தொலைக்காட்சி கார்ட்டூன் தொடர்களில் வன்முறை ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. அதனால் குழந்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தணிக்கைக் குழு ஒன்றை அமெரிக்கப் பெற்றோர் அமைப்புகள் உருவாக்கின.
அதில் அதீத வன்முறையால் தடை செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகள் டாம் & ஜெர்ரி கார்ட்டூனை உருவாக்கிய ஹன்னா & பார்பெரா குழும நிகழ்ச்சிகளாகவே இருந்தன. ஆனால், அதே குழுவைச் சேர்ந்த பார்பெராவின் புதிய நிகழ்ச்சி, வன்முறைக்கு எதிராக மிகவும் பிரபலமானது. அதுவே ஸ்கூபி டூ.
உருவான கதை:
1960-களின் இறுதியில் சி.பி.எஸ். தொலைக்காட்சி நிர்வாகி ஃபிரெட் சில்வர்மேன் பதின்ம வயதினரை (டீன் ஏஜ்) அடிப்படையாகக் கொண்ட கார்ட்டூன் தொடர்களைத் தயாரிக்கும்படியாக ஹன்னா & பார்பெராவிடம் கேட்டுக்கொண்டார்.
1940-களில் தான் ரசித்த ரேடியோ மர்ம தொடரையும், அப்போதைய ஹிட் தொடரான ஆர்ச்சியையும் ஒருங்கிணைத்து துப்பறியும் ஐவர் (Mysteries Five) என்ற புதிய கதைத்தொடரை பார்பெரா உருவாக்கினார்.
ஸ்கூபி டூ நாய்:
இந்தத் தொடரில் ஒரு நாயை முக்கிய கதாபாத்திரமாக அமைப்பது என்று முடிவானது. உடனே, அது எதிர்மறைக் குணாதிசயங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள். துப்பறியும் ஐவர் என்ற கதைத் தொடரில் முதலில் உருவாக்கப்பட்டது ஆர்ச்சி தொடரில் வரும் ஷீப் வகை நாயைப் போன்றதுதான்.
ஆனால், அப்படிச் செய்தால் ஆர்ச்சி தொடரைத் தழுவிய மாதிரி இருக்கும் என்பதால், வடிவமைப்பாளர் டகமாட்டோவிடம் நாய் கதாபாத்திரத்தைப் புதிதாக உருவாக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
டகமாட்டோ, சக பெண் ஊழியர் வீட்டில் வளர்க்கப்படும் கிரேட் டேன் வகை நாயின் குணாதிசயங்களைக் கேட்டறிந்து, அதற்கு நேர்எதிரான குணாதிசயத்தைக் கொண்ட டூ மச் என்ற பெயருடன் ஸ்கூபி டூ நாயை உருவாக்கினார்.
மாற்றம்:
இப்படிப்பட்டத் தொடரைத் தயாரிக்க தொலைக்காட்சி நிர்வாகி மறுத்துவிட்டார். இதனால் நாலு பேர் கொண்ட குழுவாகக் குறைக்கப்பட்டு, யாருக்குப் பயம்? (Who's S-S-Scared?) என்று பெயரும் மாற்றப்பட்டது. அமானுஷ்ய, மர்மப் புதிர்களைத் துப்பறியும் ஒரு இசைக்குழுவாக இந்தத் தொடர் மாற்றி உருவாக்கப்பட்டது.
சி.பி.எஸ். தொலைக்காட்சி இயக்குநர் இந்தத் தொடருக்கான ஓவியங்களைப் பார்த்துவிட்டு, சிறுவர்களைப் பயமுறுத்தும் வகையில் இருப்பதாகக் கருதித் தொடரை நிராகரித்துவிட்டார்.
சனிக்கிழமை காலை கார்ட்டூன் தொடர்கள் ஒளிபரப்பாகும் நேரத்தில் புதிய தொடர் எதுவும் இல்லாத காரணத்தாலும், ஏற்கெனவே வந்துகொண்டிருந்த ஹன்னா பார்பெரா தொடர்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்தத் தொடர் மறுபடியும் பரிசீலிக்கப்பட்டது.
புகழ்பெற்ற பாடகர் ஃபிரான்க் சினாத்ராவின் பாடலில் வந்த டூ-பி-டூ-பி-டூ என்ற பாடலின் முடிவை மனதில் கொண்டு ஸ்கூபி டூ என்றும், இசைக்குழுவைச் சேர்ந்தவர்களைத் துப்பறிவாளர், அவருடைய நண்பர்களாகவும் மாற்றித் தொடருக்கு ஒப்புதல் அளித்தார் சில்வர்மேன்.
இப்படியாகப் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு ஸ்கூபி டூ தொலைக்காட்சி கார்ட்டூன் தொடர் தொடங்கியது.
ஸ்கூபியின் நண்பர்கள்
ஷாகி ரோஜர்ஸ்:
சாப்பிடுவதை மட்டுமே முழுநேர வேலையாகக் கொண்ட ஷாகிதான் ஸ்கூபி டூவின் உற்ற நண்பன். கதையில் முக்கியமான தருணங்களில் கொடுக்கப்பட்ட கடமையை மறந்து ஷாகியும் ஸ்கூபியும் எங்கேயாவது சென்று சாப்பிட ஆரம்பித்துவிடுவது வாடிக்கையான நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று. ஷாகி எப்போதுமே பச்சை வண்ண டீ ஷர்ட்டும், சாக்லேட் கலரில் பேண்ட்டும் அணிபவர்.
ஃப்ரெட் ஜோன்ஸ்:
இந்தத் துப்பறியும் குழுவின் தலைவனான ஃப்ரெட், எதிரிகளைப் பிடிக்க தீவிரமாகத் திட்டமிடுவதில் வல்லவன். ஆனால், அவனது திட்டங்களை ஷாகியும் ஸ்கூபியும் சொதப்பி, எதிரிகளைத் தப்ப வைத்துவிடுவார்கள். கடைசி நேரத்தில் எப்படியாவது அவர்களை வளைத்துப் பிடித்துவிடுவார்கள்.
டேஃப்னி பிளேக்:
டேஞ்சர் டேஃப்னி என்று அழைக்கப்படும் இந்த இளம்பெண் அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்வாள். அதனாலேயே இந்தப் பட்டப்பெயர் இவளுக்கு வந்தது. நண்பர்களுடன் துப்பறிவதில் ஆர்வம் கொண்ட ஊதா வண்ண உடை அணியும் டேஃப்னி, ஒரு செல்வந்தரின் மகள்.
வெல்மா டின்க்லி:
அடிக்கடி தன்னுடைய கண்ணாடியைத் தொலைத்துவிட்டுத் தடுமாறுவதாகக் காண்பிக்கப்பட்டாலும், வெல்மாதான் இந்தத் துப்பறியும் குழுவின் மூளையாகச் செயல்படுபவள். ஷாகியும், ஸ்கூபியும் ஏதாவது வேலையைச் செய்ய மறுக்கும்போது அவர்களுக்கு நொறுக்குதீனியை லஞ்சமாகக் கொடுத்து வேலை வாங்குவாள் வெல்மா.
இந்தக் குழுவிலேயே உருவத்தில் மிகவும் சிறியவள் இவள்தான். ஆனாலும் ஆபத்து நேரத்தில் குழு உறுப்பினர்கள் அனைவரையும் தன்னுடைய தோள்களில் சுமந்துகொண்டு ஓடுவதாகச் சித்தரிக்கப்படுவது வழக்கமான ஒரு காட்சி.
கதையின் அமைப்பு:
மர்ம இயந்திரம் (மிஸ்டரி மெஷீன்) என்ற பெயர் கொண்ட வேனில் நண்பர்கள் பயணம் செய்யும்போது திடீரென ஏதோ ஒரு காரணத்தால் வண்டி ரிப்பேர் ஆகிவிடும். எங்கே வண்டி நிற்கிறதோ அதன் அருகிலேயே அவர்கள் தீர்த்து வைக்க வேண்டிய ஒரு பிரச்சினை காத்துக் கொண்டிருக்கும்.
குறிப்பாகப் பாழடைந்த மண்டபத்தில் இருக்கும் பேய் / பிசாசு, ஊரையே மிரட்டும் மர்ம உருவம், பனி மனிதன் யெட்டி, விசித்திரமான விலங்குகள் என்று பல வகை அமானுஷ்யம் கலந்த கதாபாத்திரங்களைப் பற்றி இவர்கள் துப்பறிவார்கள். இப்படியாகப் பேய், பிசாசு, மர்மங்கள் எல்லாமே ஏமாற்று வேலை என்பதை மக்களுக்கு உணர்த்துவதாகக்கதை முடியும்.
உருவாக்கியவர்கள்: ஐயவோ டகமாட்டோ (ஓவியர்) + ஜோ ரூபி & கென் ஸ்பியர்ஸ் (கதாசிரியர்கள்)
முதலில் தோன்றிய தேதி: 13-09-1969
பெயர்: ஸ்கூபி டூ
வகை: கிரேட் டேன் வகை நாய்
வசிப்பது: அமெரிக்கா
ஸ்கூபியின் கதாபாத்திரம்:
ஸ்கூபி நாய் (7) ஒரு சாப்பாட்டுப் பிரியன். சின்ன ஆபத்து வந்தாலும் நண்பன் ஷாகியின் இடுப்பில் பாய்ந்து சென்று உட்கார்ந்துகொள்ளும் அளவுக்குத் தைரியசாலியான ஸ்கூபி, இரண்டு கால்களில் நடக்கும் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago