சித்திரக்கதை: சூரியனைப் பிடித்த குரங்கு

By எஸ். சுஜாதா

காட்டுக்குள் ரகசியக் கூட்டம். சிங்கம், சிறுத்தை, புலி, கரடி நான்கும் சேர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தன.

“என்ன ஆனாலும் சரி, தலைவர் பொறுப்பை விட்டுடக்கூடாது. ஒரு குரங்குகிட்டப் போயா தோற்கணும்?’’ கடுப்போடு உறுமியது புலி.

“என்ன செய்றது? அந்தக் குரங்குக்கு ஆதரவு அதிகமா இருக்கே! எனக்கு நம்பிக்கை இல்லை” கவலையோடு என்று கூறியது சிங்கம்.

“எங்கிருந்தோ வந்த குரங்கு, இந்தக் காட்டுக்கு எப்படித் தலைவராக முடியும்?’’ என்று சீறியது சிறுத்தை.

“காட்டின் மைந்தனான எனக்குத்தான் நீங்க ஆதரவளிக்கணும்னு சொல்லிப் பார்த்துட்டேன். காட்டுல யாருமே என் பேச்சைக் காதில் வாங்கிக்கல…”

“நாளைக்கு உங்ககூடச் சண்டை போடச் சொல்வோம். அதில் ஜெயிக்கிறவங்களே தலைவர்னு அறிவிச்சிடலாம்” என்றது கரடி.

எல்லோருக்கும் அந்த யோசனை பிடித்துவிட்டது.

மறுநாள்.

“குரங்கே, என்கூட சண்டை போட்டு ஜெயிச்சா, நீதான் தலைவர். ஆரம்பிக்கலாமா?’’ என்றது சிங்கம்.

“இது அநியாயம். தேர்தல் நடத்துவோம். அதுல ஜெயிக்கிறவங்க தலைவராவோம். அதை விட்டுட்டு சண்டை எல்லாம் போட முடியாது” என்றது குரங்கு.

“நான் என்ன சூரியனையா கொண்டு வரச் சொல்றேன்? வயசான என்னோட சண்டைதானே போடச் சொல்றேன்?’’ என்று சிங்கம் கர்வத்தோடு சிரித்தது.

சிறிது யோசித்த குரங்கு, “நான் சூரியனைக் கொண்டுவந்துட்டா, என்னைத் தலைவராக ஏத்துப்பீங்களா?’’ என்று கேட்டது.

அட! இது என்ன வம்பு... யோசித்தது சிங்கம்.

“சூரியனை யாரால கொண்டுவர முடியும்? சரின்னு சொல்லுங்க” என்றன சிறுத்தையும் புலியும்.

சிங்கம் சம்மதிக்க, கூட்டம் கலைந்தது.

மானும் முயலும் குரங்கிடம் வந்தன.

“என்னாச்சு உனக்கு? சூரியனை யாரால கொண்டுவர முடியும்?’’ புரியாமல் கேட்டது மான்.

“கவலைப்படாம போங்க. நாளைக்கு என்ன நடக்குதுன்னு பாருங்க.!’’

அடுத்த நாள் வழக்கம் போலக் காட்டு உயிரினங்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தன. சூரியன் உச்சிக்கு வந்தபோது, உயரமான மரத்தில் ஏறி உட்கார்ந்தது குரங்கு.

திடீரென்று வெளிச்சம் குறைந்து, இருள் சூழ ஆரம்பித்தது. பறவைகள் கீ… கீ… என்று கத்திக்கொண்டு, தங்கள் கூடுகளுக்குத் திரும்பின.

“ஐயோ… இன்னும் உணவே கிடைக்கல. அதுக்குள்ளே இருட்டிருச்சே” என்று புலம்பிக்கொண்டு தங்கள் இருப்பிடம் நோக்கி விலங்குகள் வந்தன.

“ஒருவேளை இது குரங்கோட வேலையா இருக்குமோ?’’ முயலிடம் கேட்டது மான்.

இரண்டும் குரங்கு இருக்கும் இடம் நோக்கி ஓடிவந்தன.

“சூரியனைப் பிடிச்சிட்டியா?’’

“ஆமாம்… இல்லைன்னா இந்த உச்சி வெயிலில் சூரியன் எப்படிக் காணாமல் போகுமாம்?’’ பெருமையாகப் பதில் சொன்னது, குரங்கு.

விஷயம் தீயாகப் பரவியது. குகையில் தூங்கிக்கொண்டிருந்த சிங்கத்தைப் புலியும் சிறுத்தையும் எழுப்பின.

“நாம மோசம் போயிட்டோம். குரங்கு சூரியனைப் பிடிச்சுருச்சு. காடே இருட்டாயிடுச்சி’’ அலறியது புலி.

சிங்கம் அதிர்ந்துபோனது. வேகமாக வெளியில் வந்தது.

“ஐயய்யோ… அந்தக் குரங்குகிட்ட ஏதோ மந்திர சக்தி இருக்குபோல!’’

சிங்கத்தோடு சேர்ந்து காட்டு உயிரினங்கள் எல்லாம் குரங்கு இருக்கும் இடத்துக்கு வந்தன.

“குரங்காரே… சூரியனை வெளியே விடுங்க” மேலே பார்த்துக் கர்ஜித்தது சிங்கம்.

“அதெல்லாம் முடியாது..முதல்ல யார் தலைவர்னு சொல்லுங்க. நான் சூரியனை விட்டுடறேன்…”

சிங்கம் அமைதி காத்தது.

மற்ற விலங்குகள் எல்லாம் குரங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன.

“சரி... சூரியனையே பிடிச்சு வச்சிருக்கிற நீங்கதான் இனித் தலைவர்!’’ என்று கூறியது சிங்கம்.

“ரொம்ப நன்றி. சூரியனையே பிடிச்சிட்டதால இனி நானே நிரந்தரத் தலைவர்னு சொல்ல மாட்டேன். ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை தேர்தல் வைக்கணும். யார் வேணும்னாலும் போட்டியிடலாம். தலைவர் ஆகலாம்” என்று எல்லோரையும் பார்த்துக் கூறியது குரங்கு.

“சரிங்க தலைவரே… இப்ப சூரியனை விடுங்க. ஜீவராசிகள் பிழைச்சுப் போகட்டும்” என்றது புலி.

“சரி” என்றபடி மரப்பொந்துக்குள் கைவிட்டது குரங்கு. பளபளவென்று பந்து போன்ற ஒரு பொருளைத் தூக்கி வீசி எறிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இருள் விலக ஆரம்பித்தது. சில நிமிடங்களில் மீண்டும் சூரியன் உச்சி வானில் ஒளிர ஆரம்பித்தது.

அதன்பின் குரங்கு மரத்தை விட்டுக் கீழே இறங்க, எல்லா விலங்குகளும் வாழ்த்து தெரிவித்துச் சென்றன. குரங்கின் நல்ல நண்பர்களான மானும் முயலும் ஆச்சரியம் அகலாமல் அப்படியே நின்றன.

“இதென்ன மந்திரம்.. சூரியனை எப்படிப் பிடிக்க முடியும்?” குழப்பத்தோடு கேட்டது முயல்.

“ஒரு மந்திரமும் இல்ல... போன வாரம் காட்டுக்கு வந்த மனுஷங்க சூரிய கிரகணம் பத்திப் பேசிகிட்டாங்க. அதை வச்சுதான் இந்த நாடகம். அரை மணி நேரத்துல கிரகணம் முடிஞ்சு சூரியன் வரும்போது பந்தை வீசிட்டேன்… அவ்வளவுதான்!’’ என்று சிரித்தது குரங்கு.

“அடடா! முதல் தடவையா நம்ம காட்டுக்கு ஒரு புத்திசாலித் தலைவர் கிடைச்சிட்டார்!’’ என்று மானும் முயலும் சந்தோஷப்பட்டன.

ஓவியம்: ராஜே

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்