‘‘வள்ளுவனே, என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்? இறைவனின் எல்லாத் திருநாமங்களையும் திகட்டத் திகட்டப் பாடிவிட்டோம். இயற்கை எழில் அனைத்தையும் கலைநயத்தோடு படம் பிடித்துவிட்டோம். மனிதனுக்குத் தேவையான எல்லா நெறிகளும் விரிவாகத் தொகுக்கப்பட்டன. எழுதப்பட வேண்டிய அனைத்தும் எழுதப்பட்டாகிவிட்டது. நீ புதிதாக எழுதுவதற்கு என்ன பாக்கியிருக்கிறது?”
ஒன்று மட்டும் என்றேன் நிதானமான குரலில். நீங்கள் இதுவரை பாடாத இறைவன் ஒருவர் இருக்கிறார். நீங்கள் இதுவரை காணாத எழிலை நான் கண்டடைந்து இருக்கிறேன். நீங்கள் இதுவரை வகுக்காத நெறி ஒன்று இருக்கிறது. அதைப் பதிவு செய்வது என் கடமை. ஒரே ஒரு சுவடி. அத்துடன் என் பணி நிறைவடைந்துவிடும்.
புலவர் பெருமக்களே, உங்கள் புலமையோடு போட்டியிடும் விருப்பம் எனக்கில்லை. எண்ணற்ற சுவடிகளை நீங்கள் கற்றும் எழுதியும் முடித்திருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாததே இல்லை என்னும் அளவுக்கு மலைக்க வைக்கும் தகவல் களஞ்சியமாக நீங்கள் திகழ்கிறீர்கள். மயக்கும் பக்திப் பாடல்களை மலை அளவு நீங்கள் இயற்றி இருப்பதும் உண்மை. ஆனால், எவ்வளவு தேடியும் உங்கள் படைப்புகள் எதிலும் நான் காணாத ஒன்று உள்ளது. அறம்.
அறம் இல்லை என்றால், அறிவு அதன் ஆதாரத் தன்மையை இழந்துவிடுகிறது. எத்தனை உன்னதமான சுவடியாக இருந்தாலும் அந்தச் சுவடி மதிப்பிழந்து போகிறது. எவ்வளவு இனிமையானதாக இருந்தாலும் உங்கள் பாடல் உயிர் அற்றதாக மாறுகிறது. எவ்வளவுதான் இன்பமயமாக இருந்தாலும் உங்கள் வாழ்க்கை அர்த்தம் அற்றதாக மாறுகிறது. எவ்வளவு உருகினாலும், எத்தனை கசிந்தாலும் உங்கள் தொழுகை இறைவனைத் தொடுவதில்லை. எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் உங்கள் நட்பு, நம்பிக்கை அற்றதாக மாறுகிறது. இலக்கிய நயத்தோடு இருந்தாலும் உங்கள் சொற்கள் பொய்க்கின்றன. உங்கள் தமிழ் மரித்துப் போகிறது.
அறத்தை நீங்கள் தொலைக்கும்போது வெறுப்பு உங்கள் நெஞ்சில் படர்கிறது. அந்த வெறுப்பு ஆபத்தான விலங்கிடம் உங்களை ஒப்படைத்துவிடுகிறது. அந்த விலங்கு உங்கள் பார்வையில் உள்ள ஒளியை விழுங்குகிறது. உங்கள் கண்களுக்கு இனியும் ஒரு மனிதன் சக மனிதனாகத் தெரிவதில்லை. அவன் சைவனாகத் தெரிகிறான். அல்லது வைணவனாக. அல்லது பவுத்தனாக. அல்லது சமணனாக. அல்லது வேறேதேனும் ஒன்றாக. இறைவனும்கூட இறைவனாக உங்களுக்குத் தெரிவதில்லை. அவன் சைவனாகவும் வைணவனாகவும் பவுத்தனாகவும் சமணனாகவும் மட்டுமே உங்களுக்கு வெளிப்படுகிறான்.
அறம் இல்லாததால் பூஞ்சோலைகள் பல இருந்தும் ஞாலம் பாலைவனமாகச் சுருங்கிக் கிடக்கிறது. அற்புதமான மனிதர்கள் அருகருகில் இருந்தும் தனித்தனித் தீவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். வீதி எங்கும் வழிபாட்டுத் தலங்கள் முளைத்த பிறகும் அன்பு கைகூடுவதில்லை. கல்விக்கூடங்கள் இருந்தும் கசடுகள் நீங்குவதில்லை. வலுவான அரசு இருந்தும் நல்லாட்சி கிடைப்பதில்லை. கோடி போர் வீரர்கள் இருந்தும் அமைதி மறுக்கப்படுகிறது. செல்வம் இருந்தும் வறுமை நீங்கவில்லை. நீதிமன்றம் இருந்தும் நீதி கிடைப்பதில்லை.
அறம். நமக்குத் துன்பம் நேரும் ஒவ்வொரு முறையும் அதன் கரங்கள்தான் நம்மைத் தாவிவந்து அணைத்துக்கொள்கின்றன. அதுதான் நம் ஆதார பலம். அதுதான் நம் இதயமாகவும் மூளையாகவும் ஒரே நேரத்தில் திகழ்கிறது. அதுதான் நம் இருப்புக்கு அர்த்தத்தைச் சேர்க்கிறது. அதுதான் மனிதனின் அடிப்படை அலகாக இருக்கிறது.
’அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’. இப்படித்தான் என் சுவடியைத் தொடங்கி இருக்கிறேன். எழுத்தின் தொடக்கம் அகரம் என்றால் மனிதனின் தொடக்கம் அறம். மனிதன் அறத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறான். அறத்தால் உயர்த்தப்படுகிறான். அறத்தால் செழுமைப் படுத்தப்படுகிறான். அறமே அவனை அனைத்து விதங்களிலும் நிறைவு செய்கிறது.
அறத்தைப் பாடுவதற்காகவே நான் எழுதுகிறேன். அறம்தான் என் தமிழின் உயிராகவும் மெய்யாகவும் உயிர்மெய்யாகவும் இருக்கிறது. அறம்தான் எனது சுவடி. அறம்தான் எழுத்தாணி. அறம்தான் என் குறள். அதுவேதான் என் குரலும்கூட.
அந்தக் குரல் பேதமின்றி, சமயம் கடந்து, சாதி கடந்து அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே என் மனிதனைப் பெயரற்றவனாக, சமயமற்றவனாக, சாதியற்றவனாகப் படைத்திருக்கிறேன். அந்த ஒரு காரணத்துக்காகவே என் கடவுளும் பெயரற்றவராக, உருவமற்றவராக, சமயச் சார்பற்றவராக, சாதியற்றவராக இருக்கிறார்.
அவருக்கு ஒரு பெயரை இட்டுத்தான் தீர வேண்டும் என்று வற்புறுத்தினால், அறம் என்றே அழைத்துக்கொள்ளுங்கள் என்பேன். அந்தப் பெயரைக் கொண்டு அவரை நீங்கள் அழைக்கும்போது உங்கள் குரலிலுள்ள கனிவு அவரை அசைக்கிறது. உங்கள் தொழுகை ஏற்கப்படுகிறது.
அறத்தின் மெய்ப்பொருளை உணர்ந்து அதை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்ளும்போது, உங்கள் அன்பு பல்கிப் பெருகுகிறது. ஊற்றுபோல் அளவற்ற கருணை உங்களுக்குள் சுரக்கிறது. சக மனிதனின் துயரத்தில் நீங்களும் பங்கேற்கிறீர்கள். நியாயத்தின் பக்கம் துணிவோடு நிற்கிறீர்கள். அனைத்து உயிர்களையும் வணங்கி, மதிக்கிறீர்கள். அறம் உங்கள் கல்வியின் கசடுகளை நீக்குகிறது. உங்கள் இதயத்தை அகலப்படுத்துகிறது.
அதை உங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்கும்போது, எழில் உங்களைச் சுற்றிப் படர்கிறது. அந்த எழிலைக் கண்டு அஞ்சி மாசுகள் விலகி ஓடுகின்றன.
மனத்தூய்மையே அறம். செயலால் மட்டுமல்ல, சிந்தனையாலும் ஒருவரையும் காயப்படுத்தாமல், ஒருவரையும் வெறுக்காமல், ஒருவரையும் இழிவாகப் பார்க்காமல் இருப்பது அறம். அளவற்ற அன்போடு முழு உலகையும் தழுவிக்கொள்வது அறம். மனிதர்களை மனிதர்களாக ஏற்பது அறம்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற.
- மருதன், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago