ஜிம்மியும் மின்னியும் வீட்டில் தனியாக இருந்தன.
“ஜிம்மி வர்றியா… ஏதாவது சாப்பிடலாம்!’’ வீட்டைக் காவல் காத்துக்கொண்டிருந்த நாயை நான்காவது முறையாக அழைத்தது பூனை.
“ஐயோ நான் டயட்டில இருக்கேன். ஐயா, உனக்கு இங்க சாப்பாடு வச்சிட்டுப் போயிருக்கார், போய்ச் சாப்பிடு” என்றது ஜிம்மி.
“அடப்போப்பா! பாலும் தயிரும் சாப்பிட்டு சலிப்பா இருக்கு… இன்னிக்கி ஐயா சாப்பிடற மீன் வறுவலை ஒரு பிடிபிடிக்கப் போறேன்…’’ நாக்கைச் சப்புக்கொட்டியபடி சொன்னது மின்னி.
“அடப்பாவி! வேணாம்... நாக்கால ஒரு நல்ல மனுசனோட அன்பை இழந்துடாத… அப்புறம் உன்னால எனக்கும் கெட்ட பேர் வந்துடும்” என்ற ஜிம்மியை எச்சரித்தது மின்னி.
“பயப்படாத நண்பா... நான் சாப்பிட்ட சுவடே தெரியாது. நீ வேணா பாரேன், இன்னிக்கு சமைச்சோமா இல்லையான்னு அவரே குழம்பிடுவார்… எப்படி என் திட்டம்?’’
“ம்… ஹும் நல்லா இல்ல…”
“ஆனா, மீன் வறுவல் நல்லா இருக்குமே” என்றபடி பாத்திரத்தைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தது மின்னி.
“அடடா, என்ன ருசி… என்ன ருசி! நீயும் ஒண்ணு சாப்பிடேன்...’’
“வேணாம்ப்பா... நான் வரலை இந்த விளையாட்டுக்கு” என்றபடி வாசல் பக்கம் சென்று தன் இடத்தில் நின்றுகொண்டது ஜிம்மி.
மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்த மூர்த்தி, மேஜையில் பாத்திரம் காலியாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
ஜிம்மியையும் மின்னியையும் அழைத்தார்.
“இங்க இருந்த மீன் வறுவல் எங்கே?’’
ஜிம்மியும் மின்னியும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டன.
சொல்லிவிடாதே என்பது போல ஜிம்மியைப் பார்த்து, கண்களால் கெஞ்சியது மின்னி.
தான் நாள் முழுக்க வாசலில் காவலுக்கு இருந்ததால், தனக்கு எதுவும் தெரியாது என்று நண்பனுக்காகப் பொய் சொன்னது ஜிம்மி.
“எலிகளை வேட்டையாடுறதுல நான் ரொம்ப பிஸி, எனக்கு எப்படித் தெரியும்?” மின்னியும் தன் பங்குக்குக் கூறியது.
யோசித்தார் மூர்த்தி. “வேற யாராவது வந்தாங்களா?’’ என்று கேட்டார்.
“யாரும் வரலியே!’’ இரண்டும் ஒரே குரலில் பதில் அளித்தன.
“அப்படின்னா உங்க ரெண்டு பேர்ல யாரோதான் இந்த வேலையச் செய்திருக்கணும். உண்மை தெரியற வரைக்கும் யாருக்கும் சாப்பாடு கிடையாது.’’ - கோபத்துடன் சென்றுவிட்டார் மூர்த்தி.
வயிறு முட்ட மீனைச் சாப்பிட்ட மின்னி நன்றாகத் தூங்கியது.
“ஐயோ… பசி வயித்தைக் கிள்ளுதே… தப்பு செஞ்சிட்டு எப்படித் தூங்கறான் இந்த மின்னி…” தன் நிலையை எண்ணி வருந்தியது ஜிம்மி.
நள்ளிரவு…
திருடன் ஒருவன் வீட்டுக்குள் நுழைந்தான். உடனே உஷாரான ஜிம்மி, தன் சக்தியை எல்லாம் திரட்டிக் குலைத்தது. திருடன் தப்பிக்காமல் பார்த்துக்கொண்டது.
மூர்த்தி எழுந்துவர, சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் ஓடிவர, பிடிபட்டான் திருடன். அவனைக் காவலர்களிடம் ஒப்படைத்தார் மூர்த்தி. மகிழ்ச்சியில் ஜிம்மியைத் தூக்கிக்கொண்டார். பால், பிஸ்கெட் கொடுத்தார்.
மூர்த்தியின் அன்பைத் திரும்பப் பெற்றுவிட்ட திருப்தியில் சாப்பிட ஆரம்பித்தது ஜிம்மி.
மின்னிக்கு ஒரே பொறாமை. இரவு முழுவதும் யோசித்தது. விடிந்தவுடன் மூர்த்தியிடம் ஓடி வந்தது.
“திருடனைப் பிடிச்ச ஜிம்மியைப் பாராட்டினீங்களே… உங்க மர அலமாரில ஓட்டை போட்டு, உங்க சொத்துப் பத்திரங்களைச் சாப்பிட ஆரம்பிச்ச எலிகளை நான் வேட்டையாடிய விஷயம் தெரியுமா? அது பெரிய சாதனை இல்லையா?’’ என்று ஜிம்மியைப் பார்த்தபடி கேட்டது மின்னி.
அலமாரியைத் திறந்தார் மூர்த்தி. அங்கே பிளாஸ்டிக் பை மட்டும் லேசாகக் கிழிந்திருந்தது. பத்திரங்கள் பத்திரமாக இருந்தன.
“அடடா! பிரமாதம் மின்னி. நீங்க ரெண்டு பேருமே எனக்குப் பெரிய உதவி செஞ்சிருக்கீங்க!’’
அடுத்த நொடி, அவர் மடி மீது தாவி அமர்ந்தது மின்னி.
“ஜிம்மியோட என்னை ஒப்பிடாதீங்க… நான் உங்க சொத்தையே காப்பாத்திருக்கேன். ஜிம்மியால ஒரு மீன் வறுவலைக்கூட காப்பாத்த முடியல…” என்று கிண்டலாகச் சொன்னது மின்னி.
‘அடப்பாவி’ என்பது போல பார்த்தது ஜிம்மி.
“நீங்க ரெண்டு பேருமே நல்ல காரியம்தான் செஞ்சிருக்கீங்க! உங்களுக்கு இன்னிக்கு ஸ்பெஷல் சாப்பாடு சரியா! உங்க இடத்துல போய் உட்காருங்க…” என்றபடி உள்ளே சென்றார் மூர்த்தி.
ஜிம்மியும் மின்னியும் ஆவலோடு அமர்ந்திருந்தன. ஜிம்மியின் தட்டில் எலும்பு சூப். மின்னியின் தட்டில் மீன் வறுவல்.
“வாவ்...சூப்பர்!” என்றபடி சந்தோசமாகச் சாப்பிட ஆரம்பித்தது ஜிம்மி.
“ஐயோ… மீன் வறுவல் நல்லாவே இல்ல” என்று முகத்தைச் சுளித்தது மின்னி.
“நீ எப்பவும் சாப்பிடற மீன் வறுவல்தானே மின்னி…”
“நேத்து வெச்ச மீன் வறுவல் எவ்ளோ நல்லா இருந்துச்சி தெரியுமா? இன்னிக்குச் சகிக்கல!” என்று வாய் உளறி உண்மையைச் சொல்லிவிட்டது.
‘அடப் பாவி… இப்படி மாட்டிக்கிட்டானே தன்னால…’ அதிர்ச்சியில் ஜிம்மிக்குப் புரையேறிவிட்டது.
“மாட்டிக்கிட்டியா? எனக்கு உன் மேலதான் சந்தேகமா இருந்துச்சு… தப்பு செஞ்சதும் இல்லாம, ஜிம்மியை வேற மாட்டி விடறீயா?’’ கோபத்துடன் பார்த்தார் மூர்த்தி.
“என்னை மன்னிச்சிடுங்க. இனி நான் திருட்டுத்தனமா எடுக்க மாட்டேன். பொய் சொல்ல மாட்டேன்” என்று தலை குனிந்தது மின்னி.
“தெரியாம பண்ணிட்டான்… இந்த ஒருமுறை இவனை மன்னிச்சிடுங்க” என்று மின்னிக்காகப் பரிந்து பேசியது ஜிம்மி.
மூர்த்தியும் மன்னித்தார்.
ஜிம்மியை நன்றியோடு பார்த்தது மின்னி.
‘’பொய் சொல்றது, ஏமாத்துறது, மத்தவங்கள மாட்டி விடறது எல்லாம் மனுசங்க புத்தி. இதெல்லாம் நமக்கெதுக்கு நண்பா?” என்றபடி மின்னியை அணைத்துக்கொண்டது ஜிம்மி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago