கதை: புத்திசாலி சின்னு!

By செய்திப்பிரிவு

கன்னிக்கோவில் இராஜா

“இங்க யாருக்கும் பொறுப்பே இல்ல. நான்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டி இருக்கு” என்று புலம்பிக்கொண்டே தென்னை மரத்தில் ஏறியது குரங்குக்குட்டி சின்னு. தன்னால் ஆன உதவிகளைச் செய்ய நினைக்கும். தான் செய்கிற செயல்கள் எல்லாம் காட்டின் நன்மைக்குத்தான் என நினைத்துக்கொள்ளும்.

ஒரு மரத்தின் மீது கொடி படர்ந்து சென்றால், அந்தக் கொடியால் மரத்துக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படும். உடனே அந்தக் கொடியை வேரோடு பறித்து வீசிவிடும். அதேபோல் மரத்தில் இருக்கும் இலைகள் பழுத்துக் கீழே விழுந்து சருகாகக் காயும். அதைக் குப்பையாக நினைத்துச் சுத்தம் செய்துவிடும். இப்படித் தன்னையும் அறியாமல் பல தவறுகளைச் செய்துவிடும்.

அந்தச் சின்னுவுக்கு ஒரு வழிகாட்டி இருந்தது. அதுதான் மகி தாத்தா. அந்தக் குரங்குக் கூட்டத்திலேயே வயதான குரங்கு. அதிக அனுபவங்கள் இருந்தது. அதனால் பலருக்கும் நன்மை கிடைத்தது. சின்னு தன் செயல்களை எல்லாம் மகி தாத்தாவிடம் பகிர்ந்துகொள்ளும். “சின்னு, இதை அப்படிச் செய்திருக்கக் கூடாது. இப்படிச் செய்திருந்தால் இன்னும் நன்மை கிடைத்திருக்குமே” என்று திருத்தம் சொல்லும் மகி தாத்தா. சரி என்று கேட்டுக்கொள்ளும் சின்னு.

“எப்போதும் ஒரு செயலை செய்வதற்கு முன்னால் நன்றாக யோசனை செய். நீ யோசனை செய்யறதை உன் பெற்றோரிடமோ அல்லது என்னிடமோ சொல். அதில் ஏதாவது தவறு இருந்தால் அதை அப்போதே சரி செய்துவிடலாம்” என்றது மகி தாத்தா. “ஆமாம் தாத்தா. நீங்க சொல்வது சரிதான். இனி நான் அப்படியே செய்கிறேன்” என்று சொல்லும் சின்னு, அதைச் செயல்படுத்தாது. இதனால் பலமுறை தவறு நடந்துவிடும்.

இப்போதும் அப்படித்தான். அந்தப் பெரிய காட்டில், ஒரு சிறிய பகுதியில்தான் சின்னு வசிக்கிறது. அது வசிக்கும் மரத்துக்குக் கீழே புதர்கள் மண்டிக்கிடந்தன. அந்தப் புதர்களால் தான் வசிக்கும் மரத்துக்கு ஆபத்து என்று நினைத்தது சின்னு. அதனைச் சுத்தம் செய்யத்தான் இப்போது தென்னை மரத்தில் ஏறி இருக்கிறது.

தென்னை மரத்தில் இருந்து ஓலையைப் பறிந்துவந்து, குச்சிகளைக் கொண்டு ஒரு துடைப்பம் செய்வதும், அதன் மட்டையைக் கத்திப்போலப் பயன்படுத்துவதும்தான் சின்னுவின் திட்டம். இந்தத் திட்டத்துக்காகச் சின்னுவைப் பாராட்டலாம். ஆனால், அது செய்யப் போகும் செயலுக்கு எப்படிப் பாராட்டுவது?
நீண்ட தென்னை மட்டையை உலுக்கியது. அது முறிந்து கீழே விழுந்தது. அதே வேகத்தில் சரசரவென கீழே இறங்கியது சின்னு. தன்னுடைய விரல்களால் அழகான ஓலையைக் கிழித்து குச்சிகளைச் சேகரித்து, துடைப்பமாக மாற்றியது.

“அப்பாடா! ஒரு வேலை முடிந்தது. உடனே அந்தப் புதர்களை இந்தத் துடைப்பத்தாலும், இந்த மட்டையாலும் சரிசெய்துவிட வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே, புதர்களில் மண்டிக் கிடந்த செடிகளையும் கொடிகளையும் பிய்த்து எறியத் தொடங்கியது. “சின்னு இரு. என்ன செய்யறே? அந்தச் செடி, கொடிகளைப் பறிக்காதே” என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்தது மகி தாத்தா.

சின்னு திரும்பிப் பார்த்தது. “தாத்தா, எதற்காக என் வேலையை நிறுத்தச் சொல்றீங்க?” என்று கேட்டது.
“நீ இங்கே என்னச் செய்யப் போற?” “இந்தப் புதர்களை அழித்து, இந்த இடத்தைச் சுத்தம் செய்து தூய்மையாக்கப் போறேன். அப்பதானே இந்த மரத்துக்கு எந்தத் தொல்லையும் ஏற்படாது” என்றது சின்னு.

“ஒரு செயலைச் செய்வதற்கு முன்னால், யாரிடமாவது கலந்து ஆலோசனை செய் என்று உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன்?” என்று கோபமாக கேட்டது மகி தாத்தா. “இப்ப என்ன தாத்தா தவறு செய்துவிட்டேன்? இந்தப் புதர்களை அகற்றினால் இடம் தூய்மையாக ஆகிவிடுமே?”
“நீ செய்ய நினைக்கிறது நல்ல செயல்தான். ஆனால், நீ நினைப்பது போலப் புதர்களால் அந்த மரங்களுக்கு ஆபத்து இல்லை. நன்மைதான்.”

“என்னது புதர்களால் மரங்களுக்கு நன்மையா? புரியலையே தாத்தா” என்றது சின்னு. “உனக்குப் புரியும்படியே சொல்றேன். இந்தப் புதர்கள் எதுக்கும் உபயோகம் இல்லை, இதனால் மரத்துக்கு ஆபத்து என்று நீ அழிக்க நினைத்தாய்.” “ஆமாம் தாத்தா.”

“ஆனால், இந்தப் புதர்களுக்குள்தான் பூச்சிகளும் வண்டுகளும் சிறிய பறவைகளும் விலங்குகளும் வாழ்கின்றன. ஒரு சில பறவைகள் தரைக்கு அருகில்தான் கூடுகளைக் கட்டுகின்றன. அவை தமக்கு ஆபத்து என்று நினைக்கும்போது இந்தப் புதர்களுக்குள்தான் ஒளிந்துகொள்கின்றன. இந்தப் புதர் இப்போது இல்லை என்றால் அவை வேறு பகுதிகளுக்குச் சென்றுவிடும். அப்படிச் சென்றுவிட்டால் மரத்துக்கும் அதற்கும் இருந்த தொடர்பு அறுந்து போகும்” என்றது மகி தாத்தா. “மரங்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளுமே தாத்தா?”

“இங்கே எல்லா உயிரினங்களும் ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டிருப்பவை. பறவைகள்தான் மரங்களின் நண்பர்கள். அவை மரக்கிளைகளின் மீது அமர்வது ஓய்வெடுக்க மட்டுமே இல்லை. அப்படிக் கிளைகளில் அமரும்போது கிளைகளையும், அடி மரத்தையும் கோதி விடுகின்றன. பறவைகளின் குஞ்சுகளுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிறையாது.

அதனால் அதிகமான பூச்சிகளைத் தாய்ப்பறவை இதுபோன்ற மரங்களின் இலைகளில் இருந்துதான் சேகரிக்கின்றன. அதன் மூலம் மரம் காப்பாற்றப்படுகிறது.”
“தாத்தா, இந்தப் புதர்களுக்குள் இவ்வளவு செய்திகள் அடங்கி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நல்லவேளை நான் புதர்களை அழிப்பதற்கு முன்னாடியே நீங்க வந்துட்டீங்க. இல்லை என்றால் எவ்வளவு பெரிய தவறாகி இருக்கும்?” என்று பெருமூச்சுவிட்டது சின்னு.

“மறுபடியும் சொல்றேன், நீ பெரியவர்களிடம் யோசனை கேட்பது தவறில்லையே?” என்றது மகி தாத்தா.
“தாத்தா இதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டேன். இனி எதையும் கலந்து ஆலோசிக்காமல் செய்ய மாட்டேன். இது உறுதி” என்றது சின்னு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்