மிரட்சியுடன் பார்க்கும் குட்டி சோலைமந்தியை அணைத்துக்கொண்டுள்ள தாய் சோலைமந்தி, தியானத்தில் இருப்பது போல மென்மையாகக் கண்களை மூடியிருக்கிறது; அழகு கொஞ்சும் ஆண் மயில்களின் நீண்ட தோகைதான் நமக்குத் தெரியும், அவை சண்டையும் இடுகின்றன; தொண்டைப் பகுதியில் உள்ள காற்றுப் பையை விரித்துக் கும்மிருட்டில் கத்துவதற்குத் தயாராகிறது பச்சைத் தவளையொன்று... இப்படி ஒவ்வொரு படமும் காட்டுக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. இந்தப் படங்களை எடுத்தவர் மிகப் பெரிய ஒயில்ட்லைஃப் போட்டோகிராஃபராக இருப்பாரோ? இல்லை, 15 வயது கே.ஏ. தனுபரன்தான் இந்தப் படங்களை எடுத்த ஒளிப்பட நிபுணர்.
குட்டி வயதில் கேமரா
எட்டு வயதில் தனுபரன் கேமராவைத் தூக்கியபோது, இன்றைக்கு அவர் வைத்திருக்கும் கேமராவின் லென்ஸைவிடக் குறைவான உயரமே இருந்திருப்பார். "எங்க பண்ணைக்கு நிறைய பறவைகளும் தவளைகளும் வரும். அதுங்கள படம் எடுக்குறது மூலமா, எனக்கு நிறைய பிராக்டீஸ் கிடைச்சது" என்கிறார் ‘ஃபாரஸ்ட் ஹில் அகாடமி'யில் படிக்கும் தனு.
தனுவின் 10-வது பிறந்த நாளின்போது அவருடைய மாமா கிரி சீனிவாசன் பரிசளித்த எஸ்.எல்ஆர். கேமராவில், காட்டுயிர்களைப் படம் எடுக்க உதவும் டெலி லென்ஸ் இருந்தது. அதிலிருந்து படம் எடுக்கக் காடுகளுக்குப் போகத் தொடங்கினார். தாத்தா சண்முகம் பரிசளித்த 400 எம்.எம். டெலி லென்ஸ் கேமராவுடன் இப்போது காட்டுக்குச் செல்கிறார்.
பெரியவர்களின் ஆதரவு
“நீங்க பாக்குற ஒவ்வொரு படமும், புது அனுபவத்தைத் தந்துச்சுன்னா, அதுக்குப் பின்னாடி நிறைய கஷ்டப்பட்டிருப்பேன். பச்சைத் தவளை படத்துக்காக நைட் முழுக்க காட்டுல டார்ச்சை வைச்சுக்கிட்டு காத்திருந்தேன்.
ஒவ்வொரு விலங்கோட பழக்க வழக்கம், குணத்தைப் புரிஞ்சுக்கிட்டாதான், ஆச்சரியப்படுற மாதிரியான படங்களை எடுக்க முடியும்”என்று சொல்லும் தனு, ஒன்றிரண்டு போட்டோகிராஃபி பயிலரங்குகளுக்குச் சென்றிருக்கிறார்.
துபாயைச் சேர்ந்த தாமஸ் விஜயன், நிறைய போட்டோகிராஃபி டெக்னிக்குகளை ஃபேஸ்புக் மூலமாகத் தனுவுக்குக் கற்றுத் தந்திருக்கிறார். அத்துடன் தனுவின் அப்பா அருண்குமாரும், அம்மா கவிதாவும் நிறைய சப்போர்ட் பண்ணுகிறார்கள்.
இருவாச்சியின் புது உணவு
ஆனைமலையின் அடிவாரத்தில் உள்ள வேட்டைக்காரன் புதூர்தான் தனுபரனின் ஊர். அதனால் ஆனைமலை புலிகள் சரணாலயத்துக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
"அத்தி மரத்தில் உட்கார்ந்திருந்த இருவாச்சி போட்டோதான், என்னுடைய முதல் போட்டோ. காட்டுக்குள்ள இருவாச்சி போன்ற கலர்புல்லான வேறு பறவையைப் பார்க்கவே முடியாது. அது இறக்கைகளை விரிச்சு கம்பீரமா பறக்கும் அழகே தனிதான். இருவாச்சிப் பறவைகள் சைவம்னுதான் விஞ்ஞானிங்க பதிவு செஞ்சிருக்காங்க. ஆனா, இருவாச்சி குட்டி குட்டி உயிரினங்களைச் சாப்பிடுறதை நான் படம் எடுத்திருக்கேன். அப்படி ஒரு ரேர் பிக்சர், ‘சாங்க்சுவரி ஏசியா' பத்திரிகைல வெளியாகியிருக்கு" - தனுபரனின் ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் இப்படி நிறைய கதைகள் இருக்கின்றன.
காட்டைத் தேடி
வார இறுதிகள், விடுமுறை நாட்களில் கேமராவைத் தூக்கிக்கொண்டு இப்படிப் புது விஷயங்களைத் தேடிப் புறப்பட்டுவிடுகிறார். டாப்ஸ்லிப், வால்பாறை, பரம்பிக்குளம், முதுமலை, பந்திபூர், கபினி, களக்காடு-முண்டந்துறை, பத்ரா புலிகள் சரணாலயம், நெல்லியம்பதி எனத் தென்னிந்தியாவின் பல சரணாலயங்களுக்குத் தனுபரன் பயணித்துள்ளார்.
ஆனைமலை புலிகள் சரணாலயத்தின் சூழலியல் தன்னார்வலராகவும் அவர் இருக்கிறார். காட்டுக்குள் புதுப் பறவையையோ, உயிரினத்தையோ பார்த்தால் வனத் துறைக்குத் தகவல் தருகிறார். வனத் துறையும் அவருக்கு உதவுகிறது.
அங்கீகாரம்
வால்பாறையில் சமீபத்தில் நடந்து முடிந்த கோடை விழாவில் தனுபரனின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. திருச்சூரில் காட்டுயிர் தகவல் மையம் அமைப்பதற்காகத் தனுபரனின் 53 படங்களைத் தேர்வு செய்திருக்கிறது கேரள அரசு. அதேபோல அட்டைகட்டி, டாப்ஸ்லிப் வனத் தகவல் மையங்களில் தனுபரனின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘பொள்ளாச்சி பாபிரஸ்' என்ற சுற்றுலா இதழில் இவருடைய படங்கள் பிரசுரமாகியுள்ளன. நாட்டின் நம்பிக்கைக்கு உரிய இளம் ஒளிப்படக் கலைஞர்களில் ஒருவர் என்று, பிரபல காட்டுயிர் இதழான ‘சாங்க்சுவரி ஏசியா’ இவரைக் குறிப்பிட்டுள்ளது.
"நேஷனல் ஜியாகிரஃபிக், டிஸ்கவரி போன்ற டிவி சேனல்ல வேலை பார்க்கணுங்கிறதுதான் என்னோட லட்சியம்" என்கிறார் தனுபரன். அவருடைய லட்சியம் ரொம்ப தூரமில்லை என்று சொல்கின்றன அவருடைய படங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago