காமிக்ஸ் ஹீரோக்கள்: மிடுக்காகப் பேசும் துடுக்கான பூனை

By கிங் விஸ்வா

உலகிலேயே மிகப் பெரிய சோம்பேறி யார் தெரியுமா? எந்த வேலையையுமே செய்யாமல், மூச்சு விடுவதுகூட ஒரு வகையான உடற்பயிற்சிதான் என்று சொல்லும் கார்ஃபீல்ட் பூனைதான் அது. இந்தப் பூனைதான் காமிக்ஸ் உலகின் நம்பர் ஒன் சோம்பேறி.

சிறு வயதில் நீங்கள் செய்த குறும்புகள், சேட்டைகள் ஆகியவற்றைச் சுவையாக எழுதி, அதையே உலகில் அதிகம் பேர் படிக்கும் ஒரு காமிக்ஸ் தொடராக மாற்றினால் எப்படி இருக்கும்? கிராமத்தில், பண்ணை வீட்டில் ஏகப்பட்ட நான்கு கால் ஜீவன்களுடன் தன்னுடைய இளமைப் பருவத்தைக் கழித்த கதாசிரியர் ஜிம் டேவிஸ், அதைத்தான் கடந்த 36 வருடங்களாகச் செய்துவருகிறார். உலகப் புகழ்பெற்ற கார்ஃபீல்ட் காமிக்ஸ் தொடரின் கதாசிரியர் இவர்தான்.

உருவான கதை: இன்டியானா மாகாணத்தில் ஒரு பண்ணை வீட்டில் தனது குடும்பத்தினர் மற்றும் 25 பூனைகளுடன் வளர்ந்த ஜிம், ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்று, ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டம்பிள்வீட்ஸ்’ காமிக்ஸ் தொடரின் ஓவியர் டாம் ரயானுக்கு உதவியாளரானார். அவரிடம் இருந்து காமிக்ஸ் வரைவதில் உள்ள நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டார். பின்னர் நார்ம் நாட் என்ற காமிக்ஸ் தொடரை ஆரம்பித்தார்.

பூச்சிகளை மட்டுமே கதாபாத்திரங்களாகக் கொண்டது இந்தக் கதைத் தொடர். இன்டியானாவைச் சேர்ந்த ‘த பென்டில்டன் டைம்ஸ்' தினசரியில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து இந்தத் தொடர் வெளியானது. அதை அமெரிக்கா முழுவதும் கொண்டுவர முயன்றார் அவர். அப்போது ஒரு காமிக்ஸ் சிண்டிகேட்டின் எடிட்டர் சொன்ன ஒரு அறிவுரை, அவருடைய வாழ்க்கையையே மாற்றியமைத்தது.

“உங்களுடைய ஓவியங்கள் சிறப்பாக உள்ளன; உங்களுடைய நகைச்சுவை ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆனால், பூச்சிகளுடன் எப்படி ஒரு வாசகன் தன்னைத் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடியும்?” இந்த அறிவுரைக்குப் பின்னர் உடனடியாக அந்தத் தொடரை நிறுத்தி, புதிதாக ஆரம்பித்த தொடர்தான் கார்ஃபீல்ட்.

கார்ஃபீல்ட்டின் கதை: இன்டியானா மாநிலத்தில் வசிக்கும் ஜான், கொழுக் மொழுக் என்று இருக்கும் ஒரு பூனையை வாங்கி வளர்க்கத் தொடங்குகிறார். இவருடைய நண்பரும், பக்கத்து வீட்டுக்காரருமான லைமன், ஓடி என்ற நாயை வளர்க்கிறார். இந்த இரண்டு செல்லப் பிராணிகளும் நட்பில்லாமலேயே இருக்கின்றன.

சந்தர்ப்ப சூழ்நிலையால் லைமன் அங்கிருந்து செல்ல நேரிடுகிறது. அன்று முதல் ஓடியும் ஜானின் வீட்டிலேயே வசிக்கத் தொடங்குகிறது. இவர்கள் மூவரின் நகைச்சுவைக் கச்சேரிதான் இந்தக் காமிக்ஸ் தொடர். முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வெளியாகி உலகில் பலராலும் ரசிக்கப்படுகிறது இத்தொடர். இது முதலில் வெளியான தேதி ஜூன் 19, 1978.

கதாபாத்திரங்கள்

கார்ஃபீல்ட்: இத்தாலிய உணவகம் ஒன்றில் பிறந்த பூனையான கார்ஃபீல்ட், பிறக்கும்போதே லசான்னே என்ற ‘பாஸ்டா’வின் சுவையை நுகர்ந்துகொண்டே பிறந்தது. அதனாலேயே கார்ஃபீல்டின் விருப்பமான உணவாக இந்த லசான்னே ஆகிவிட்டது. கார்ஃபீல்ட் வளர வளர, அதனுடைய உணவு உட்கொள்ளும் அளவும் வளரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் கார்ஃபீல்ட்டுக்கு உணவளிக்க முடியாமல், அந்த உணவகத்தையே மூட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உணவகத்தினர் கார்ஃபீல்டை ஒரு வளர்ப்புப் பிராணி கடைக்கு விற்றுவிட, அங்கிருந்து அதை வாங்குகிறார் ஜான்.

அன்று முதல் ஜானின் வீட்டில் குடிபுகுந்த கார்ஃபீல்ட், தன்னுடைய ‘பஞ்ச்’ வசனங்களால் உலகிலேயே அதிகம் விரும்பப் படும் செல்லப் பிராணி யாகி விட்டது. மனிதர்களைப் போன்ற சுபாவங்களைக் கொண்ட கார்ஃபீல்டுக்குத் தன்னுடைய எடையைச் சுட்டிக்காட்டிப் பேசுவது சுத்தமாகப் பிடிக்காது. ஒவ்வொரு கதையிலும் துடுக்குத்தனமாகப் பேசி அசத்துவதுடன், கார்ஃபீல்ட் பல சாகசங்களைச் செய்து அனைவருடைய மனதையும் கொள்ளை கொண்டுவிடுகிறது.

ஜான் ஆர்பக்கிள்: ஓர் ஓவியனாகத் தொடரில் அறிமுகமான 30 வயது ஜான், அவனுடைய ஆடைகளின் வண்ணத்துக்காக அறியப்படுபவன். ஒருமுறை ஒரு டிராபிஃக் காவலர் ஜான் அணிந்திருக்கும் டையை (Tie) கழற்றும்படி சாலையின் நடுவில் உத்தரவிடுகிறார். அந்த அளவுக்கு இவருடைய ஆடைகளின் வண்ணங்கள் இருக்கும்.

ஜானுக்கு ஓடியை மிகவும் பிடிக்கும். ஆகவே ஓடிக்கும் கார்ஃபீல்ட்டுக்கும் இடையே பஞ்சாயத்து செய்வதையே முழுநேர வேலையாக வைத்துக்கொண்டிருக்கிறார் ஜான். கதாசிரியர் ஜிம், தன்னுடைய தாத்தாவின் நினைவாக இக்கதாபாத்திரத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடி: ஓடி மந்த புத்தி கொண்ட நாய். எப்போதும் தனது மிக மிக நீளமான நாக்கைச் சுழற்றிக்கொண்டே இருக்கும். ஓடி உண்மையிலேயே ஒரு அதிபுத்திசாலி. தன்னுடைய புத்திசாலித்தனத்தை மறைத்து, ஒரு முட்டாளாக வாழ்வதாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கும். சுடோகு புதிர்களை நொடியில் தீர்க்கும். ஓய்வு நேரத்தை டால்ஸ்டாய் எழுதிய “போரும், அமைதியும்” புத்தகத்தைப் படிப்பதிலும், மொசார்ட்டின் இசையை ரசிப்பதிலுமே செலவிடுகிறது.

டாக்டர் லிஸ்: கார்ஃபீல்டின் மருத்துவரான லிஸ், ஜானின் நீண்ட நாள் தோழியும்கூட. இவரைத் தவிர கார்ஃபீல்ட்டின் செல்லமான கரடிப்பொம்மை (பூக்கி), கார்ஃபீல்ட்டின் பூனைத் தோழி (அர்லீன்), ஜானின் பெற்றோர்களுடைய செல்லப் பூனை (நெர்மல்) ஆகியவையும் இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரங்கள்.

மாற்று ஊடகங்களில்: தொலைக்காட்சி கார்ட்டூன் தொடர், கார்ட்டூன் அனிமேஷன் திரைப்படங்கள், இரண்டு முழு நீள சினிமா படங்கள் என்று பல துறைகளில் அசத்திவருகிறது கார்ஃபீல்ட். சூப்பர் ஹீரோக்கள் தவிர்த்த காமிக்ஸ் சந்தையின் நாயகன் இதுதான். இதனுடைய வீடியோ விளையாட்டுகளும் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.

உலகிலேயே அதிகமான பத்திரிகைகளில் வெளியாகும் காமிக்ஸ் தொடர் (2, 850) என்ற கின்னஸ் சாதனையைப் படைத்த தொடர் கார்ஃபீல்ட்தான். அதன் ஆரம்ப காலத்தில் பல பத்திரிகைகளால் வேண்டாமென்று இந்தத் தொடர் நிராகரிக்கப்பட்டது.

அப்படி அவர்கள் நிராகரிக்கக் காரணம், ஆரம்ப காலக் கதைத் தொடரில் கார்ஃபீல்ட்டைவிட ஜானுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேநேரம் கார்ஃபீல்ட் பேசும் வசனங்கள் சிறப்பாக இருப்பதாகவும், அதனை முன்னிறுத்திக் கதைத்தொடர் அமைக்கப்பட்டால் வெற்றி பெறும் என்றும் அவர்கள் கருதினர்.

வெற்றியின் முதற்படி நிராகரிப்புதான் என்பதையும், தோல்வியையே வெற்றிக்கான பாடமாக மாற்றியதையும் கார்ஃபீல்ட் தொடர் மூலம் புரிந்துகொள்ளலாம் அல்லவா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்