இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தொலைக்காட்சித் தொடராக ஒரு கார்ட்டூன் தொடர் தேர்வு செய்யப்பட்டது. உலகப் புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிக்கைதான் இந்தத் தொடரை தேர்வு செய்தது. திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதைப்போல தொலைக்காட்சித் தொடர்களுக்கு வழங்கப்படும் எம்மி விருதை 31 முறையும், கார்ட்டூன் தொடர்களுக்கான ஆன்னி விருதை 30 முறையும் வென்ற ஒரே தொடர் இதுதான்.
1992-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஜார்ஜ் புஷ் (சீனியர்), மறுபடியும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் குடும்ப மதிப்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்த பாடுபடுவதாகவும், இந்தத் தொலைக்காட்சி தொடரைப்போல குடும்பங்கள் நிச்சயமாக இருக்கக்கூடாது என்றும் தேர்தல் பிரசாரத்தில் கூறினார். இப்படி எதிரெதிரான விமர்சனங்களைக் கண்ட அந்த தொலைக்காட்சி கார்ட்டூன் தொடர்தான் ‘த சிம்ப்சன்ஸ்'.
உருவான கதை:
1987-ல் அமெரிக்காவை சேர்ந்த ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் ‘தி ட்ரேசி உல்மேன் ஷோ’ என்ற நிகழ்ச்சி பிரபலம். இந்நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளைக்கு முன்பாக ஒரு சிறிய கார்ட்டூன் பகுதியைக் கொண்டுவர நினைத்தார் தயாரிப்பளர் ஜேம்ஸ் புரூக்ஸ். காமிக்ஸ் ஓவியர் மேட் குரோய்னிங்கிடம் ஒரு கார்ட்டூன் பகுதியை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்.
தயாரிப்பாளரின் அலுவலக வளாகத்தில் அமர்ந்து மேட் உருவாக்கிய தொடர்தான் ‘த சிம்ப்சன்ஸ்' என்ற கார்ட்டுன் தொடர். தன்னையும், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் கதாபாத்திரங்களாகச் சித்தரித்து இவர் உருவாக்கிய தொடர் ஏப்ரல் 19, 1987-ம் ஆண்டு வெளியானது.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இப்படி இடைவேளையில் மட்டும் வெளியான சிம்ப்சன்ஸ் தொடர், முழுநீள கார்ட்டூன் தொடராக ஜனவரி 14, 1990 முதல் வெளியாகி இன்றுவரை உலககெங்கும் மக்களை மகிழ்வித்து வருகிறது.
கதை:
ஸ்பிரிங்ஃபீல்ட் என்ற கற்பனை நகரில் அணு மின்நிலையம் உள்ளது. இங்கு பாதுகாப்பு ஆய்வாளர் என்ற பொறுப்பான பதவியில் பணியாற்றும் பொறுப்பில்லாதவர் ஹோமர் சிம்ப்சன். இவருடைய மனைவி குடும்ப மேலாளர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன், 8 வயதில் ஒரு மகள்.
இவர்கள் அனைவரும் சேர்ந்ததுதான் சிம்ப்சன்ஸ் குடும்பம். இவர்களுடன் மேகி என்ற கைக்குழந்தையும், வளர்ப்பு பிராணிகளாக ஒரு நாய், பூனையைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது இந்தத் தொடர். இவர்களுடைய அன்றாட வாழ்க்கைச் சம்பவங்கள், நடுத்தர வர்க்க குடும்ப உறவுகளை உள்ளதை உள்ளபடி சித்தரித்தது இந்தத் தொடர்.
ஹோமர் சிம்ப்சன்:
சோம்பேறி, உதவாக்கரை, வேலையை ஒழுங்காக செய்ய முடியாதவர், குடிப்பவர், வேலையை அப்படியே விட்டுவிட்டு தூங்கிவிடுபவர் என்றெல்லாம் இவரைப் பற்றி விரிவாக சொல்வதைவிட, இவர் இதுவரை 188 வேலைகளுக்கு மாறி இருக்கிறார் என்று ஒரே ஒரு வாக்கியத்தில் சொல்லிவிடலாம். ஆனால், இப்போது இவர் வேலை பார்ப்பது மிகவும் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டிய ஒரு அணுமின் நிலையத்தில்.
மார்ஜ் சிம்ப்சன்:
ஹோமரின் மனைவியான இவர்தான் அந்தக் குடும்பத்திலேயே ஓரளவுக்கு நிதானமாகச் சிந்திப்பவர். இவரது நீல நிற குருவிக்கூடு தலைமுடி மிகவும் பிரபலம். அமெரிக்காவின் நடுத்தர வர்க்க குடும்பத் தலைவிகளைப் பிரதிபலிக்கும் இந்தக் கதாபாத்திரம் அமெரிக்காவையும் கடந்து உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
பார்ட் சிம்ப்சன்:
சிம்ப்சன் குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசான 10 வயது பார்ட்தான் இந்த தொடரின் சூப்பர்ஸ்டார். இவருடைய டி ஷர்ட் வசனங்களும், ஆட்சிக்கு எதிரான இவருடைய நடவடிக்கைகளும் புகழ்பெற்றவை. ஒரு வகுப்பில் படிக்கும் எல்லோருமே முதல் மாணவனாக வர முடியாது. எல்லா இடங்களிலும் முதலிடத்தை பெறும் மாணவர்களையே முதன்மை கதாபாத்திரமாக ஆக்குவதற்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் பார்ட் கதாபாத்திரம்.
பார்ட்டின் வசனங்கள் மிகவும் பிரபலம். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் (பெயர்கள் வரும்போது) பார்ட் கரும்பலகையில் எழுதும் வசனங்கள் நகைச்சுவையின் உச்சம்.
லிசா சிம்ப்சன்:
இந்தக் குடும்பத்திலேயே மிகவும் புத்திசாலியான லிசா பிறந்தபோது, தனக்குப் போட்டியாக வந்தவள் என்று பார்ட்டால் வெறுக்கப்பட்டாள். ஆனால், லிசா வாயை திறந்து பேசிய முதல் வார்த்தையே பார்ட்தான். பல சமூக விழிப்புணர்வு விஷயங்களில் கவனம் செலுத்தி, அவற்றுக்காகக் குரல் கொடுத்து போராடும் லிசாவின் கூந்தலை வரைய ஓவியர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
மேகி சிம்ப்சன்:
கதாசிரியர் குரோய்னிங்கின் சகோதரியை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது இந்தக் கைக்குழந்தை. நடக்க முயலும்போது உடை தடுக்கி கீழே விழுவதைப்போல ஆரம்பகால தொடர்களில் இக்குழந்தை சித்தரிக்கப்பட்டது. பின்னாளில் இக்குழந்தை ஒரு மேதையாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. ஆட்களை பின்தொடர்வது, எழுதுவது, குறிபார்த்து அம்பு வீசுவது, இவ்வளவு ஏன்? கார் ஓட்டுவது என்று அனைத்தையும் செய்யக்கூடிய இந்தக் குழந்தை மேதை, இன்னமும் பேச ஆரம்பிக்காத குட்டிக்குழந்தை என்பதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் சிறப்பு.
உருவாக்கியவர்கள்: மேட் குரோய்னிங்
முதலில் தோன்றிய தேதி: ஏப்ரல் 19, 1987-ம் ஆண்டு
பெயர்: சிம்ப்சன்ஸ் குடும்பம்
வசிப்பது: அமெரிக்காவில் இருக்கும் ஸ்பிரிங்ஃபீல்ட் என்ற கற்பனை நகரில்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago