வாழ்க்கை அனுபவம்: கரடு முரடான பாடம்

By மிதிலேஷ்

அந்தக் குருகுலத்தில் 9 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். குருகுலம் அடர்ந்த காட்டுக்குள் இருந்தது. உணவு தேவைக்குப் பக்கத்தில் உள்ள ஊருக்குதான் குருவும் மாணவர்களும் செல்ல வேண்டும். காட்டு வழியாக நடந்து செல்லக் குரு மிகவும் சிரமப்பட்டார். சிரமத்தைப் போக்கக் குருவுக்கு ஒரு யோசனை உதித்தது. வாரத்திற்கு ஒருமுறை ஊருக்குள் சென்று உணவுப் பொருளை மாணவர்கள் வாங்கி வர வேண்டும் என்பதே அந்த யோசனை.

காட்டிலிருந்து ஊருக்குள் செல்ல இரு வழிகள் இருந்தன. ஒன்று சுலபமாகச் சென்று வரும் வழி. இன்னொன்று கரடு முரடான பாதைகள் நிறைந்த வழி. ஒவ்வொரு வாரமும் உணவுப் பொருள் வாங்கச் செல்லும் போது 8 மாணவர்களைச் சுலபான வழியிலும், யுவான் என்ற மாணவனைக் கரடு முரடான வழியிலும் குரு அனுப்பினார். யுவான் மற்ற மாணவர்களைப் போலக் கிடையாது. குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற பெயரெடுத்தவர்.

அன்றைய தினம் வழக்கம் போல உணவுப் பொருள் வாங்க மாணவர்கள் ஊருக்குள் சென்றனர். யுவானுக்கு வழக்கம் போல அதே கரடு முரடான, முட்கள் நிறைந்த பாதை. யுவானுக்கு மனதுக்குள் ஒரு நெருடல். நம்மை மட்டும் இப்படிக் கரடு முரடான பாதையில் குரு அனுப்பி வைக்கிறாரே என்று. இருந்தாலும் குரு இட்ட கட்டளை ஆயிற்றே. வேகவேகமாகக் காட்டின் வழியாகச் சென்றார் யுவான்.

எல்லோரும் அந்த வாரத்துக்குரிய உணவுப் பொருட்களை வாங்கி வந்தனர். குரு யுவானை அழைத்தார். “என்ன யுவான், உன்னை மட்டும் கரடு முரடான பாதையில் அனுப்புகிறேனே. அதைப் பற்றி என்னிடம் நீ எதுவும் கேட்கவில்லையே’’.

யுவான் பதில் சொல்வதற்குள் குருவே தொடர்ந்தார், ‘’கரடு முரடான வழியில் சென்ற நீ இரு மணித்துளிகளில் பொருட்களை வாங்கி வந்துவிட்டாய். சுலபமான வழியில் சென்ற 8 பேருக்கும் அதே இரண்டு மணி நேரம் ஆகியிருக்கிறது. உன்னைச் சுலபான வழியில் அனுப்பியிருந்தால் இன்னும் நீ முன்கூட்டியே வந்திருப்பாய். குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வையும், செல்லும் வழி கரடு முரடாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு செல்ல வேண்டும் என்ற தைரியத்தையும் மற்ற மாணவர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே உன்னையும் மற்றவர்களையும் தனித்தனியாகப் பிரித்து அனுப்பினேன்’’ என்றார்.

அப்போதுதான் யுவானுக்கு குருவின் செயல் புரிந்தது. குருவின் வாயால் இப்படிப் புகழப்பட்ட அந்த யுவான் வேறு யாருமில்லை. பிற்காலத்தில் பல நாடுகளைச் சுற்றி வந்த சீன யாத்ரிகர் யுவான் சுவாங்தான்.

சிறுவனாகக் கரடு முரடான பாதையில் நடந்து கற்றுக் கொண்ட பாடம், பின்னர் அவர் உலகில் பல நாடுகளுக்குக் கால் நடையாகச் சென்று வர உதவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE