அந்தப் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு ‘பி’ பிரிவில் சுமார் 50 மாணவர்கள் இருந்தனர். மாடசாமியும் அந்த வகுப்புதான். அவன் எப்போதுமே கடைசி ரேங்க் வாங்கும் மாணவன். எல்லாப் பாடங்களிலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுதான் பாஸ் ஆவான். சமயங்களில் ஒன்றிரண்டு பாடங்களில் பெயில் ஆகவும் செய்வான்.
மாடசாமியின் அப்பா ஒரு விவசாயி. தனது பையனை எப்படியாவது படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் இந்தப் பள்ளியில் அவனைச் சேர்த்திருந்தார். அவனும் கஷ்டப்பட்டுத்தான் படிக்கிறான். இருந்தாலும் சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது. படிப்பு சரியாக வராவிட்டாலும் மாடசாமி காலையும் மாலையும் அப்பாவுக்கு உதவி செய்ய வயலுக்குப் போவான். அவனுடன் கூடப்படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் அவனை ‘மக்கு’ மாடசாமி என்றே அழைத்தனர். அவன் அடிக்கடி பெயில் ஆகிவிடுவதால் அப்படிக் கேலிசெய்து மகிழ்வார்கள். மாடசாமியும் அவர்கள் இப்படிக் கேலி செய்வது குறித்து வருத்தப்பட்டதில்லை. தான் உண்மையிலேயே ஒரு மக்குதான் என்ற எண்ணம் அவனுக்கே ஆழமாகப் பதிந்துவிட்டது.
தான் எதற்குமே லாயக்கில்லாதவன் என்று நினைத்துக்கொள்வான். தற்கொலை செய்துகொள்வோமா என்றுகூட அவன் நினைத்தது உண்டு. இருந்தாலும் அப்பாவை நினைத்து அப்படியெல்லாம் செய்யத் துணிந்தது இல்லை. விரைவில் பள்ளிக்கூடத்தை விட்டுப் போய்விட வேண்டியதுதான் என்று உறுதி செய்துகொண்டான்.
அவனது வகுப்பு ஆசிரியை நித்யாவுக்கு மாடசாமி மேல் அனுதாபம் உண்டு. அவன் மேல் ரொம்பவும் அக்கறை காட்டுவார். சிரத்தை எடுத்துப் படிக்கச் சொல்வார். “மாடசாமி... இரவுல வீட்டுப்பாடமெல்லாம் படிக்கிறியா ?” என்று அவ்வப்போது அன்போடு கேட்பார்.
மாடசாமி, “வீட்டுல வேலை இருந்தது டீச்சர்” என்று சொல்வான்.
பிள்ளைகள் சிரிப்பார்கள். ஆனாலும், ஆசிரியை அவன் மேல் கோபம் கொள்ள மாட்டார். மற்ற மாணவர்களெல்லாம் அவனை ‘மக்கு’ மாடசாமி என்று அழைப்பதைப் பற்றியும், மாடசாமிக்கு vஇருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் பற்றியும் ஆசிரியர் நன்றாக அறிந்திருந்தார்.
ஒரு நாள், வகுப்பு தொடங்கும் முன்பாக வகுப்பு ஆசிரியை நித்யா, மாடசாமியை அழைத்தார். “வயலில் வேலை செய்வது பற்றி இன்று மாடசாமி நம்மோடு பேசப்போகிறான். எல்லோரும் கேளுங்க” என்று சொல்லிவிட்டு, அவனைப் பேசச் சொன்னார்.
முதலில் மாடசாமி தயங்கினாலும், பின்னர் உற்சாகமாய் எழுந்து பேச ஆரம்பித்தான்.
வயலில் உழுவதில் ஆரம்பித்து, நாற்று நடுவுவது, தண்ணீர் பாய்ச்சுவது, நாற்று முளைத்தவுடன் அதைப் பிடுங்கி நடுவது, களை பறிப்பது, அதன் பிறகு 40 நாட்கள் வயலில் எப்போதும் தண்ணீர் இருக்கும்படி பார்த்துக்கொள்வது, அறுப்பு முடிந்து களத்து மேட்டில் நெல்லைக் குவிப்பது, பின்னர் நெல்லை அரவை மில்லில் அரைத்து அரிசியாய் ஆக்குவது வரை கதை போலச் சொன்னான்.
மாடசாமி கடைசியாகச் சொன்ன ‘அரிசி’ என்ற வார்த்தையைத் தவிர எந்த வார்த்தையும் அந்த மாணவர்களுக்கு அதுவரை தெரியாது. அந்த அரிசியும் எப்படி வயலிலிருந்து வரும் என்பதையும் அறியாதவர்கள் அவர்கள். அவன் சொல்வதையே வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
நித்யா டீச்சர் இப்போது கேட்டார், “அரிசி எப்படி வருதுன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டீங்களா ?”
எல்லோரும் தலையாட்டி ஆமோதித்தனர்.
“இனிமேல் மாடசாமியை யாரும் மக்கு மாடசாமின்னு கூப்பிடக் கூடாது. சரியா? அவன் எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கான் பார்த்தீங்க இல்லயா?” என்று நித்யா டீச்சர் சொன்னவுடன், எல்லோரும் தலைகுனிந்தார்கள்.
எல்லோரும் வந்து மாடசாமியிடம் கைகுலுக்கினார்கள்.
மாடசாமிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. “வயல்ல வேலை செய்யுற விஷயங்கள்லாம் இவங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா” என்று ஆச்சரியப்பட்டான்.
மாடசாமியை நித்யா டீச்சர் தனியே அழைத்து, “மாடசாமி… நீ ஒன்னும் மக்கு இல்லைங்கிறத இப்ப தெரிஞ்சுக்கிடியா. உனக்கு தெரிஞ்ச விஷயங்கள் இவங்களுக்குத் தெரியாது. இனிமேலாவது உனக்குத் தாழ்வு மனப்பான்மை வராமல், நல்லா படிக்கணும். முயற்சி செஞ்சா நீயும் அவர்களைப் போலப் படிக்கலாம். சரியா ?” என்றார்.
மாடசாமி “சரி டீச்சர்...” என்று நம்பிக்கையுடன் தலையாட்டினான்.
அதன் பிறகு அவனை யாரும் ‘மக்கு’ மாடசாமி என்று அழைப்பதில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago