திருப்பிக் கொடுத்த திருடர்கள்

By ஸ்ரீஜெயந்தி பாஸ்கர்

அது ஒரு சின்ன ஊரு. அதுக்கு ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு தன் நாட்டு மக்கள் எப்படி இருக்காங்கன்னு பாக்க ஆசை. ஒருநாள் ஊரைச் சுத்தி வந்தாரு ராஜா.

ஒரு தெருவுல, ஒருத்தர் அழுதுகிட்டு இருந்தாரு.

“என்னப்பா விஷயம்? ஏன் அழற!”ன்னு ராஜா கேட்டாரு.

“ராஜா! நான் ரொம்ப ஏழை! கால் வயித்து கஞ்சிக்குக்கூட வழியில்ல! நாலு நாளா பட்டினிங்க. பசி தாங்க முடியல. அதான் அழறேன்” என்றார் அவர்.

ராஜாவுக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டது. “சரி, சரி அழாதே! அரண்மனைக்கு வந்து என்னைப் பாரு” என்று சொல்லிவிட்டு ராஜா அங்கிருந்து கிளம்பினாரு.

அந்த ஏழை அரண்மனைக்குப் போறாரு.

ராஜா தன் வேலையாட்களை அழைத்து அவருக்கு உணவு, துணிமணி எல்லாம் கொடுக்க உத்தரவு போடறாரு.

வேலையாட்கள் கொடுத்த நல்ல துணியைப் போட்டுகிட்டு அந்த ஏழை சாப்பிடறாரு. சாப்பிட்டு முடிச்சி ஏப்பம் விடறாரு. “ரொம்ப நாள் கழிச்சு நல்ல சாப்பாடு கெடச்சுது. நல்ல துணிமணியும் கிடைச்சிருக்கு”ன்னு ரொம்ப சந்தோஷமா சொல்லிக்கிட்டாரு.

அப்போ ராஜாவைப் பாக்கறாரு. ராஜா போட்டுக்கிட்டு இருக்கும் அலங்காரமான ஆடை, நகை, கிரீடம் எல்லாத்தையும் பாத்து அசந்துபோறாரு அந்த ஏழை.

‘அடேயப்பா! ராஜான்னா ராஜாதான்! என்ன கம்பீரம்! என்னா ஆடை, என்னா நகை… என்னமா ஜொலிக்குது! கண்ணைப் பறிக்குது!’ அப்டீன்னு ஏறஇறங்க ராஜாவைப் பார்க்கிறாரு.

அந்தப் பார்வையோட அர்த்தம் ராஜாக்கு புரிஞ்சிபோச்சி.

“என்னப்பா! என்னையே அப்படி வெச்ச கண் வாங்காம பாக்குறே?”ன்னு சொல்லி, தன் முத்து மாலையைக் கழற்றி அந்த ஏழை கிட்ட கொடுக்கறாரு. “இது என்னோட பரிசு! வச்சிக்க. இப்ப சந்தோஷம்தானே!”ன்னு கேக்கறாரு.

அதை வாங்கிட்டு வந்த அந்த ஆளுக்கு முத்து மாலையின் மதிப்பு தெரியல. வயிறு முட்ட சாப்பிட்டதால தூக்கம் கண்ணச் சுத்துது.

ஒரு மரத்தடில படுத்து சுகமாக தூங்கறாரு. முத்து மாலை அவரு பக்கத்துல கிடக்கு.

அதை ஒரு காக்கா பாத்துச்சி. முத்து மாலையைக் கொண்டு போய் தன் கூட்டுல வெச்சிடிச்சி.

அந்த மரத்துல ஏறின ஒருத்தர் கண்ணுல அந்த மாலை பட்டவுடன் அவர் அதை எடுத்துக்கிட்டுப் போயிடறாரு.

ஏழை தூங்கி எழுந்து பாத்தா முத்து மாலையைக் காணோம். “ஐய்யய்யோ என்னோட முத்துமாலையைக் காணோமே! யார் எடுத்தாங்கன்னே தெரியலையே!” என்று புலம்பறாரு.

மறுநாள் திரும்ப ராஜா கிட்ட போறாரு. “ராஜா நீங்க கொடுத்த முத்து மாலை காணாம போயிடுச்சி’’ன்னு அழறாரு.

“நீ ஏன் கவனமில்லாம இருந்த? அதை நீ கழுத்திலேயே போட்டிருந்தா இப்படி ஆகியிருக்காது. சரி பரவால்ல. இத வெச்சிக்க” என்ற ராஜா, தன் மோதிரத்தை எடுத்துக் குடுக்கறாரு. “இதை விரலை விட்டுக் கழட்டாதே. சரியா?”ன்னு சொல்லி அனுப்பிவைக்கறாரு.

போற வழியில அந்த ஏழைக்கு ரொம்ப தாகம். ஒரு குளத்துலேர்ந்து தண்ணியை அள்ளிக் குடிக்கறாரு.

அப்ப விரல்லேர்ந்து மோதிரம் நழுவி குளத்துக்குள்ள விழுது. அதை ஒரு மீன் முழுங்கிடுது.

“ஐயோ, ராஜா கொடுத்த மோதிரமும் தண்ணிக்குள்ள போயிடுச்சே!”ன்னு புலம்பிகிட்டே திரும்ப ராஜா கிட்ட வர்றாரு.

ராஜாக்கு ஆச்சரியம். “இப்ப என்னப்பா ஆச்சு?”

“ராஜா! ராஜா! நீங்க கொடுத்த மோதிரம் குளத்துத் தண்ணியோட போயிடுச்சு! எனக்கு அதிர்ஷ்டமே இல்லை போலிருக்கு…”

ராஜா அவரை சமாதானப்படுத்தறாரு. “சரி! சரி! அழாதே. இந்தா இதுல கொஞ்சம் பணம் இருக்கு. வெச்சிக்க. இனிமே கவனமா இருக்கணும், புரியுதா?”

அந்த ஏழை, பணத்தை பத்திரமா மடியில் கட்டிக்கறாரு.

வீட்டுக்கு வந்ததும் பணம் பத்திரமா இருக்கணும்னு அதை அடுப்படியில புதச்சி வெக்கறாரு.

கொஞ்ச நேரம் கழிச்சி ஏழையோட வீட்டுக்கு பக்கத்து வீட்டுப் பெண் வந்து, ‘‘அண்ணே! கொஞ்சம் தீ எடுத்துக்கவா?”ன்னு கேக்குறா.

அடுப்படியில பணம் வெச்சது ஏழைக்கு மறந்துபோச்சி. “போய் எடுத்துக்கோ”ன்னு சொல்றாரு.

அடுப்பைக் கிளறும்போது பணப்பை அந்த பொண்ணு கண்ணில் பட்டுடுது. சட்டுனு எடுத்து மறைச்சி வெச்சிக்குது.

மறுநாள் பணத்தைக் காணாம இவருக்கு ஒரே அதிர்ச்சி.

“ஐயோ! இங்கதான வச்சிருந்தேன்... காணோமே! என்ன செய்யறது? திரும்பியும் ராஜா கிட்ட போய் நின்னா மரியாதை இருக்காதே… நான் குடுத்து வச்சது அவ்வளவுதானா…“அப்டீன்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு.

அப்ப வெளியே மீன்காரம்மா மீன் வித்துக்கிட்டு வராங்க. அந்த ஏழைக்கு ஒரே பசி. ஏற்கனவே வீட்டுல இருந்த கொஞ்ச காசை வைச்சு மீன் வாங்கறாரு.

வீட்டுக்குள்ள வந்து மீனை அறுத்தா… அதுல மோதிரம் இருக்கு!

காணாமல் போன அதே மோதிரம்!

“அட, என்ன ஆச்சரியம்! நான் குளத்துல விட்ட மோதிரம் இங்க இருக்கு…” சந்தோஷத்தில் கூவறாரு.

“திருடன் கிடைச்சிட்டான்! திருடன் கிடைச்சிட்டான்…”

அந்த சத்தம் பக்கத்து வீட்டுப் பெண்ணு காதில் விழுது.

அவருக்கு ஒரே சந்தோஷம். விடாம கூவிக்கிடே இருக்காரு. “திருடனே வீடு தேடி வந்துட்டான்! விடுவேனா உன்னை?”

அந்தப் பொண்ணு பயந்து போறா. ஐயயோ! நாம பணத்தைத் திருடிக்கிட்டுப் போனது அவருக்குத் தெரிஞ்சிடுச்சு… மானம் போகறதுக்குள்ள திருப்பிக் கொடுத்துடுவோம்னு வீட்டுக்கு வேகமா வாரா.

“அண்ணே! என்னை மன்னிச்சிடுங்க. பணப்பையை பார்த்தவுடனே புத்தி மாறிடுச்சி. தெரியாம தப்பு பண்ணிட்டேன்!”

பணப்பையும் கிடச்சதுல ஏழைக்கு மகிழ்ச்சி தாங்கல. இன்னும் சத்தமா கூவறாரு. “இன்னொரு திருடன் கிடைச்சிட்டான்… இன்னொரு திருடன் கிடைச்சிட்டான்...”

இது அந்த வழியா வந்த ஒருத்தர் காதில் விழுந்தது. அவரு தான் மரத்துலேந்து முத்து மாலை எடுத்தவரு. ஐயோ! மரத்துல இருந்து முத்து மாலையை எடுத்தத இவன் பார்த்துட்டான் போலிருக்கு. இவன் கத்தி ஊரைக் கூட்டுறதுக்குள்ள திருப்பிக் குடுத்துடுவோம்னு உள்ள வராரு.

“ஐயா! இந்தாங்கய்யா உங்க முத்து மாலை! மன்னிச்சிடுங்க! இதை பத்தி யார் கிட்டயும் சொல்லாதீங்கய்யா” அப்டீன்னு கெஞ்சறாரு.

காணாமல் போன எல்லாமும் கிடைச்சிடுச்சி. அந்த ஏழையின் சந்தோஷத்துக்கு அளவே இல்லாம போச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்