சித்திரக் கதை: காக்கை வைத்த மொய் விருந்து

By ப.கூத்தலிங்கம்

ஒரு கிராமத்துக் காக்கை நகரத்திற்கு வந்தது. சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் ஒரு கூடு கட்டியது. அந்தக் கூடு கட்டப்பட்ட மரத்துக்குச் சற்றுத் தள்ளி சிக்னல் விளக்குக் கம்பம் ஒன்று இருந்தது. அதில் பல வண்ண விளக்குகள் இருந்தன.

காக்கை தன் கூட்டைப் பிறருக்கும் காட்ட விரும்பியது. அதற்காக ‘புதுமனை புகுவிழா’ நடத்தியது. அந்த விழாவுக்கு அணில், சிட்டுக்குருவி, பச்சைக் கிளி, ஓணான், உடும்புவை அழைத்தது. விழா மாலை வேளையில் நடந்தது. லேசாக இரவு வரத் தொடங்கியதும், சிக்னல் விளக்குகளின் பல வண்ண ஒளிகள் மாறிமாறி கூட்டின் மேல் ஒளிர்ந்தன.

இதனால் காக்கையின் கூடு பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் மாறி மாறி ஒளிர்ந்தது. அதைக் கண்ட விருந்தினர்கள் தங்களுக்கும் அதுபோலக் கூடுகள் வேண்டும் எனக் காக்கையிடம் கூறின.

ஓணானுக்கு மட்டும் அங்கே கூடு கட்ட விருப்பமில்லை. மரத்துக்குக் கீழே சாலையில் வாகனங்கள் எப்போதும் சென்று கொண்டிருந்தன. கீழே விழுந்தால் நிலைமை என்ன ஆகும் என நினைத்தது. ஆனாலும் நண்பர்களுடன் இருப்பதற்கு விரும்பியது ஓணான்.

காக்கையும் கூடு கட்டி தருவதாகச் சொல்லி, ஒவ்வொருவரிடமும் ஏதாவது பொருள் கொண்டு வரும்படி கேட்டது.

அணில் வேர்க்கடலை கொண்டு வந்ததது. சிட்டுக்குருவி தேனையும், பச்சைக்கிளி மாதுளையின் முத்துகளையும், ஓணான் நுங்கையும், உடும்பு இளநீரையும் கொண்டுவந்து காக்கையிடம் தந்தன.

காக்கை அந்தப் பொருட்களை விற்று உல்லாசமாகச் செலவு செய்தது. ஊட்டி, குற்றாலம் எனச் சுற்றுலா சென்றது. கடைசியில் காக்கை தன்னிடம் இருந்த மிச்சப் பணத்தை எல்லாம் கழுதை ரேஸில் வைத்துத் தோற்றுப்போனது.

கூடு கட்டி தர திண்பண்டங்கள் தந்த விலங்குகள் எல்லாம் ஒன்று சேர்ந்து காக்கையிடம் வந்து கேட்டன. ‘இது மழைக்காலம். இப்போ வீடு கட்ட முடியாது’ என்று சொன்னது காக்கை.

மழைக்காலம் முடிந்ததும் மறுபடியும் காக்கையிடம் அவை வந்தன. ‘இது பனிக்காலம். கூடு கட்டத் தேவையான குச்சிகளை ஒடிக்க முடியாது. பிறகு பார்க்கலாம்’ என்று சொல்லி அனுப்பியது.

கோடையில் அந்த ஜீவராசிகள் காக்கையிடம் மீண்டும் வந்தன. ‘அப்பப்பா.. அக்னி நட்சத்திர வெயிலில் வெளியே தலைகாட்ட முடியல. இந்த வேகாத வெயிலில் ஏன்தான் கஷ்டப்பட்டு வந்தீர்களோ’ என்று ஏதேதோ சொல்லிச் சமாளித்தது காக்கை.

மூன்று மாதங்கள் கழிந்தன. மீண்டும் அவை காக்கையைக் காண வந்தன. ‘இது ஆடி மாசம். இந்த மாதத்தில் யாரும் கூடு கட்ட மாட்டார்களே. இதுகூட உங்களுக்குத் தெரியாதா?’ என்று காக்கை ஏளனமாகச் சொன்னது.

எல்லாமே ஒரே குரலில் ‘ஏன்?’ என்று கேட்டன. காக்கை சிரித்தபடி சொன்னது ‘கூடு கட்டுவது என்றால் சும்மாவா. வாஸ்து ஒழுங்காக அமைய வேண்டுமே’.

இந்தப் பதிலைக் கேட்டதும், ‘இப்படியே எங்களை ஏமாற்றதே’ என எரிச்சலில் சீறியது ஓணான்.

அடுத்து, இரண்டு மாதங்கள் போனது. அந்த ஜீவராசிகள் காக்கையிடம் வந்தன. காக்கை அவர்களிடம் அலட்சியமாகச் சொல்லத் தொடங்கியது ‘மறுபடி மழைக்காலம் தொடங்கிவிட்டது. எந்த முட்டாளும் இப்போது, கூடு கட்ட நினைக்கமாட்டான்....’ என்று

காக்கை பேசி முடிப்பதற்குள், உடும்பு ஓடிச் சென்று காக்கையின் இறக்கைகளைப் பிய்க்கத் தொடங்கியது.

ஓணான் சுற்றிச் சுற்றி வந்து காக்கையின் கால்களைக் கடிக்கத்தொடங்கியது. காக்கையின் சத்தம் கேட்டுக் காக்கைகள் கூட்டமாக அங்கே வந்தன. அவை நடந்த விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டன.

காக்கைக் கூட்டம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஏமாற்றுக்காரக் காக்கை, ‘நான் வெளியூர் சென்று சம்பாதித்து, உங்களிடம் வாங்கிய கடனை அடைத்துவிடுகிறேன்’ என்றது.

ஜீவராசிகள் இதை நம்பவில்லை. காக்கை ஏதேதோ சாக்குபோக்குச் சொல்லிப் பார்த்தது.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த காக்கைக் கூட்டம் கடைசியாக ஒரு தீர்ப்பைச் சொன்னது.

‘போக்கிரிக் காக்கையே, உனக்கு ஒரு யோசனை சொல்கிறோம். நமது காக்கைச் சொந்தங்களையெல்லாம் கூப்பிட்டு, மொய்விருந்து வை. அவர்கள் விருந்து உண்டு உனக்குத் தரும் தானியங்களையும் பழங்களையும் கொண்டு இவர்களிடம் வாங்கிய பண்டங்களைத் திருப்பிக் கொடுத்து விடு!’ - சொல்லிவிட்டுக் காக்கைக் கூட்டம் பறந்து போனது.

அந்தக் காக்கை ஒரு பெரிய மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்தது. பல வகையான காட்டுப் பழங்கள், கொறிக்கும் கொட்டைகள், தானியக் கதிர்கள், கசாப்புக் கடைகளில் மீந்த மாமிசத் துணுக்குகள் என விதவிதமான சாப்பாட்டைச் சேகரித்து வைத்திருந்தது.

மொய் விருந்து அழைப்பிதழில், ஒன்பது வீட்டு மாமன் மச்சான்கள் பெயர்கள் அச்சடிக்கப்பட்டன. அதில் மட்டும் 90 பேர் இருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் பதினோரு வீட்டுப் பங்காளிமார்கள் பெயர்கள் அச்சாகி இருந்தன. அதில் 230 பேர் இருந்தார்கள். மேலும், அழைப்பிதழின் அடியில், தங்கள் நல்ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்று இருந்தது. அதன் கீழே:

‘வெளியூருக்குப் பறந்துபோன பழைய காக்கைகள் மற்றும் உள்ளூருக்கு வந்திருக்கும் புதிய காக்கைகள்’ எனக் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டும் இருந்தன.

அதனால், விருந்து நாளில் எல்லாக் காக்கைகளும் வந்து குழுமிவிட்டன. சைவக் காக்கைகளுக்குத் தனிச் சாப்பாட்டு வரிசை, அசைவக் காக்கைகளுக்குத் தனிச் சாப்பாட்டு வரிசை என்று ஏற்பாடு செய்திருந்தது. விருந்து உண்டதும், ஒவ்வொரு காக்கையும் தனது பெயர் எழுதி & அதற்கு நேராக வேப்பம் பழம், சோளக்கதிர், மரவள்ளிக் கிழங்கு, புளியங்காய் என விதவிதமான பண்டங் களை மொய்யாகத் தந்து எழுதின.

அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட எல்லாக் காக்கைகளும் தவறாது வந்து மொய் அளித்தன. ஏராளமாகப் பண்டங்கள் சேர்ந்தன. காக்கை அதில் ஒரு பகுதியை எடுத்தது. அணில், சிட்டுக்குருவி, கிளி, ஓணான், உடும்பு இவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பண்டங்களைக் கொடுத்துக் கடனைத் தீர்த்தது.

மீதிப் பண்டங்களை விற்று இன்னொரு பெரிய கூட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறது அந்தப் போக்கிரிக் காக்கை.

ஓவியங்கள்: ராஜே

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்