ஜப்பானை மயக்கிய மந்திரப் பூனை

By கிங் விஸ்வா

ஒரு நாட்டின் கலாசாரப் பிரதிநிதியாக நியமிக்கப்படும் அளவுக்குப் புகழ்பெற்ற கார்ட்டூன் தொடர் இருக்க முடியுமா? இருக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது ஜப்பானின் டோரேமான் கார்ட்டூன் தொடர்.

இந்தியாவின் சிறந்த கார்ட்டூன் தொடருக்கான நிக்கலோடியன் விருதைப் பெற்ற தொடர் இது. இந்தத் தொடரை உருவாக்கியவர்கள் நின்ஜா ஹட்டோரியின் படைப்பாளிகளில் ஒருவர்தான்.

பள்ளி மாணவர்களுக்கு உதவ என்னதான் பெற்றோரும், நண்பர்களும் இருந்தாலும், அதையும் தாண்டி ஓர் உற்ற தோழமை அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதை நிறைவு செய்வது செல்லப் பிராணிகள். நம்முடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரு செல்லப் பிராணி தீர்வைத் தந்தால், எவ்வளவு ஜாலியாக இருக்கும்? இதைச் செய்துகாட்டும் கதைதான் டோரேமான்.

உருவான கதை:

கதாசிரியரும் ஓவியருமான ஃபியூஜிமோட்டோ, கதை எழுதவும் புதிய கதாபாத்திரங்களை உருவாக்கவும் தனக்கு உதவி செய்யவும் ஓர் இயந்திரம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய வீட்டருகே பூனைகள் சண்டையிடும் சப்தம் கேட்டு எழுந்தார். அவருடைய மகளின் விளையாட்டுப் பொம்மை காலில் இடற, உடனே அவரது மூளைக்குள் லைட் எரிந்தது. அதன் விளைவாகத் தன் நண்பர் மூட்டோ அபிகோவுடன் சேர்ந்து உருவாக்கிய கார்ட்டூன் கதாபாத்திரமே டோரேமான் என்ற இயந்திரப் பூனை.

டோரேமானின் கதை:

இந்தக் கதை 1969-ல் எழுதப்பட்டது. எதிர்காலமான 2012-ல் சேவாஷி என்ற சிறுவன், தங்கள் குடும்பம் ஏன் வறுமையில் வாடுகிறது என்று ஆராய்ச்சி செய்கிறான். தன் தாத்தாவான நோபிடா நோபியின் காலத்தில் இருந்துதான் இந்த நிலை என்பதை அவன் அறிகிறான்.

எதிர்காலத்தையும் குடும்பத் தொழிலையும் கைவிட்டுவிட்ட நோபிடாவின் வாழ்க்கையை மேம்படுத்த ஓர் இயந்திரத்தை அனுப்ப நினைக்கிறான் எதிர்காலத்தில் இருக்கும் அவருடைய பேரன்.

ஆனால், வறுமையில் வாடும் அவனுடைய குடும்பத்தால், மிகவும் சொற்ப அளவிலான பாக்கெட் மணிதான் அவனுக்குக் கிடைக்கிறது. அதனால் புத்தம்புதிய, உயர் தொழில்நுட்ப இயந்திரத்தை அவனால் வாங்க முடியவில்லை. தான் சேமித்த கொஞ்சப் பணத்தில், ஒரு தொழிற்சாலையில் நிராகரிக்கப்பட்ட ஓர் இயந்திரப் பூனையை வாங்கிக் கடந்த காலத்துக்கு அனுப்புகிறான் சேவாஷி.

டோரேமான்:

நான்கரை அடி உயர இயந்திரப் பூனையான டோரேமான் மனித இயல்புகளைக் கொண்டது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதியில் மட்சுஷிபா இயந்திர ஆலையில் உருவாக்கப்பட்ட டோரேமானிடம் ஒரு நான்காவது பரிணாம பாக்கெட் இருக்கிறது.

இந்தப் பையில் இருந்து நினைத்த எதை வேண்டுமானாலும் எடுக்கும் வல்லமை கொண்ட டோரேமான், அவசரத்தில் தேவையான பொருளுக்குப் பதிலாக வேறு ஒன்றை எடுத்துவிட்டு அவதிப்படுவது தொடரின் வழக்கமான நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று. டோரேயாகி என்ற சிவப்பு பீன்ஸ் உணவை விரும்பிச் சாப்பிடும் டோரேமானிடம், எந்த இடத்துக்கும் செல்ல வைக்கும் கதவு ஒன்றும் உண்டு. இதைத் திறந்தால், நினைத்த இடத்துக்குச் சென்று சேர்ந்துவிடலாம். டோரேமானிடம் இருக்கும் பல விசேஷ சக்திகளில் இதுவும் ஒன்று.

நண்பர்கள்

நோபிடா நோபி:

நான்காம் வகுப்பு படிக்கும் நோபியின் வழக்கமான ஒரு நாள் இப்படித்தான் இருக்கும். காலையில் பள்ளிக்குத் தாமதமாகக் கிளம்புவதால் பெற்றோர் திட்டுகிறார்கள். அவசர அவசரமாகப் போகும்போது தெரு நாய்களின் வாலை மிதித்து விடுகிறான். நாய்கள் துரத்த, தப்பி ஓடி சோர்வாகப் பள்ளிக்கு வந்து சேர்வான். அந்தக் களைப்பிலேயே தேர்விலும் தோல்வி அடைந்து ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவான். சக மாணவர்களின் கிண்டலை எதிர்கொண்டு தன்னம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பான் நோபிடா.

பயந்த சுபாவத்துடன் காணப்படும் நோபிடாவின் சிறப்பே ஒரே நொடியில் தூங்கி விடுவதுதான். எதற்கெடுத்தாலும் அழ ஆரம்பிக்கும் அவன், மனதளவில் அனைவருக்கும் உதவி செய்ய நினைக்கும் நல்லவன் என்பதைப் பள்ளித் தோழி ஷிசூகா மட்டும் உணர்ந்திருப்பாள்.

ஆனால், நோபிடாவின் செயல்கள் இப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் அனைத்து வகையிலும் தோல்வி அடைந்து, ஜெய்கோவை மணந்து, தனது சந்ததியினரை வறுமையில் வாட வைப்பான் என்பதை உணரும் டோரேமான், அவனுடைய குணாதிசயங்களைச் சிறிது சிறிதாக மாற்றி, அவனுக்கு உதவும். வருங்காலத்தில் ஜப்பான் சுற்றுச்சூழல் துறையில் முக்கிய அதிகாரியாக அவனை ஆக்குவதே இந்தத் தொடரின் கதை அமைப்பு.

ஷிசூகா மினமாட்டோ:

நோபிடாவின் மீது நம்பிக்கை கொண்ட ஒரே கதாபாத்திரமான ஷிசூகா, ஒரு தூய்மை விரும்பி. சக மாணவர்கள் கிண்டல் செய்யும்போது நோபிடாவைத் தேற்றுவதையே முக்கியக் கடமையாக கொண்ட ஷிசூகாவுக்கு இனிப்பு உருளைக்கிழங்கும், வயலின் வாசிப்பதும் ரொம்பவும் பிடிக்கும்.

டகேஷி கோடா:

உருவத்தில் பெரியவனான டகேஷி, சக மாணவர்களின் பொம்மைகளையும் புத்தகங்களையும் பறித்துக்கொள்வதுடன் அவர்களுடன் சண்டையும் போடுவான். தன்னை ஒரு சிறந்த பாடகனாகக் கருதிக் கொடூரமாகப் பாடும் இவன், பாடுவதைப் போலவே சமையலிலும் சொதப்புவான்.

டோரேமி:

டோரேமான் உருவாக்கப்பட்ட அதே தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட டோரேமி, எதிர்காலத்தில் நோபிடாவின் பேரனான சேவாஷியிடம் இருக்கும் இயந்திரம். டோரேமானின் இரண்டு வயது இளைய சகோதரியான டோரேமி, அதிகத் திறன் கொண்ட இயந்திரம்.

டோரேமான் எலிகளைக் கண்டு பயப்படுவதைப் போல, டோரேமி கரப்பான்பூச்சிகளைக் கண்டு பயப்படும். கால இயந்திரத்தில் பயணித்து நோபிடாவுக்கு உதவ பல முறை டோரேமி வந்து சென்றுள்ளது.

டகேஷியின் சகோதரியான ஜெய்கோ ஒரு காமிக்ஸ் ஓவியர். முன்கோபியாக இருந்தாலும் நல்ல மனம் கொண்டவளாகச் சித்தரிக்கப்பட்டிருப்பாள் ஜெய்கோ. பல சித்திரக்கதை போட்டிகளில் பங்கேற்றாலும் கதை சுமாராக இருப்பதால் வெற்றி வாய்ப்பை இழக்க, நண்பர்கள் அவளை ஊக்குவிப்பதாகக் கதை முன்னேறும்.

ஜெய்கோ கோடா:

1969-ல் காமிக்ஸ் வடிவில் உருவான டோரேமான் 1973-ம் ஆண்டு முதல் கார்ட்டூன் தொடராகத் தொடர்ந்து வெளியாகிவருகிறது. 1980 முதல் கார்ட்டூன் திரைப்படமாக வெளிவந்துகொண்டிருக்கும் இத்தொடரின் 36-வது திரைப்படம் (Stand by me, Doraemon) சென்ற மாதம் வெளியானது. ஜப்பானில் பல ரயில்களில் இப்போதும் முழுக்க முழுக்க டோரேமானை வரைந்து அழகுபடுத்தி வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சென்ற மாதம் வெளியான டோரேமான் திரைப்படம் வசூலில் சாதனை நிகழ்த்தியதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது.

உருவாக்கியவர்கள்:

ஹிரோஷி ஃபியூஜிமோட்டோ, மூட்டோ அபிகோ

முதலில் தோன்றிய தேதி: டிசம்பர், 1969

பெயர்: டோரேமான்

வசிப்பது: டோக்கியோ, ஜப்பான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்