மலையாள மூலம் - கிரேஸி, தமிழில்: உதயசங்கர்
அடி முதல் நுனிவரை கசக்கிற மரமாக இருந்தது அந்த மரம். பூக்கவோ காய்க்கவோ இல்லை. அதனால் வருத்தத்தில் இருந்தது. ஒரு கிளிகூட அந்த மரத்தின் கிளைகளில் ஓய்வெடுத்ததில்லை. தாம் இப்படிப் பாழாகிவிட்டோமே என்று நீண்ட பெருமூச்சுவிட்டது. கூட்டத்திலிருந்து தப்பி வந்த ஒரு கிளிக்கு அந்த மரத்தின் வருத்தம் புரிந்தது.
“நீ எதற்காக இவ்வளவு வருந்துகிறாய்?“
மரத்திடம் இதுவரை யாரும் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டதில்லை. மகிழ்ச்சியால் மரத்தின் கண்கள் மின்னின.
“நான் கசப்பு மரம். எப்படி இப்படியானேன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வழியாகப் பறந்து போகிற கிளிகள் யாரும் என்னைத் திரும்பிப் பார்ப்பதில்லை. எல்லா மரங்களையும் தழுவிச் செல்லும் காற்றுகூட என்னை மறந்து விட்டுப்போவதுதான் வழக்கம்.”
கிளி நேராகப் பறந்து சென்று ஒரு கிளையில் உட்கார்ந்தது. மரம் மகிழ்ச்சியடைந்தது. அது கிளியிடம், “ஆஹா! ஒரு கிளியின் தொடுகை எவ்வளவு சுகம் என்று எனக்கு இப்போதுதான் புரிந்தது. நன்றி நண்பா” என்றது. “இனிமேல் நாம் சிறந்த நண்பர்களாக இருப்போம். நான் உன்னுடைய கிளையில் தங்கியிருந்து உனக்காகப் பாடுவேன்.”
மரத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. “நீ வடக்கே இருந்து தானே வருகிறாய்? உன்னுடைய நாட்டில் குளிர்காலம் கழிந்த பிறகு நீ உன்னுடைய கூட்டத்திடம் திரும்பிப் போய்விடுவாய் இல்லையா?”
“எனக்கு யாருமில்லை. அதனால் உன்னோடு தங்கி இருப்பதில் ஒரு பிரச்சினையுமில்லை.” மரத்தின் தொண்டை தழுதழுத்தது.
“ஒத்தையில் இருப்பதின் துயரம் எனக்குத்தான் தெரியும். நீ திரும்பிப் போகத்தான் வேண்டும். அதுவரை இங்கே தங்கியிருந்து பாடு.” கிளி கண்களை மூடிக்கொண்டு தியானித்தது. பின்னர் மிக இனிய குரலில் கசப்பு மரத்துக்காகப் பாடத் தொடங்கியது. அத்தனை இனிய இசையை அந்தக் காடு அதுவரை கேட்டதில்லை. மற்ற மரங்களிலிருந்து சளசளத்துக்கொண்டிருந்த பறவைகள் எல்லாம் சட்டென்று அமைதியாகிவிட்டன. அந்த வழியாகச் சென்ற பறவைகளும் அருகில் இருந்த மரங்களில் அமர்ந்து கேட்டன.
பாட்டு முடிந்தபோது மரம் சொன்னது, “என்னுடைய ஆன்மாவில் துளி இனிமை கலந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஒருவேளை உன்னுடைய பாட்டைக் கேட்டு என் கசப்பு எல்லாம் போய்விடும் என்று தோன்றுகிறது.”ஆனந்த கண்ணீரோடு கிளி, “அப்படி நடந்தால் நான்தான் அதிகம் மகிழ்ச்சி அடைவேன்” என்றது.
கிளி இடையிடையில் எங்கேயோ பறந்து சென்று இரை தேடிவிட்டு, வேகமாக அந்தக் கிளைக்குத் திரும்பிவந்தது. புதிய புதிய பாடல்களை மரத்துக்காகப் பாடியது. அதைக் கேட்டு கேட்டு மரத்தின் கசப்பு மறைந்தது. ஓர் அதிகாலையில் மரம் பூத்தது. அது ஆனந்தத்துடன் கூவியது, “ஆஹா! என்னுடைய கிளைகளில் எல்லாம் பூக்கள் பூத்திருக்கின்றன!”
சோர்ந்து போய் மரக்கிளையில் உட்கார்ந்திருந்த கிளியிடம் மரம் சொன்னது, “பிரியமுள்ள நண்பா, இந்தப் பூக்கள் அத்தனையும் உனக்குத்தான்.” திடுக்கிட்டு விழித்த கிளியின் கண்களில் பூக்களின் நிறம் தெரிந்தது. மெல்லிய குரலில், “எனக்கு மிகவும் மகிழ்ச்சி! மகிழ்ச்சி!” என்றது.
“நண்பா, உன்னுடைய சத்தம் மிகவும் பலகீனமாகிவிட்டதே. கண்டிப்பாக ஏதோ ஒரு துயரம் உன்னை வாட்டுகிறது. நீ என்னுடைய கசப்பை மாற்றியதற்காக நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். இனிமேலாவது நீ உன்னுடைய கூட்டத்துக்குத் திரும்பிப் போ.”
கிளி எதுவும் பேசாமல் சிறகுகளை மடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அப்போது ஆரவாரத்துடன் ஒரு கிளிக்கூட்டம் வடக்கு நோக்கிப் பறந்து போவதை மரம் பார்த்தது. “பாரு, உன்னுடைய கூட்டமெல்லாம் வடக்கு நோக்கிப் பறக்கிறாங்க. போ… நீயும் அவர்களோடு சேர்ந்துகொள்.” “அது முதல் கூட்டம். இன்னும் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.”
பூக்களில் உள்ள தேனை எடுக்க வந்த தேனீக்களின் கூட்டத்தின் ரீங்காரத்துக்கு இடையில் இரண்டாவது கிளிக்கூட்டம் வடக்கு நோக்கிப் பறக்கிற சத்தத்தை மரம் கேட்டது. அது பரிதவிப்புடன் சொன்னது, “நண்பா, இதோ இரண்டாவது கூட்டமும் பறந்து போகிறதே, நீ வேகமாக அவர்கள் பின்னால் போ.”
கிளி அமைதியாகத் தன்னுடைய கூட்டாளிகள் பறந்து செல்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தது. அதன் மனதில் என்ன இருக்கிறது என்று மரத்தால் அறிய முடியவில்லை. அது கண்ணீரோடு, “நீ என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறாய். இனியும் நீ இங்கேயிருந்து போகவில்லை என்றால் இந்தக் காடு முழுவதும் என்னைக் குற்றம் சொல்லும். என்னுடைய சுயநலத்துக்காக நான் உன்னை இங்கே நிறுத்தி இருக்கிறேன் என்று சொல்வார்கள். இந்தப் பூக்கள் எல்லாம் முதிர்ந்து காய்களாகும். பின்னர் அவை பழுக்கும். அவற்றை எல்லாம் சாப்பிட ஏராளமான பறவைகள் வந்துசேரும். ஆனால், உனக்காக என்னுடைய கிளையில் ஒரு பழத்தை எப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்” என்று சொன்னது.
அப்போது மூன்றாவது கிளிக்கூட்டம் பறந்து செல்கிற சத்தம் மரத்தின் காதுகளில் வந்து மோதியது.“ஒருவேளை இதுவே கடைசிக் கூட்டமாக இருக்கலாம். பிரியமுள்ள நண்பா, வேகமாகப் போ.” அப்போதும் கிளி அசையாமல் இருப்பதைப் பார்த்து விசும்பி அழுதது மரம்.
“மற்றவர்களுக்காக வாழ்வதில் உள்ள மகிழ்ச்சியை நீதானே எனக்குச் சொல்லித் தந்தாய். என்னுடைய சங்கடத்தினால் இந்தப் பூக்கள் எல்லாம் உதிர்ந்துவிடும். அப்போது எப்படி என்னால் பறவைக்கூட்டத்துக்கு உணவு கொடுக்க முடியும்?”
கிளி மரக்கிளையில் உருகி நின்றது. பிறகு சிறகுகளை மெல்ல விரித்தது. கிளம்புவதற்கு முன்னால் மரத்தை ஒரு தடவை சுற்றிவந்தது. பலகீனமாக இருந்தாலும் இனிமையான குரலில் மரத்துக்கு விடைகொடுத்து மறைந்து போனது. மரத்தில் காய்கள் எல்லாம் முதிர்ந்து பழுத்துவிட்டன. மற்ற எந்தப் பழத்திலும் இல்லாத இனிமைகொண்ட பழங்களைச் சாப்பிட எங்கெங்கோ இருந்தெல்லாம் பறவைகள் வந்தன. மரம் மகிழ்ச்சியோடு கிளைகளைத் தாழ்த்தி வரவேற்றது. ஆனாலும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு பழத்தைத் தன்னுடைய இதயத்துடன் சேர்த்துப் பாதுகாத்து வைத்திருந்தது.
ஆனால், அந்த பாட்டுக்காரக்கிளி பின்னர் ஒருபோதும் வரவேயில்லை. அதை நினைத்து வருந்திய மரத்திடம் மற்ற பறவைகள், “அந்தக் கிளி கண்டிப்பாக வேறு ஏதாவது மரத்தின் கசப்பை மாற்றப் போயிருக்கும். நீ கவலைப்படாதே” என்று சொல்லிச் சென்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago