசிக்கு அன்று தேர்வில் கவனம் தேவை என்று இருந்தது. உடனே பதற்றமாகிவிட்டார். வினாத்தாள் என்னவோ எளிதாகத்தான் இருந்தது. ஆனால், பதற்றத்தில் அவரால் ஒழுங்காக எழுத முடியவில்லை. அவரைவிடச் சுமாராகப் படிப்பவர்கள் எல்லாம் அந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிவிட்டார்கள்! ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
அதனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை, பரணிதா. மனிதர்களின் எதிர்காலம் குறித்து ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது, ராசியின் அடிப்படையில் கோள்களின் இயக்கத்தை வைத்து அவரவர் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாளை என்ன நடக்கும் என்று தெரியாதவரைதான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் சவால் களை, படிப்பா லும் அனுபவத்தாலும் நாம் எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறோம் என்பதில்தான் நம் திறமையே இருக்கிறது, ரேகா ஸ்ரீ.
தெர்மகோல் எதில் செய்யப்படுகிறது, டிங்கு?
- அ. பிரியதர்சினி, 8-ம் வகுப்பு, சேது லட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.
பாலிஸ்டைரீன் (Polystyrene) என்ற ஒரு வகை பிளாஸ்டிக்கால் ஆனது தெர்மகோல். இது மெதுவாகவே மட்கும் இயல்புடையது. Expanded Polystyrene மூலம் செய்யப்படும் தெர்மகோல் மறுசுழற்சி செய்து பயன்படுத்தக் கூடியது. ஆனால், அது பெருமளவில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, பிரியதர்சினி.
கொசுக்களுக்கு மனிதரைப் போன்று உறுப்புகள் இருக்கின்றனவா, டிங்கு?
- ஜாஸியா, 5-ம் வகுப்பு, நியூ கிரஸண்ட் பள்ளி, புளியங்குடி.
மனிதரைப் போன்று உறுப்புகள் இருந்தால், அதுக்குப் பெயர் கொசு அல்ல, மனிதர். கொசு பூச்சி இனத்தைச் சேர்ந்தது. தலை, மார்பு, வயிறு, 2 கூட்டுக்கண்கள், ஆண்டெனாக்கள், 3 ஜோடி கால்கள், 2 இறக்கைகள், உறிஞ்சுகுழல் என ஏராளமான உறுப்புகள் கொசுவுக்கு இருக்கின்றன, ஜாஸியா.
நாம் விதைகளை மண்ணில் விதைக்கிறோம். அது எப்படிப் பழத்துக்குள் வருகிறது, டிங்கு?
- பா. குணசுந்தரி, 8-ம் வகுப்பு, அருங்குளம், திருவள்ளூர்.
நாம் விதைக்கும் விதைகள் பழங்களுக்குள் வந்து உட்கார்ந்துவிடுவதில்லை, குணசுந்தரி. நாம் விதைக்கும் ஒரு விதையிலிருந்து செடி உருவாகி, அது வளர்ந்து மரமாகி, பூக்கிறது. இந்தப் பூக்களில் மகரந்தச் சேர்க்கை மூலம் இனப்பெருக்கம் நடைபெற்று, விதை உண்டாகிறது.
இந்த விதையைச் சுற்றிக் கனி உருவாகிறது. இந்தக் கனியிலிருந்து விதை வெளியே வந்து மீண்டும் விதைக்கப்பட்டு, புதிய செடி உருவாகிறது. இப்படி ஒரு விதையிலிருந்து நூற்றுக் கணக்கான புதிய செடிகள் உருவாகின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago