மகிழ்ச்சி தரும் கோவை கோடைச் சுற்றுலா

By கா.சு.வேலாயுதன்

குழந்தைகளே…

கோவையில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு நீங்கள் போயிருக்கிறீர்களா? கோவைக்குப் பக்கத்தில் உள்ள ஊட்டிக்குப் போகவில்லையே என்ற வருத்தமா? குறிப்பாக ஊட்டி மலை ரயிலில் பயணிக்க முடியவில்லையே என ஏக்கமா? கவலையே வேண்டாம். ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்த அனுபவத்தைக் கோவையிலும் நீங்கள் பெறலாம். எப்படி?

கோவை வ.உ.சி. பூங்காவில் உள்ள குட்டி ரயிலில் பயணித்தால் போதும். மலைக்காடுகள், குகைவெளி, துள்ளி ஓடும் கடமான்கள், புள்ளி மான்கள், ஒட்டகம் எனச் சகலத்தையும் பார்த்துவிடலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் இருந்த இந்த வன உயிரியியல் பூங்கா மற்றும் வ.உ.சி. பூங்காவையொட்டிக் குட்டி ரயில் விடப்பட்டது. அது சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவுக்குப் பூங்காவைச் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றி வரும்போது பூங்காவில் வரையாடுகள், ஒட்டகம், புள்ளிமான்கள், கடமான்களைப் பார்க்க வசதியாக அவை உலாவ விடப்பட்டுள்ளன. தவிர மலைக் குகைக்குள் புகுந்து செல்வது போலவே செயற்கை மலைக் குகைகளும் உள்ளன.

இப்படி இயற்கையான சூழலில் குட்டி ரயில் பயணிக்கும்போது குழந்தைகள் மட்டுமல்ல; பெரியவர்களும்கூட ஊட்டி ரயிலில் பயணித்த அனுபவத்தைப் பெறுகிறார்கள். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இந்தக் குட்டி ரயில் விடப்படும். ஆனால், கோடை காலத்திலும், பண்டிகை, விழா நாட்களிலும் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படுகிறது. பெரியவர், சிறியவர் எல்லாருக்கும் ஒரே கட்டணம்தான். வெறும் 3 ரூபாய்தான்.

குட்டி ரயில் மட்டும்தானா என்று நினைத்துவிடாதீர்கள். உயிரியல் பூங்காவுக்குள் பல்வேறு வகையான பாம்புகள், முதலைகள், குரங்குகள், மயில்கள், கூஸ் பறவைகள், பல்வேறு விதமான குரங்குகள் எனச் சகலமும் கூண்டுகளுக்குள் காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். இவற்றைச் சுற்றிப் பார்க்கவும் 3 ரூபாய் மட்டும்தான் வசூலிக்கப்படுகிறது. இதுதவிரப் பூங்காவுக்குள் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உட்படப் பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் உள்ளன. ஒரு நாளை ஜாலியாக அனுபவிக்கக் குழந்தைகளுக்குக் கோவை வ.உ.சி. பூங்கா மிகவும் ஏற்ற இடம்.

இனிக்கும் அறிவியல்

பொழுதுபோக்கு பூங்கா மட்டும் போதுமா? அறிவியல் பூர்வமாகவும் ஒரு நாளைக் கழிக்க வேண்டாமா? கோவையில் அதற்கு ஏற்ற இடம் மண்டல அறிவியல் மையம்தான். சென்னை, திருச்சி, வேலுாரில் இருப்பது போலக் கோவையிலும் ஒரு அறிவியல் மையம் உள்ளது. குழந்தைகளிடையே அறிவியல் வளர்க்கும் மையமாக இது விளங்குகிறது.

நாம் தூக்கியெறியும் பொருட்களில்கூட அறிவியலும், புதுப்புது கண்டுபிடிப்புகளும் உள்ளன என்பதை இங்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள கொடீசியா செல்லும் வழியில் இந்த மையம் உள்ளது. 2013-ம் ஆண்டு ஜூலையில் இது தொடங்கப்பட்டது.

இங்கு வருபவர்களுக்கு 3டி படம் ஒன்றை 15 நிமிடங்கள் காட்டுகிறார்கள். அதில் பல வியப்பான அறிவியல் உண்மைகள் எளிய முறையில் சொல்லப்பட்டுள்ளன. அறிவியலைப் புரிந்துகொள்வதற்காக அறிவியல் காட்சிக் கூடங்களும் உள்ளன. அவற்றில் ஜவுளிக் கண்காட்சி கூடம், அடிப்படை வானவியல், ஒவ்வொரு பொருட்களும் வேலைச் செய்யும் விதம், கேளிக்கை அறிவியல் எனப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு 200 காட்சிப் பொருட்களும், அவற்றின் செயல்முறைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவில் டைனோசர் முதல் பூமியில் வாழ்ந்து அழிந்து போன பல்வேறு உயிரினங்களின் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. 40 அடி இடைவெளியில் உள்ள இரண்டு டிஷ் ஆண்டெனா மூலம் குழந்தைகளை நிறுத்தி வைத்து அவர்கள் உரையாடலை ஒலி அலை மூலம் கேட்க வைக்கும் அறிவியல் வித்தையும் உள்ளது.

நாம் பார்க்கும் ஒவ்வொரு பிம்பமும் நம் விழித்திரையில் தலைகீழாகத்தான் விழுகின்றன. அதை நம் மூளை செல்கள்தான் நேராக நிறுத்தி காட்டுகிறது என்பதைக் கேட்கும்போது உங்களுக்கு அதிசயமாக இருக்கிறது அல்லவா? இந்த அறிவியல் உண்மையை ஐகேமரா மூலம் இங்கே விளக்கிக் காட்டுகிறார்கள். இந்த வகையில் மட்டும் 35 காட்சிப் பொருட்கள் உள்ளன.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை எல்லா நாட்களிலும் இந்த மையம் செயல்படுகிறது. இங்கே செல்ல நுழைவுக் கட்டணம் சிறுவர்களுக்கு 15 ரூபாய், பெரியவர்களுக்கு 25 ரூபாய். பள்ளிக் குழந்தைகளாக இருந்தால் சலுகையாகத் தொகுப்புக் கட்டண முறையும் உள்ளது. பள்ளிக்கூடத்தில் அறிவியலைச் சொல்லிக் கொடுக்கும்போது அதை மனப்பாடம் செய்து தேர்வுக்குத் தயாராவீர்கள் இல்லையா? இங்கே ஒரு முறை வந்தால், காலம் முழுக்க அறிவியலையும் மறக்க மாட்டீர்கள்; இந்த மையத்தையும் மறக்க மாட்டீர்கள்.

படங்கள்: மனோகரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்