குதிரையும் குப்புசாமியும்

By மு.முருகேஷ்

கொள்ளுபுரம் என்கிற சிறிய ஊரில் ஒரு குதிரை வியாபாரி இருந்தார். அவருக்குக் குப்புசாமி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் இருந்தார்கள். அப்பா குப்புசாமி சொல்வதைக் கேட்காமல் வெட்டியாக ஊரைச் சுற்றுவான். செந்தாமரை எதையுமே ஆர்வமாகச் செய்வாள்.

அந்த அப்பாவின் கவலையெல்லாம் குப்புசாமியைப் பற்றியே இருந்தது. அவர் சொன்ன புத்திமதிகள் எதையும் குப்புசாமி கேட்பதில்லை. இந்தக் கவலையிலேயே நோய் வந்து படுத்த படுக்கையானார் குதிரை வியாபாரி.

மரணத்தின் கடைசி நிமிடத்தில் இருந்த அவர், குப்புசாமியை அருகே கூப்பிட்டார்.

“மகனே… இனி, நீதான் குதிரை வியாபாரத்தைப் பாத்துக்கணும். எதுன்னாலும் உன்னைவிட வயசில மூத்தவங்க நாலு பேர் சொல்ற ஆலோசனையக் கேட்டுட்டு, நீ சிந்திச்சு நல்ல முடிவெடு..!” அப்படின்னு சொல்லிவிட்டு கண்ணை மூடிட்டாரு.

குப்புசாமிக்கு ஒண்ணும் புரியவில்லை.

ஆனாலும், சாகும் நேரத்தில் அப்பா சொன்ன, ‘வயசில மூத்தவங்க நாலு பேரு சொல்றதைக் கேட்டுச் செய்.’ என்பது மட்டும் அவன் மனதில் ஆழமாகப் பதிந்துபோனது.

அடுத்த வாரமே - குதிரை வியாபாரத்தில் இறங்கினான் குப்புசாமி. எதையும் யோசிக்கவில்லை. தன்னைவிட வயதில் மூத்த நான்கு பேரை மட்டும் பக்கத்திலேயே வைத்துக் கொண்டான்.

“என்ன செய்யலாம்…சொல்லுங்கள்…?” என்று அவர்களிடம் கேட்பான் குப்புசாமி.

உண்மையில் அந்த நால்வருக்கும் குதிரை வியாபாரம் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனாலும், ‘தெரியாது’ என்று சொல்ல முடியாதே… என்பதற்காக எதையாவது வாயில் வந்ததை அவர்கள் சொல்லி வைத்தார்கள்.

குப்புசாமியும் ‘நல்ல யோசனை!’ என்று சொல்லி, அப்படியே செய்வான். வியாபாரம் தொடர்ந்து நட்டத்தில் ஓடியது.

செந்தாமரை சொல்வதையும் குப்புசாமி கேட்பதாயில்லை.

“இவ பெரிய மனுஷி. புத்தி சொல்ல வந்துட்டா…!” என்று செந்தாமரையை அருகே வரவிடாமல் விரட்டினான்.

எவ்வளவு நாள்தான் தொழில் நட்டத்திலேயே ஓடும்? குதிரை வியாபாரம் படுத்தேவிட்டது.

அவனுடன் இருந்த நால்வரும் கையில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார்கள்.

கடைசியில் ஒரேயொரு குதிரை மட்டும் மிச்சமிருந்தது.

அதற்கும் வந்தது ஆபத்து.

மீதமிருந்த ஒரு குதிரையையும் விற்க முடிவுசெய்து, பக்கத்து ஊர் சந்தைக்குக் கிளம்பினான் குப்புசாமி.

“அண்ணே…நம்மகிட்டே மிஞ்சியிருக்கிறதே இந்தக் குதிரைதான். இதை வச்சுக்கிட்டு ஏதாவது செய்ய முடியுமான்னு பாப்போம்ண்ணே…!” என்று கெஞ்சிப் பார்த்தாள் செந்தாமரை.

ம்ம்ம்… கேட்கவேயில்லை குப்புசாமி.

“சரிண்ணா…நானும் உன்கூட சந்தைக்கு வர்றேன்…” என்று செந்தாமரை கேட்க, அரைமனதோடு அவளையும் குதிரையில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.

போகிற வழியில் ஒரு வயதானவர் வந்தார். போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றிவிட்டு, குதிரையைத் தடவிப் பார்த்தார்.

“ஏந்தம்பி, பார்த்தா வயசான குதிரை மாதிரி இருக்கு. இது மேலே இப்படி ரெண்டு பேரு உக்காந்து போறீகளே…?” என்றார் அந்தப் பெரியவர்.

உடனே, குதிரை மேலிருந்த குப்புசாமி கீழே இறங்கிக் கொண்டான். தங்கையை மட்டும் குதிரை மேலேயே இருக்க வைத்தான். கூடவே நடந்து போனான்.

கொஞ்ச தூரம் போயிருப்பார்கள்.

எதிரே வந்த ஒருவர் கையிலிருந்த ஊன்றுகோலை நீட்டியபடி, “ஏம்பா, இப்படிப் பொம்பளப் புள்ளைய குதிரை மேல உக்கார வச்சிட்டு, ஆம்பளை நீ நடந்து போறீயே…இது நல்லாவாயிருக்கு…?” என்றார்.

உடனே, தங்கையைக் கீழே இறக்கி நடந்து வரச் சொல்லிவிட்டு, குப்புசாமி குதிரை மேல் ஏறிக் கொண்டான்.

பாதி தூரம் வந்துவிட்டார்கள்.

தண்ணீர்க் குடம் தூக்கிக்கொண்டு வந்த ஒரு பெண், இவர்களைப் பார்த்தாள்.

“ஏந்தம்பி, பாவம் சின்னப்புள்ளைய நடந்து வரச் சொல்லிட்டு, நீ மட்டும் குதிரை மேல உக்காந்து வர்றீயே… உனக்கு மனசு குத்தல…!” என்றாள் அந்தப் பெண்.

குப்புசாமியால் எதுவும் பேச முடியவில்லை. சடக்கென்று குதிரை மீதிருந்து கீழிறங்கி விட்டான்.

இருவரும் குதிரையைப் பிடித்துக்கொண்டே நடந்தே போனார்கள். எதுவும் பேசாமல் கூடவே நடந்தாள் செந்தாமரை.

மர வியாபாரி ஒருவர் இவர்கள் பின்னாலேயே வந்தார். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி நடந்து வந்தவர், இவர்களைப் பார்த்ததும் நின்றார்.

“எங்கே, இந்தப் பக்கமா போறீங்க?”என்று கேட்டார்.

“குதிரையைச் சந்தையில விக்கிறதுக்காகப் போறோம்…!” என்றான் குப்புசாமி.

“நான் குதிரை வாங்கத்தான் சந்தைக்குப் போறேன். உங்க குதிரையைப் பாக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, வாங்கறதுக்கு எனக்குக் கொஞ்சம் தயக்கமா இருக்கு…!” என்றார் மர வியாபாரி.

“உங்களுக்கு என்ன தயக்கம்…?” செந்தாமரை கேட்டாள்.

“வேறொண்ணுமில்லே. நீங்க ரெண்டு பேருமே குறைஞ்ச எடை உள்ளவங்களாத்தான் இருக்கீங்க. ரெண்டு பேரும் குதிரை மேலே ஏறிச் சந்தைக்கிப் போயிருக்கலாம். அதச் செய்யாம, இம்புட்டுத் தூரம் குதிரையப் புடிச்சிக்கிட்டே ரெண்டு பேரும் நடந்தே வர்றீங்கன்னா, உங்க குதிரை நோஞ்சானா இருக்குமோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு…!” என்றார் அந்த மர வியாபாரி.

குப்புசாமிக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

“அய்யோ…நாம எதையும் சுயமா சிந்திக்காம, வர்ற போறவங்க சொல்ற கருத்தைக் கேட்டுட்டு செஞ்சா இப்படித்தான் நடக்கும் போலிருக்கேன்னு” நொடிஞ்சுப் போய் உட்கார்ந்து விட்டான் குப்புசாமி.

அண்ணனுக்கு இப்போதாவது புத்தி வந்ததே…என்று எண்ணியபடி, அந்த மர வியாபாரியைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள் செந்தாமரை. நாம சொல்றதைக் கேட்கலை. மர வியாபாரி சொன்ன பிறகாவது அண்ணனுக்குப் புத்தி வந்ததே என்று செந்தாமரை நிம்மதி அடைந்தாள்.

ஓவியங்கள்: ராஜே

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்