ஊட்டிக்குச் சென்றிருந்த நிலா டீச்சர் குடும்பத்தினர் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அன்றுதான் ஊருக்குத் திரும்பியிருந்தார்கள். கவினும், ரஞ்சனியும் ஊட்டியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தனர். அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
“ரஞ்சனி, ஊட்டி கதையை அப்புறம் பேசிக்கலாம். வெளியே வந்து சித்திரை முழு நிலவின் அழகைப் பாரேன்” என்று அழைத்தார் அப்பா.
ரஞ்சனியும் கவினும் வாசலுக்கு ஓடி வந்தனர். நிலவைப் பார்த்தனர்.
“மாடிக்கு வாங்க. இங்கிருந்து பார்க்கும்போது நிலவின் அழகே தனிதான்”என்று மொட்டை மாடியில் இருந்தபடி அழைத்தார் நிலா டீச்சர்.
மூவரும் மொட்டை மாடிக்குச் சென்றனர். ரொம்ப நேரம் பௌர்ணமி நிலவின் அழகையும் வெளிச்சத்தையும் ரசித்தபடியே பேசிக்கொண்டிருந்தனர். பௌர்ணமி, அமாவாசை பற்றிய சந்தேகங்களை ரஞ்சனி கேட்க ஆரம்பித்தாள். அதற்கு நிலா டீச்சர் பதில் கூறிக் கொண்டிருந்தார்.
அப்போது கவினுக்குத் திடீரென ஒரு சந்தேகம்.
“அம்மா, நாம் இங்கிருந்து நிலாவை அண்ணாந்துப் பார்க்கிறோம். நிலவிலிருந்து பூமியை எப்படிப் பார்க்க வேண்டும்?”என நிலா டீச்சரிடம் கேட்டான்.
அந்தக் கேள்வியைக் கேட்டதும் ரஞ்சனி சிரித்தாள்.
“சரியான அசடு, இங்கிருந்து நிலாவை அண்ணாந்து பார்க்கும்போது, நிலவிலிருந்து பூமியைக் குனிந்துதானே பார்ப்பார்கள்” என்று கவினின் கேள்விக்குப் பதில் கூறினாள்.
“அப்படியா” என்று சந்தேகத்துடனேயே, “அம்மா, ரஞ்சனி சொல்லுவது சரியா, இல்லையா” என அதை உறுதிப்படுத்திக்கொள்ள நிலா டீச்சரிடம் கேட்டான் கவின்.
“ரஞ்சனி, கொஞ்சம் எழுந்திரு, பார்க்கலாம்” என ரஞ்சனியை எழுப்பினார் நிலா டீச்சர்.
“ஏம்மா?” என்று கேட்டபடியே எழுந்து நின்றாள் ரஞ்சனி.
“கீழே குனிந்து பார். உனக்கு என்ன தெரிகிறது?” என்று கேட்டார் நிலா டீச்சர்.
“இது என்ன கேள்வி? தரைதான் தெரிகிறது” என்று சிரித்தபடி பதில் கூறினாள் ரஞ்சனி.
“வானம் தெரிகிறதா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் நிலா டீச்சர்.
“என்னம்மா குழப்புறீங்க. கீழே குனிஞ்சி பாக்கும்போது வானம் எப்படிம்மா தெரியும்” என்று நிலா டீச்சரிடம் ரஞ்சனி கேள்வி எழுப்பினாள்.
“ஆமாம், நீ சொல்வது சரிதான். பூமியில் நிற்கும்போது குனிந்து பார்த்தால் பூமியின் தரைதான் தெரியும். அப்படியென்றால் நிலவில் நிற்கும்போது கீழே குனிந்து பார்த்தால் நிலாவின் தரைதானே தெரிய வேண்டும்?” என்று கிடுக்கிப்பிடியாகக் கேள்வி கேட்டார் நிலா டீச்சர்.
“ஆமாம்” எனத் தலையைச் சொறிந்தபடி தலையாட்டினாள் ரஞ்சனி.
“ஆனால், நிலவிலிருந்து கீழே குனிந்து பார்த்தால் பூமியைப் பார்க்கலாம் என கவினிடம் கூறினாயே. அது எப்படி?” என ரஞ்சனியை மீண்டும் மடக்கினார் நிலா டீச்சர்.
ரஞ்சனி பதில் கூற முடியாமல் முழித்துக்கொண்டு நிற்கவே, சிரித்தபடியே அதற்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கினார் நிலா டீச்சர்.
“அதோ, வானில் தெரியும் நிலவின் தரைப் பகுதியில் தற்போது கவின் நின்று கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ரஞ்சனி, நீ இங்கே பூமியில் நின்று கொண்டிருக்கிறாய்.
பூமியில் நின்று கொண்டிருக்கும் ரஞ்சனிக்கு பூமியின் தரைப் பகுதி, அந்தத் தரைப் பகுதியில் அமைந்திருக்கும் கட்டடங்கள், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் தெரிகின்றன. பூமியில் உள்ளவற்றைத் தவிர்த்து வேறு எதையாவது, அதாவது வானம், அந்த வானத்தில் உள்ள நிலவு, கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பார்க்க வேண்டுமானால் மேலே அண்ணாந்துதான் பார்க்க வேண்டும் இல்லையா? என்று கேட்டார் நிலா டீச்சர்.
“ஆமாம்” என்றபடி மற்றவர்கள் தலையசைத்தனர்.
“சரி, இப்போது நிலவில் நின்றுகொண்டிருக்கும் கவின் கீழே பார்க்கும்போது நிலவின் தரையைத் தவிர வேறு எதுவும் தெரியாது. வானத்தையோ, அந்த வானத்தில் இருக்கும் பூமியையோ, பிற கோள்களையோ நட்சத்திரங்களையோ பார்க்க வேண்டுமானால், மேலே அண்ணாந்து வானத்தைப் பார்த்தால்தான் கவினால் அவற்றைப் பார்க்க முடியும்” என்று நீண்ட விளக்கம் அளித்தார் நிலா டீச்சர்.
“அப்படியென்றால், நிலவில் நிற்கும் கவின், வௌவாலைப் போலத் தலைகீழாகத் தொங்க வேண்டுமா அம்மா?” என்று புதிய சந்தேகத்தை எழுப்பினாள் ரஞ்சனி.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. பூமியில் நிற்கும் நீ எப்படி நேராக நிற்கிறாயோ, அதேபோல்தான் நிலவில் நிற்கும் கவினும் நிற்பான். இங்கே மேலே, கீழே என்பதெல்லாம் ஈர்ப்பு விசையைப் பொறுத்துத்தான் இருக்கும். பூமியிலிருக்கும் போது புவியீர்ப்பு விசை நம்மைக் கட்டுப்படுத்துகிறது. புவியீர்ப்பு விசை உள்ள திசையைக் கீழே என்றும், அதற்கு எதிரான திசையை மேலே என்றும் சொல்கிறோம்.
அப்படித்தான், நிலவில் இருக்கும்போது நிலவின் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்தும். நிலவின் ஈர்ப்பு விசை உள்ள தரைப் பகுதியைக் கீழே என்றும் அதற்கு எதிரான திசையை மேலே என்றும் உணர்வோம்” என்றும் இன்னும் புரியும்படி சொன்னார் நிலா டீச்சர்.
“பூமியில் நின்றாலும் சரி, நிலவில் நின்றாலும் சரி, நாம் வௌவாலைப் போலத் தலைகீழாகத் தொங்கத் தேவையில்லை. அப்படித்தானே அம்மா?” என்று கேட்டான் கவின்.
கவினின் கேள்வியால் சிரித்த நிலா டீச்சர் குடும்பத்தினர், பௌர்ணமி நிலவுக்கு டாட்டா காட்டிவிட்டு மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கினர்.
ஓவியம்: தர்மா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago