சித்திரக்கதை: பறவை சொன்ன கதைக் காடு

By க.வை.பழனிசாமி

ஊரு தாண்டி பெரிய காடு. சூரிய வெளிச்சம்கூடக் கொஞ்சமாத்தான் காட்டுக்குள்ள நுழையும். நிலா வெளிச்சம் மாதிரிதான் பகல் இருக்கும். இரவைப் பத்திச் சொல்லவே வேண்டாம். அடர்ந்த காடு அப்படித்தானே இருக்கும்?

மனிதர்கள் யாரும் அந்தக் காட்டுக்குள் போனதில்ல. மனிதர்கள் போகாத காட்டுல மரங்களும் விலங்குகளும் நிம்மதியா இருந்துச்சுங்க. பெரிய பெரிய மரங்க. எவ்வளவு பெருசு தெரியுமா? வகுப்புல இருக்கிற எல்லாரும் கைகளக் கோத்துக்கிட்டுக் கட்டிப் பிடிச்சாலும் மீதி இடம் இருக்கும். அவ்வளவு பெருசு. மரங்களுக்கு நடுவுல உடம்ப நுழைச்சு மெதுவாத்தான் போகணும். விலங்குகள் அப்படித்தான் போகும். மரங்கள் இல்லாத புல்வெளிகளும் ஆங்காங்கே இருந்துச்சு.

அந்தக் காட்டுக்கு என்ன பேரு? கதைக் காடுன்னு பேரு. காட்டுக்கு யாரு ராஜா? சிங்கம்னு நீங்க சொல்றது காதுல விழுது. அதான் இல்ல. ராஜாவெல்லாம் கிடையாது. குட்டி இளவரசி மட்டுமே இருந்தா. முயல்தான் அந்த இளவரசி. சொகுசா அவள் இருப்பா. எப்பவும் தூங்கிக்கிட்டுக் கனவிலேயே இருப்பா. யாரும் அவள எழுப்பக் கூடாது. எழுப்புனா கோபம் கோபமா வரும். நல்லாத் தூங்கி எழுந்ததும் தான் கண்ட கனவைக் கதையா சொல்லுவா.

ஒவ்வொரு கதையும் ஒரு ருசி. ஒரு கத பலா ருசியா இருக்கும். இன்னொன்னு மாம்பழ ருசியா இனிக்கும். ஆயிரம் ருசியோட கத சொல்லுவா. முயல் சொல்ற கதையைக் கேட்கறதுக்கு நிலா, நட்சத்திரங்கள் இறங்கி மரத்து மேல உட்கார்ந்துடும். விலங்குகள் எல்லாமும் புல்வெளியில படுத்துட்டும் உட்கார்ந்துட்டும் கண் கொட்டாமக் கேட்கும். காடே கதையைக் கேட்கும்.

காட்டில ஆயிரமாயிரம் உயிர்கள். யாரும் யாரையும் சாப்பிடுறதில்ல. காட்டுக்கு நடுவுல ஒரு ஏரி இருக்கு. விலங்குகள், பறவைகள் எல்லாத்துக்கும் ஏரி நீர்தான் உணவு. பூச்சிகளுக்குக் காத்துதான் உணவு. மரங்கள் நிறைய இருக்கறதால மழைத்தண்ணி எல்லாம் அப்படியே நிலத்துக்கு அடியிலேயே இருக்கும். மரங்களும் பசியில்லாம வளர்ந்துச்சு. எல்லா உயிர்களுக்கும் காடு மிகப் பெரிய வீடா இருந்துச்சு.

‘கதைக் காடு’ பசுமையாவும் பூக்கள் பழங்கள் நெறைஞ்சும் இருந்துச்சு. காட்டை ஒரு இடம் விடாம இளவரசி முயல் பார்த்து வரும். எல்லா உயிர்களும் காட்டில குதூகலமாக வாழ்ந்துச்சுங்க. பறவைகள் வானத்துக்கு மேல உயரமா பறந்து போகும். சில நேரம் நட்சத்திர உயரத்துக்குப் பறந்து திரும்பும். அப்படித் திரும்பி வர்றப்ப ஒரு கதையோட வரும். பறவை சொல்ற கதையைக் கேட்கறதுக்குக் காட்டில எல்லாரும் காத்திருப்பாங்க.

விலங்குகள் கதை சொல்லாதா? அதுங்களும் கதை சொல்லும். எப்படி? காத்துல கரைஞ்சு காடு தாண்டி இருக்கிற ஊர்களுக்கு எப்பவாவது போகும். காத்தா அலைஞ்சு மனுசங்களோட கதைகளைச் சொல்லும். ஒரு விலங்குதான் ஊருக்குள்ள போயிட்டு வரும்.

பூச்சிங்க மட்டும் சும்மா இருக்குமா? பூக்களுக்கு உள்ள நுழைஞ்சு பூக்களோட உலகத்தைக் கதை கதையா பேசும்.

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் மனுசங்களைப் பிடிக்கல. ஏன் பிடிக்கல? காத்து ஆகாயம் பூமி எல்லாத்தையும் மனுசங்க கெடுத்துட்டதாக அதுங்க நினைச்சது. கதைக்காடு கதைகளால் நிரம்பி வழிஞ்சுச்சு.

பசுமையான புல் படுக்கை. இலைகளோட மெல்லிய சத்தம். முயல் இளவரசி தூங்கிட்டிருந்தா. சிங்கம் ஓடி வந்து தயங்கி நின்னுச்சு. எழுப்பலாமா வேண்டாமான்னு யோசனை. அதுக்குள் அந்த எடத்துக்கு எல்லா விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் வந்துடுச்சுங்க. அப்பவும் முயல் இளவரசி தூங்கிட்டுதான் இருந்தா. குட்டி மான் ஓடிப்போய் முகத்தால முட்டி அவளை எழுப்பிச்சு. கண்ணைத் தொறந்து எல்லாரையும் பார்த்தா. எல்லாரும் பயந்து நின்னத முயல் இளவரசி தெரிஞ்சிக்கிட்டா.

“என்ன ஆச்சு எதற்குப் பயந்து நடுங்கறீங்க?” அமைதியாகக் கேட்டா.

“ஆபத்து வந்துடுச்சு இளவரசி. நம்ம காட்டுக்குள் ரெண்டு மனுஷங்க புகுந்துட்டாங்க. காட்டுல ஏராளமான மரங்கள் இருக்கு. வெட்டி வித்தா நிறையப் பணம் கிடைக்கும்னு பேசிக்கிறாங்க. நம்ம நிலத்துக்கு அடியில நிலக்கரி, எண்ணெய், தங்கம் எல்லாம் இருக்குதாம். நாங்க எல்லாரும் அவங்க பேசினதக் கேட்டோம். பயந்து ஓடி வந்துட்டோம்” விலங்குகள் இணைஞ்சு ஒரே குரல்ல சொல்லிச்சு.

“கவலைப்படாதீங்க, கதைக் காட்டை மனுஷங்களால அழிக்க முடியாது. கத சாமி பார்த்துக்குவாரு. நல்ல கனவுக்கு நடுவுல என்னை எழுப்பிட்டீங்க. கொஞ்சம் தூங்கிக் கனவ முழுசாப் பார்த்துட்டு உங்களுக்குச் சொல்றேன். போயிட்டு வாங்க”ன்னு முயல் இளவரசி சொன்னா. புல் மேல மெல்ல சாஞ்சு உடனே தூங்கிட்டா. எல்லாரும் பயத்தோட திரும்புனாங்க.

காட்டுக்குள்ள நொழஞ்ச மனுஷங்க காதுல... கழுத்து மணி ஓசை கேட்டுச்சு. இருட்டுல அவங்களுக்கு எதுவும் தெரியல. கொஞ்ச நேரம் கழிச்சு ஆட்டுக்குட்டின்னு தெரிஞ்சிட்டாங்க. ரெண்டு மனுஷங்க. அவங்க கையில துப்பாக்கி. ‘மெ.... மெ....’ங்கற சத்தம். காடு முழுசும் ‘மெ...’ சத்தம் எதிரொலிச்சது. இடி ஒசை மாதிரிச் சத்தம் காதுல விழுவே மனுஷங்க பயந்துட்டாங்க. முதுகைப் பிடிச்சு யாரோ தள்ளுன மாதிரி தடுமாறுனாங்க.

அப்போ வானத்துல ரெண்டு பறவைங்க வெளிச்சமா வந்ததைப் பார்த்தாங்க. காடு பிரகாசமாயிடுச்சு. விலங்குக மெல்ல மெல்ல பக்கத்துல வந்ததைப் பார்த்து ரெண்டு பேரும் துப்பாக்கிய நீட்டினாங்க. வெளிச்சப் பறவைங்க தீப்பறவையாக மாறி.... துப்பாக்கிங்க மேல ஒக்காந்துச்சுங்க. துப்பாக்கிங்க தீப்பிடிச்சு கரிக்கட்டைங்களாச்சு. விரலெல்லாம் வெந்து மனுஷங்க கதறுனாங்க. தீப்பறவை அவங்க தலைமேல உட்கார்ற மாதிரிப் பறந்துச்சு. மனுஷங்க பயந்து காட்டிலிருந்து வெளியே ஓடிட்டாங்க.

அப்புறமென்ன கதைக் காட்டுல இருக்குற விலங்குகள் எல்லாத்துக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.

ஓவியம்: ராஜே

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்