குதிரைப் படையுடன் ஒரு நாள்

By ப்ரதிமா

அரசர்கள் காலத்துல தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை ஆகிய நான்கு வகைப் படைகள் போரிடும்னு நீங்க படிச்சிருப்பீங்க. அதோட நினைவாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ இப்பவும்கூட குதிரைப் படை இருக்கு, தெரியுமா? ஆனா, இப்ப அதோட வேலை சண்டை போடுறது இல்லை. காவலுக்காகவும், அணிவகுப்புக்காகவும் நடத்தப்படுற படையா இருக்கு.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆட்சி செஞ்சப்ப, இந்தக் குதிரைப் படையை உருவாக்குனாங்க. 1926-ம் ஆண்டு 15 குதிரைகளை வைத்து இது தொடங்குச்சு. தமிழகத்துல சென்னையிலும் மதுரையிலும் காவல் குதிரைப் படை இருக்கு.

சென்னையில மெரீனா கடற்கரையில் தினமும் காலையும், மாலையும் ரோந்து போவது இந்தக் குதிரைகளோட தினசரி வேலைகளில் ஒன்று. கடல் அலையில் மனிதர்களைவிடக் குதிரைகள் வேகமா ஓடுங்கறதால, யாராவது கடல்ல விழுந்துட்டா அவர்களைக் காப்பாற்றவும் இவை உதவுகின்றன.

முதல்வர், ஆளுநர் பங்கேற்கும் அரசு விழாக்களில் மரியாதை நிமித்தமான அணிவகுப்பில் இந்தக் குதிரைகளின் அலங்கார அணிவகுப்பும் நடைபெறும். பொதுமக்கள் அதிகமாகக் கூடும் விழாக்களில் கூட்டத்தைக் கண்காணிக்கவும் இவை பயன்படுது.

ஒரு கூட்டத்தைக் குதிரை மேல் அமர்ந்து பார்க்கும்போது, எந்த இடத்தில் பிரச்சினை என்பதைக் காவலர்களால் எளிதில் கண்டுபிடிச்சிட முடியும். எங்காவது கூட்டத்தைக் கலைக்கணும்னு காவல்துறை அழைச்சுதுன்னா அங்கேயும் குதிரைகள் அனுப்பி வைக்கப்படும். இங்கே இருக்கற குதிரைகள் எல்லாமே இதுக்காக பழக்கப்பட்டுத்தப்பட்டு வளர்க்கப்படுது.

ராணுவக் குதிரைகள்

பொதுவா ராணுவக் குதிரை வளர்ப்பு மையத்துல இருந்துதான், இந்தப் படைக்குக் குதிரைகளை வாங்குவாங்க. சில சமயம் உள்ளூர்ல இருக்கற குதிரை வளர்ப்பு மையத்துல இருந்தும் குதிரைகள் வாங்குறது உண்டு. குதிரைப் பந்தயத்துல ஓடின குதிரைகளையும் சிலர் தானமா தருவாங்க. அப்படி வர்ற குதிரைகளையும், இதுக்கு ஏத்த மாதிரி பழக்கப்படுத்தறாங்க.

இரண்டு வயசு குட்டியில இருந்து இங்கே பயிற்சி தர்றாங்க. ஒரு குதிரையை அதிகபட்சமா பத்து முதல் பன்னிரெண்டு வருஷம் வரைக்கும் வேலை வாங்கலாம். சில குதிரைங்க அதைவிட அதிகமாவும் வேலை செய்யும்.

பதினெட்டு வகை சாப்பாடு

குதிரைங்க உறுதியா இருந்தாதானே வேலை செய்ய முடியும்? அதனால தினமும் 18 வகை உணவுப் பொருட்களைக் கலந்து சாப்பிடத் தர்றாங்க. ஒரு நாளைக்கு நாலு வேளை சாப்பாடு. இது தவிர குதிரைகளோட செரிமானத்துக்கும் நோய்த்தொற்றைத் தடுக்கவும் மருந்துகளையும் கொடுக்குறாங்க. வெயில் காலத்துல நாம எல்லாம் பழச் சாறு குடிப்போம் இல்லையா?

அதே மாதிரி குதிரைகளுக்கு குளுக்கோஸ் பொடியை அதோட சாப்பாட்டுல கலந்து தர்றாங்க. இவ்வளவையும் சாப்பிட்டுட்டு சும்மா இருந்தா உடம்பு கெட்டுப் போயிடும் அல்லவா? அதனாலா அவற்றைத் தினமும் வாக்கிங் கூட்டிட்டுப் போவாங்க. ரோந்து முடிச்சுட்டு வந்த உடனே மணல் குளியலும் உண்டு. பொடி மணல் நிரம்பின இடத்துல குதிரைகளை விட்டுட்டா, அதுங்க அதுல விழுந்து, புரண்டு உடம்பு வலியைப் போக்கிக்கும்.

குதிரை லாயத்தைச் சுத்தம் செய்ய தனியா ஆட்கள் இருக்காங்க. குதிரை படுக்கற இடத்துல வைக்கோல் படுக்கை விரிக்கறது, சாணத்தை அள்ளிப் போட்டு சுத்தம் செய்யுறதை இவங்க பார்த்துப்பாங்க. குதிரை மேல் சவாரி செய்யற காவலர்கள், குதிரைக்கு பாலிஷ் பண்ணணும். அதாவது குதிரை உடம்பில ஒட்டியிருக்கற வியர்வை, தூசியை எல்லாம் சுத்தப்படுத்தி, பளபளப்பா இருக்கற மாதிரி துடைக்கணும். ஒவ்வொரு குதிரைக்கும் தனித்தனியா சோப்பு, துண்டு எல்லாம் இருக்குன்னா பார்த்துக்குங்களேன்.

காய்ச்சலும் காதும்

குதிரைங்க ரோட்ல நடந்துதானே கடற்கரைக்குப் போகணும்? அதுக்கு ஏத்த மாதிரி குதிரைகளோட குளம்புல லாடம் அடிப்பாங்க. அது ஷூ மாதிரி. அதோட காலை இது பாதுகாக்கும். குதிரைகளோட உடல் அசைவை வச்சே அதுங்க மனநிலையைக் காவலர்கள் கண்டுபிடிச்சிடுவாங்க. வயிறு சரியில்லைன்னா, எதையும் சாப்பிடாம அமைதியா இருக்கும்.

அதனால வாரம் ஒருநாள் வயிற்றைச் சுத்தம் பண்றதுக்கு மருந்து தருவாங்க. நமக்குக் காய்ச்சல் வந்தா நெத்தியைத் தொட்டுப் பார்க்கிறோம்தானே? குதிரைக்குக் காதைத் தொட்டுப் பார்த்து காய்ச்சலைக் கண்டுபிடிச்சிடுவாங்க. உடனே கால்நடை மருத்துவர்கிட்டே கூட்டிட்டுப் போவாங்க. குதிரைகளை ரொம்பத் தூரமா இருக்கற இடத்துக்குக் கூட்டிட்டுப் போறதுக்காகவே வடிவமைக்கப்பட்ட வண்டியும் இருக்கு.

ஆண், பெண் இரண்டு வகை குதிரைகளும் இந்தப் படையில உண்டு. பெரும்பாலான குதிரைங்க பந்தயக் குதிரைங்க. அதுங்களோட பேரும் வித்தியாசமாவே இருக்கும். கோல்டன் ரைடர், ஃபெஸ்டிவல் சாங், விங் ஆஃப் ஃபிளேம், ஓஷன் ஸ்பிரிட்னு எல்லாமே ஹாலிவுட் படத்தோட பேர் மாதிரி இருக்கும். ராணுவ மையத்துல இருந்து வாங்குற குதிரைகளுக்கு ஷாஜகான், பிரித்வினு நம் நாட்டுப் பேர்களை வச்சிருக்காங்க.

ஒவ்வொரு குதிரையோட விலையும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேல். வழக்கமா பழுப்பு நிறத்துலதான் குதிரைகளை வாங்குவாங்க. இப்போதான் ஒரே ஒரு வெள்ளைக் குதிரை சென்னைப் படையில புதுசா சேர்ந்திருக்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்