ஒரு காட்டில் கோழி ஒன்று வாழ்ந்துவந்தது. அதன் பெயர் சிவி. எல்லோரிடமும் நட்பாகப் பழகியது சிவி. அது எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். சிவி, தினமும் காலையில் சீக்கிரமாக எழுந்து உணவு தேடச் சென்றுவிடும். சாப்பிடுவதற்குப் பூச்சிகளைத் தேடிப் பிடிக்கும். அதன்பிறகு வீட்டைச் சுத்தம்செய்து, சமைத்துச் சாப்பிடும். மதியம் குட்டித் தூக்கம் போடும். சாயங்காலம் வெளியே நண்பர்களுடன் விளையாடிவிட்டு இரவு வீட்டுக்கு வந்துவிடும். மொத்தத்தில், சிவி அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தது.
சிவி வாழ்ந்துவரும் அதே காட்டு காலனியில் ஒரு சோம்பேறி நரியும் தன் அம்மாவுடன் வாழ்ந்து வந்தது. அதோட பெயர் மிசாக்கி. மிசாக்கி தனக்குத் தேவையான இரையைக் வேட்டையாடி சாப்பிடச் சலித்துக்கொள்ளும். கண்ணில் எந்த விலங்கு முதலில் படுகிறதோ, அதைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடும். இப்படியே சோம்பேறியாக வாழ்ந்து நாட்களைக் கழித்து வந்தது மிசாக்கி.
ஒரு நாள் மிசாக்கி வீட்டில் சாப்பிட ஒன்றுமே இல்லை. மிசாக்கி வெளியே சென்று இரையைத் தேடவும் விரும்பலை. கஷ்டப்பட்டு இரையைத் தேடிப் பிடிக்காமல் எப்படிச் சாப்பிடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தது. உடனே, அதற்குச் சிவியின் ஞாபகம் வந்தது.
“சரி, இன்னைக்கு இரவு சிவியைச் சாப்பிட்டுவிட வேண்டியதுதான்” என மிசாக்கி தனக்குள் சொல்லிக்கொண்டது.
அந்தக் காட்டு காலனியில் வாழ்ந்த விலங்குகளிடம் ஒரு வழக்கம் இருந்தது. அது என்ன வழக்கம் என்றால், கடுமையாகப் பசித்தாலும், சொந்தக் காலனிக்குள் வாழும் விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்பதுதான் அது. மற்ற காலனிகளில் வாழும் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடலாம். இந்த வழக்கத்தை எல்லாக் காலனிகளும் தவறாமல் பின்பற்றின. அதனால் காட்டில் அமைதியும் நிலவியது. ஆனால், மிசாக்கி இந்த விதியை மீறிச் சிவியை வேட்டையாட நினைத்தது.
“நான் இன்னைக்கு இரவு சாப்பிடச் சிவியைப் பிடிச்சிட்டு வரேன். நீ பானையில் தண்ணீரைக் கொதிக்க வை” என்று தன் அம்மாவிடம் சொல்லியது மிசாக்கி. மிசாக்கியின் அம்மாவுக்கு இப்படிச் செய்வது பிடிக்காவிட்டாலும், வயதாகிவிட்டதால் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தது.
சிவியைப் பிடிப்பதற்காக மிசாக்கி சிவியின் வீட்டுக்கு வந்தது. அப்போது சமைப்பதற்காக விறகுகளை எடுக்கச் சிவி வீட்டிலிருந்து வெளியே வந்தது. இந்த நேரத்தில் மிசாக்கி வீட்டுக்குள் சென்று கதவின் பின்னால் ஒளிந்துகொண்டது. விறகுகளை எடுத்துக்கொண்டு சிவி உள்ளே வந்தவுடன், அது சிவியைக் கவ்வி பிடித்தது. சிவி அலறியபடி கீழே விழுந்தது. உடனே தான் கொண்டு வந்திருந்த கோணியில் அதைப் போட்டுக்கொண்டது. கோணியைக் கட்டி தோளில் மாட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டது மிசாக்கி.
மிசாக்கி கடித்து கவ்வி பிடித்தாலும் சிவி சாகவில்லை. உயிருடன்தான் இருந்தது. ஆனால், அது மிசாக்கிக்குத் தெரியவில்லை. கோணியில் கிடந்த சிவி கண் விழித்துப் பார்த்தது. மிசாக்கி வேகவேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தது. கொஞ்சம் களைப்பாக இருந்ததால் மிசாக்கி கோணியைக் கீழே வைத்துவிட்டுக் கொஞ்சம் ஓய்வு எடுத்தது. அந்த நேரத்தில் தான் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்துக் கோணியில் ஒட்டைப் போட்டுத் தப்பித்து வெளியே வந்துவிட்டது சிவி. மிசாக்கிக்குச் சந்தேகம் வராமல் இருப்பதற்காகக் கோணியில் பெரிய கல்லையும் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.
அது தெரியாமல் மிசாக்கி வீட்டுக்கு மகிழ்ச்சியாக வந்தது. “தண்ணீ சூடாயிருச்சா?” என்று கேட்டபடியே சமையலறைக்குள் வந்தது.
“ரொம்ப பசியா இருக்கு. சீக்கிரம் சமைத்துச் சாப்பிட்டுவிடலாம்” என்று தன் அம்மாவிடம் மிசாக்கி சொன்னது.
“தண்ணீ நல்லா கொதிச்சிருச்சி” என்றது தாய் நரி.
மிசாக்கி கோணியைத் திறந்து என்ன இருக்கிறது என்றுகூடப் பார்க்கவில்லை. கொதிக்கும் தண்ணீரில் அப்படியே கோணியைக் கவிழ்த்தது. கோணியிலிருந்து பெரிய கல் பானைக்குள் ‘தொப்பென்று’ விழுந்தது. நன்றாகக் கொதித்த தண்ணீர் மிசாக்கி மீதும் அதன் அம்மா மீதும் அப்படியே தெறித்தது.
இரண்டுக்கும் ஏற்பட்டது காயம். வலி தாங்க முடியாமல் இரண்டும் அலறின.
“சோம்பேறியா இருக்குறது மட்டுமல்லாமல், நம்மளோட வழக்கத்தையும் கடைபிடிக்காததுக்கு நல்ல தண்டனை கிடைச்சிபோச்சு” என்று மிசாக்கியைத் திட்டியது அதன் அம்மா.
இனி இப்படிச் சோம்பேறியாக இருந்து உடம்பைப் புண்ணாக்கிக்கொள்ள மாட்டேன் என்று வலியோடு உறுதி எடுத்துக்கொண்டது மிசாக்கி.
அன்று முதல் மிசாக்கியின் தொல்லை இல்லாமல் சிவி நிம்மதியாக வாழ்ந்தது.
ஓவியம்: ராஜே
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago