கோடைச் சுற்றுலா: கோடையைக் குதூகலமாக்கும் திருச்சி

By மிது கார்த்தி

ஒரு நாள் முழுவதும் குழந்தைகள் குதூகலமாகக் கொண்டாடத் திருச்சியில் ஏற்ற இடம் எது? சட்டென முக்கொம்பு என்றுதான் பலரும் சொல்வார்கள். உண்மைதான், காவிரி ஆறு காவிரி, கொள்ளிடம் என இரு பிரிவாகப் பிரியும் இடம் முக்கொம்புதான். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு சுற்றுலாத் தலமும்கூட இது.

முக்கொம்பை மேலணை என்றும் சொல்வார்கள். இந்த அணை 1974-ம் ஆண்டு கட்டப்பட்டது. அணையைச் சுற்றிப் பல பொழுதுபோக்கு அம்சங்களும் உருவாக்கப்பட்ட பின் இந்த இடம் ஒரு சுற்றுத்தலமாகமவும் மாறியது. எல்லா வயதினரும் விரும்பிச் செல்லும் இடம் இது. இருந்தாலும் குழந்தைகளுக்குக் கூடுதல் உற்காசத்தைத் தரக்கூடியது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.

காவிரி, கொள்ளிட ஆற்றுப் பாலத்தைச் சுற்றித் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவது அவ்வளவு அழகாக இருக்கும். மீன்கள் துள்ளிக் குதித்து அணையின் ஷட்டரில் விழுவதும் போவதுமாகவும் இருக்கும் காட்சியைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும். காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளுக்கு இடையேதான் பொதுப் பூங்காவும் சிறுவர் பூங்காவும் உள்ளன.

குழந்தைகள் குதூகலமாக விளையாடி மகிழ, தொங்கும் ஊஞ்சல், சறுக்கு ஊஞ்சல், குட்டி ராட்டினம், சீசாவில் பல வகைகள் உள்ளன. குழந்தைகளுக்கெனக் குட்டி நீச்சல் குளமும் இங்கே உள்ளது. ஒவ்வொன்றிலும் குழந்தைகள் விளையாட ஆரம்பித்தால், அங்கிருந்து வரவே மாட்டார்கள். அந்த அளவுக்குக் குழந்தைகள் பொழுதைக் கழிக்க ஏற்ற இடம். காலை முதல் மாலை வரை இங்கு செல்ல அனுமதி உண்டு.

கோளரங்கம்

கோடை விடுமுறையை அறிவுபூர்வமாகக் கழிக்க வேண்டுமா? அதற்குத் திருச்சியில் ஏற்ற இடம், அண்ணா அறிவியல் கோளரங்கம்தான். திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் விமான நிலையம் அருகே இது உள்ளது. இது 1999-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

அண்ணா அறிவியல் கோளரங்கில் குழந்தைகளைக் கவரக்கூடிய ஏராளமான அம்சங்கள் உள்ளன. விண்வெளிக்குள் சென்று கோள்களைப் பற்றி விளக்கும் கோளரங்கக் காட்சி தத்ரூபமாக இருக்கும். இந்த விளக்கம் கோள்களுக்குள் சென்று வருவது போன்ற உணர்வைத் தரும். 3டி அறிவியல் காட்சி குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் ஈர்க்கக்கூடியது. அறிவியல் காட்சிக் கூடத்தில் ஏராளமான சோதனை மாதிரிகள் உள்ளன.

கடல் வாழ் உயிரினங்களை அறிய உங்களுக்குப் பிடிக்கும் தானே. அதை 3டி அறிவியல் காட்சிக் கூடத்தில் பார்க்கலாம். இங்கே உள்ள ஒவ்வொரு அறிவியல் தொடர்பான படங்களும், காட்சிகளும் குழந்தைகளைக் கவரக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளை பயனுள்ள முறையில் கழிக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்படியானால், அறிவியல் கோளரங்கம் மிகவும் நல்ல தேர்வு.

கல்லணை

உலகிலேயே மிகப் பழமையான அணை கல்லணை. முக்கொம்பைப் போல இதுவும் திருச்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அதிசயம் எனக் கல்லணை போற்றப்படுகிறது. முற்காலச் சோழர்களில் ஒருவரான கரிகாலச் சோழன் இந்த அணையை எழுப்பினார். முக்கொம்புவில் இரண்டாகப் பிரியும் காவிரி ஆறு கல்லணைக்கு முன்பாக ஒன்றாக இணைந்து அகண்ட காவிரியாக ஓடும்.

அகண்ட காவிரியாக ஆர்ப்பரித்து வரும் காவிரி ஆறு கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, புது ஆறு என நான்காகப் பிரிகிறது. இந்த இடமும் சுற்றுலாத்தலம்தான். அதுவும் வரலாற்று சிறப்புமிக்கச் சுற்றுலாத்தலம். சுற்றுலாப் பயணிகளைக் குதிரையில் சிலையாக நின்று வரவேற்கிறது கரிகாலச் சோழன் சிலை. கல்லணை பாலத்தில் அமர்ந்து பிரமாண்டக் காவிரியைப் பார்த்து ரசிப்பது, தனி அழகு. குழந்தைகள் விளையாடி மகிழ, குட்டிப் பூங்கா ஒன்றும் உள்ளது.

சித்தன்னவாசலும் பூங்காக்களும்

திருச்சியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அதில் சித்தன்னவாசலும் ஒன்று. புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் வழியில் உள்ளது இந்த இடம்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த உலகப் புகழ்பெற்ற குகை ஓவியங்கள், பிராமி கல்வெட்டுகளைப் பார்க்கலாம். அப்படியே மலை மீது கொஞ்சம் நடந்து சென்றால் சமணர் படுக்கைகளைக் காணலாம். சித்தனவாசலின் நுழைவு வாயிலில் பழங்காலக் கல் வட்டச் சமாதியும் உள்ளது. குழந்தைகள் பழங்காலத் தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள இந்த இடம் ஒரு பொக்கிஷம்.

இவை தவிர வேறோன்றுமில்லையா என்று நினைக்க வேண்டாம். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கே பெரிஸ்கோப், ஊஞ்சல், பலவிதமான சறுக்குகள், ஏணிகள், புறாக்கூண்டு, கோபுரங்கள் ஆகியவை குழந்தைகளைச் சந்தோஷப்படுத்தும். அதேசமயம் அறிவியல் திறனைச் சோதிக்கும் வகையிலும் இப்பூங்கா வடிமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலை ரசித்தபடி படகு சவாரி செய்யலாம்.

தமிழ்த்தாய் சிலையுடன் அழகிய, அரிய வகை தாவரங்களைக் கொண்டு முத்தமிழ் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் பொழுதைக் கழிக்கலாம். மாலையில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பல வண்ண இசை நீரூற்றைக் கண்டு குழந்தைகள் குதூகலமடையலாம்.

காலை 9 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை இந்தப் பூங்காக்கள் திறந்திருக்கும்.

-கே.சுரேஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

37 mins ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்