பொல்லாத தொப்பிப் பூனை

By டாக்டர் சூஸ்

ஓர் ஊரில் ஒரு நாள் பலமான மழை. வீட்டுக்கு வெளியே ‘சோ’வென மழை கொட்டியது. அதனால், அந்த ஊரில் இருந்த சாலி என்ற குட்டிப் பெண்ணுக்கும் அவளுடைய அண்ணனுக்கும் எதுவும் விளையாடப் பிடிக்கவில்லை.

அவர்களுடைய சைக்கிள், பந்து, பேட் எல்லாம் அப்படி அப்படியே போட்டது போட்ட இடத்தில் கிடந்தன. போரடித்துப் போய் ஜன்னலுக்குப் பக்கத்தில் சேரைப் போட்டு உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென்று ‘டமால்’ என்றொரு சத்தம். சிவப்பு, வெள்ளைப் பட்டைகள் கொண்ட நீளமான தொப்பியை அணிந்துகொண்டு, உயரமான ஒல்லிப் பூனை ஒன்று, அவர்களுடைய வீட்டுக் கதவைத் திறந்து இரண்டு கால்களில் உள்ளே நடந்துவந்தது. ஏதோ மாயாஜாலம் போல இருந்தது.

சிரித்துக்கொண்டே வந்த அந்தப் பூனை, பேச ஆரம்பித்துவிட்டது, “ஹலோ குழந்தைகளே! எனக்குச் சில தந்திரங்கள் தெரியும், உங்களை நான் சந்தோஷப்படுத்தப் போறேன்” என்றது.

சாலிக்கும் அவளுடைய அண்ணனுக்கும் எதுவுமே புரியவில்லை. ‘ஆ…’வென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேசை மீது கண்ணாடிக் குடுவையில் இருந்த அவர்களுடைய வளர்ப்பு மீன், வேகமாகத் தண்ணீரில் குதித்தது.

“அந்தப் பூனை எந்த வித்தையையும் காட்ட வேண்டாம். வெளியே போகட்டும்” என்று சொன்னது மீன்.

அவ்வளவுதான், அந்த மீன் இருக்கும் கண்ணாடிக் குடுவையைத் தனது கையிலிருந்த குடையின் விளிம்பில் நிற்க வைத்து பேலன்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டது தொப்பிப் பூனை.

“நீ எதற்காகவும் பயப்படாதே” என்று மீனைப் பார்த்துச் சொல்லிவிட்டு, மற்றொரு கையின் ஒற்றை விரலில் ஒரு புத்தகத்தை பேலன்ஸ் செய்ய ஆரம்பித்தது பூனை. தொப்பியில் ஒரு கப்-சாசர் தூக்கி வைத்துக்கொண்டு ஒரு பந்தின் மீது வேறு ஏறி நின்றது அந்தத் தொப்பிப் பூனை. நம்மை பேலன்ஸ் செய்வதே ஆபத்து. இந்தப் பூனை என்னடாவென்றால், ரொம்ப அதிகமாகச் செய்துகொண்டிருக்கிறதே என்று மீனுக்கு மகா கோபம்.

கடைசியில் ‘தொபுக்கடீர்’ என்று தலைகீழாக விழுந்தது தொப்பிப் பூனை. அதன் கை, தொப்பியில் பேலன்ஸ் செய்த பொருட்கள் எல்லாம் ‘டமார், டமார்’ என்று விழுந்து நொறுங்கின. நல்ல வேளையாக அந்த மீன் கண்ணாடிக் குடுவையில் இருந்து தாவி, ஒரு தேநீர் குடுவையில் விழுந்து தப்பித்தது. மீண்டும் அந்த மீன் தலைக்கு ஏறிய கோபத்துடன் சொன்னது.

“தொப்பிப் பூனையே! ஒழுங்காக வெளியே போ”.

அப்போது அந்தத் தொப்பிப் பூனை என்ன சொன்னது தெரியுமா? ‘வாங்க! இன்னொரு விளையாட்டு விளையாடலாம்’ என்றது.

பூனை வேகவேகமாக வெளியே சென்றது. ஒரு பெரிய சிவப்புப் பெட்டியை வீட்டுக்கு வெளியிலிருந்து தூக்கிவந்தது. அதிலிருந்து நீல நிற முடியும், சிவப்பு உடையும் அணிந்த இரண்டு குள்ள மனிதர்களை விடுவித்தது.

அவற்றின் பெயர் பொருள் 1, பொருள் 2. அந்த இரண்டு பொருட்களும் தொப்பிப் பூனையைவிடவும் மிக அதிகமாக ரகளை செய்தன. வீட்டுக்குள்ளே குறுக்கு மறுக்காகப் பட்டம்விட ஆரம்பித்தன. பட்டத்தின் மூலம் நூல் ஓவியங்கள், பல்புகள், பூந்தொட்டிகளைத் தட்டிவிட்டன.

கடைசியில் அவர்களுடைய அம்மாவின் புது கவுனையும் பட்ட நூலில் பறக்கவிட்டன. ஒரு பட்டத்தின் நூலில் தேநீர்க் குடுவையுடன் மாட்டிக்கொண்டு தத்தளித்தது மீன். அப்படி மாட்டிக் கொண்டபோது, ஜன்னல் வழியாக அந்தக் குழந்தைகளின் அம்மா வருவதை அது பார்த்துவிட்டுச் சொன்னது, “ம், எல்லாத்துக்கும் முடிவு வந்தாச்சு. இதோ அம்மா வந்தாச்சு”.

உடனே சாலியின் அண்ணனுக்கு விளையாட்டெல்லாம் மறந்துபோனது. வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்கும் நீண்ட வலையைக்கொண்டு அந்த இரண்டு பொருட்களையும் வேகமாக ஓடிப் பிடித்தான். களேபரமாகக் கிடக்கும் வீட்டைப் பார்த்து முகம் சுழித்த தொப்பிப் பூனை, அந்தப் பொருட்கள் இரண்டையும் சிவப்புப் பெட்டிக்குள் போட்டு அடைத்து வெளியே எடுத்துக்கொண்டு போனது.

குடுவை மீனும் அந்தக் குழந்தைகளும் தலைகீழாகக் கிடக்கும் வீட்டைச் சோகத்துடன் பார்த்தார்கள். “அய்யய்யோ, அம்மா வந்து என்ன சொல்லப் போகிறாரோ?”.

அப்போது வீட்டின் கதவு திறந்தது. “அம்மா வந்துவிட்டாரா?” என்று எல்லோரும் ஆவலாகப் பார்த்தார்கள். அப்போது உள்ளே நுழைந்தது யார் தெரியுமா? சாட்சாத் தொப்பிப் பூனைதான்.

அது ஒரு இயந்திரத்தை ஓட்டி வந்தது. அந்த இயந்திரத்தில் இருந்து நிறைய கைகள் நீண்டன. அந்தக் கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளை எடுத்து, இருந்த இடத்தில் வைத்தன. இன்னும் சில கைகள் எல்லாவற்றையும் சுத்தப்படுத்த ஆரம்பித்தன.

அந்தக் குழந்தைகளின் அம்மா உள்ளே நுழைவதற்கு முன், சட்டென்று வெளியே சென்று மாயமாக மறைந்துபோனது தொப்பிப் பூனை. வீடு, மீண்டும் வீடாக இருப்பதைப் பார்த்து அந்தக் குழந்தைகளும் மீனும் சந்தோஷப் பட்டார்கள்.

அம்மா வெளியே போனபோது எப்படி இருந்தார்களோ, அதேபோல அந்தக் குழந்தைகளும் மீனும் அவரவர் இடத்தில் இருந்தார்கள். அம்மா உள்ளே நுழைந்தவுடன் சாதாரணமாக என்ன கேட்பார், அதைத்தான் அவர்களுடைய அம்மாவும் கேட்டார்:

“குழந்தைகளா, இவ்ளோ நேரம் என்ன செஞ்சீங்க?”

அந்தக் குழந்தைகளால் என்ன சொல்ல முடியும், பேசாமல் உம்மென்று இருந்தார்கள். சரி, உங்கள் வீட்டில் இந்தக் கதை நடந்தால் உங்கள் அம்மாவுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்.

எல்லோரையும் வாசிக்க வைத்த டாக்டர் சூஸ்

தியடோர் சூஸ் கய்சல் என்ற இயற்பெயரைக் கொண்ட டாக்டர் சூஸ் ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் கார்டூனிஸ்ட். குழந்தைகளுக்கான புகழ்பெற்ற பல புத்தகங்களை வரைந்தும் எழுதியும் உள்ளார். மார்ச் 2-ம் தேதி இவருடைய பிறந்த நாள்.

கிரீன் எக்ஸ் அண்ட் ஹாம், தி லோரக்ஸ் உள்ளிட்ட 46 புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய கதைகள், கற்பனைக் கதாபாத்திரங்கள், பாடல்கள் குழந்தைகளைக் குதூகலமூட்டக்கூடியவை.

தனக்கு நன்றாகப் பிடிக்கும்வரை ஒரு புத்தகம் சிறப்பாக வர உழைப்பவர். பிடிக்கவில்லை என்றால் தூக்கிப் போட்டுவிடுவாராம். ஒரு சிறிய புத்தகத்தைக் கொண்டுவர ஒரு வருடம்கூட எடுத்துக்கொள்வாராம். டாக்டர் சூஸின் பிறந்த நாள் அமெரிக்காவில் தேசிய புத்தக வாசிப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

நன்றி: தி கேட் இன் தி ஹாட்

தமிழில்: ஆதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்