பீப்பி ஊதும் வாலில்லாக் குரங்கு!

By எஸ். சுஜாதா

மிகப் பெரிய வாலில்லா குரங்குகள் பிரிவில் கொரில்லா, சிம்பன்ஸி, பொனொபோ, ஓராங்ஊத்தான் ஆகியவை இருக்கின்றன. வாலில்லாக் குரங்குகள் பெரிய மூளையுடனும் முன்னோக்கிய கண்களுடனும் இறுக்கமாகப் பற்றக்கூடிய கைகளுடனும் காணப்படுகின்றன.

மனிதர்களும் வாலில்லா குரங்கு வகையைச் சேர்ந்தவர்களே. மரபணு அமைப்பால் 96.4 சதவிதம் மனிதர்களைப் போலவே உள்ளது. அதனால்தான் மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நடக்கின்றன. கைகளைப் பயன்படுத்துகின்றன. கருவிகளைக் கையாளுகின்றன. சிரிக்கின்றன. குட்டியைப் பராமரிக்கின்றன.

ஓராங்ஊத்தான்கள் இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா, மலேஷியாவில் உள்ள போர்னியோ தீவுகளில் காணப்படுகின்றன. ‘ஓராங்’ என்றால் மனிதன், ‘ஊத்தான்’ என்றால் காடு என்று அர்த்தம்.

ஆண் ஓராங்ஊத்தான் உருவத்தில் பெரியது. 1.5 மீட்டர் உயரமும் 120 கிலோ எடையும் இருக்கும். பெண் ஓராங்ஊத்தான் 1 மீட்டர் உயரமும் 45 கிலோ எடையும் இருக்கும். முதிர்ச்சியடைந்த ஆண்களுக்கு மீசையும் தாடியும் இருக்கும்.

ஓராங்ஊத்தான்கள் பெரும்பாலான நேரத்தை மரங்களிலேயே செலவிடுகின்றன. நிலத்துக்கு மிக அரிதாகவே வருகின்றன. அதனால் பழங்களே முக்கிய உணவாக இருக்கிறது. அதிலும் முட்களும் மோசமான வாசனையும் கொண்ட துரியன் பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். பூக்கள், தேன், மரப்பட்டைகள், இலைகள், பருப்புகள், பறவைகளின் முட்டைகள், பூச்சிகளையும்கூடச் சாப்பிடுகின்றன.

வாலில்லாக் குரங்குகளில் ஒருவிதத்தில் ஓராங்ஊத்தான்கள் மற்றவற்றிலிருந்து வித்தியாசப்படுகின்றன. சிம்பன்ஸி, கொரில்லா, மனிதன் எல்லாம் குழுவாக வசிக்கக்கூடியவை. ஓராங்ஊத்தான்கள் தனிமை விரும்பிகள். குடும்பம் நடத்தும் காலத்தில் மட்டும் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்கின்றன. ஓன்பது மாதங்களில் குட்டியைப் பெற்றெடுக்கிறது பெண் ஓராங்ஊத்தான்.

குட்டிக்குப் பாலூட்டுவது, விளையாட்டுக் காட்டுவது, பத்திரமாகப் பாதுகாப்பது எல்லாம் அம்மாவின் வேலை. குழந்தையை வயிற்றிலும் முதுகிலும் சுமந்துகொண்டே எங்கும் செல்லும். எட்டு ஆண்டுகள் வரை குட்டியைத் தன்னிடம் வைத்துப் பராமரிக்கும். மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் இத்தனை ஆண்டுகள் தங்கள் குட்டிகளைக் கவனித்துக்கொள்வதில்லை. குட்டி வளர்ந்து தனியாக வசிக்க ஆரம்பித்த பிறகே அடுத்த குட்டியை ஈன்றெடுக்கும் தாய்.

புத்திசாலித்தனம் அதிகம் இருக்கும் உயிரினங்களே கருவிகளைக் கையாள்கின்றன. ஓராங்ஊத்தான்கள் மழை பெய்யும்போது பெரிய இலைகளைக் குடையாகப் பிடித்துக்கொள்கின்றன. குச்சிகளால் தேனீக்களை விரட்டிவிட்டு, தேனைச் சுவைக்கின்றன.

இலையை மடித்து, வாயில் வைத்து பீப்பி ஊதி, மற்ற ஓராங்ஊத்தான்களை அழைக்கின்றன. இரவு நேரங்களில் இலைகளைப் பறித்து, மரக்கிளைகளில் மெத்தையை உருவாக்கிப் படுத்து உறங்குகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மரத்தைத் தேர்ந்தெடுத்து தூங்குகின்றன.

காடுகளில் வசிக்கும் இவை 45 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. உயிரியல் பூங்காக்களில் வசிக்கும் ஓராங்ஊத்தான்கள் 50 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

காடுகள் குறைந்து வருவதாலும் பாமாயிலுக்காக பனை மரங்கள் நடப்படுவதாலும் ஓராங்ஊத்தான்கள் குறைந்துகொண்டே வருகின்றன. நூறாண்டுகளுக்கு முன் 3 லட்சம் ஓராங்ஊத்தான்கள் வசித்தன. இன்று 60 ஆயிரம் ஓராங்ஊத்தான்களே இருக்கின்றன. பூமியில் ஒவ்வோர் உயிரினமும் முக்கியமானதே. ஓராங்ஊத்தான்களைப் பாதுகாப்பதும் மனிதர்களின் கடமை இல்லையா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்