மாடசாமி ஒரு ஏழை விவசாயி. தனக்கிருந்த சிறிய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். மாடசாமியின் மனைவி பார்வதியும் தன் கணவரோடு சேர்ந்து விவசாய வேலைகளைக் கவனித்து வந்தார்.
மாடசாமியின் பக்கத்து வீட்டுக்காரன் குப்புசாமி. மகா கில்லாடி. கூசாமல் பொய் சொல்வார். எந்த வேலைக்கும் போகாமலேயே பிறரை ஏமாற்றிப் பிழைத்து வந்தார்.
யாரிடமாவது இரவலாக ஏதாவது ஒரு பொருளைக் கேட்டு வாங்குவார். இரவல் கேட்கும்போது, மிகவும் தயவாகப் பணிந்து கேட்பார்.
‘அய்யோ…பாவம்…!’ என்று யாராவது மனமிரங்கிக் கொடுத்துவிட்டால், போச்சு… அவ்வளவுதான். திருப்பி வாங்கவே முடியாது. பொருத்தமான பொய் ஒன்றைச் சொல்லி, தப்பித்து விடுவான்.
குப்புசாமியின் போக்குப் பிடிக்காமல் அவனது மனைவியும் பலமுறை சொல்லிப் பார்த்தாள். அவன் கேட்பதாயில்லை.
‘நீயெல்லாம் ஒரு மனுசனா… இதெல்லாம் ஒரு பொழப்பா…?’ என்று அவள் கோபித்துக்கொண்டு, தன் பிறந்த வீட்டுக்கே போய்விட்டாள்.
ஆனாலும், குப்புசாமி திருந்துவதாயில்லை.
ஊரில் மூன்று நாட்கள் மழை கொட்டோ கொட்டோவென்று கொட்டித் தீர்த்தது. எங்கும் ஒரே தண்ணீர்க் காடு.
விவசாயிகள் முகத்தில் பெருமகிழ்ச்சி. அவரவர் தோட்டத்து வேலைகளை ஆர்வமாகச் செய்யத் தொடங்கினார்கள்.
குப்புசாமிக்கும் இருப்பு கொள்ளவில்லை. செலவுக்கும் கையில் காசில்லை. என்ன செய்வது…? யோசித்தான்.
சட்டெனப் பக்கத்து வீட்டுக்கு ஓடினான்.
“ஏம்பா, மாடசாமி. என்னோட நிலத்தில தண்ணீ ரொம்பிக் கிடக்கு. வரப்பில இருந்த மரமெல்லாம் வேற விழுந்து போச்சு. கொஞ்சம் மண்வெட்டியும், கோடாரியும் கொடேன். சாயந்தரமா திருப்பித் தந்துடுறேன்…!”என்று கேட்டான் குப்புசாமி.
இவனைப் பற்றித் தெரிந்திருந்த தால், கொடுக்கலாமா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் மாடசாமி இருந்தான்.
மாடசாமியைப் பார்வதி உள்ளே கூப்பிட்டாள்.
“ஏங்க, பாத்தா ரொம்ப பாவமா இருக்கு. ஏதோ அவசரத்துக்குக் கேக்கிறாரு. கொடுங்க…” என்று மண்வெட்டியையும் கோடாரியையும் எடுத்துக் கொடுத்தாள் பார்வதி.
இரண்டையும் வாங்கிக்கொண்ட குப்புசாமி, “ரொம்ப நன்றிப்பா. நாளைக்கி திருப்பித் தர்றேன்…” என்றான்.
ஒரு மாதமாகிவிட்டது.
மண்வெட்டியையும் கோடாரியையும் குப்புசாமி திருப்பித் தரவேயில்லை.
பலமுறை மாடசாமி கேட்டுப் பார்த்து விட்டான்.
“இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு. அதை முடிச்சிட்டுத் தர்றேம்ப்பா…பொறு. என்ன ஓடியாப் போகப் போறேன்…!” என்றபடி நாட்களைக் கடத்தி வந்தான் குப்புசாமி.
ஒருநாள் -
பொறுமையிழந்த மாடசாமி, நேராய் குப்புசாமி வீட்டு வாசலில் போய் நின்றான்.
“இப்பவே என்னோட மண்வெட்டியையும் கோடாரியையும் கொடு…!” என்று கேட்டான் மாடசாமி.
குப்புசாமி கொஞ்சமும் தயங்கவில்லை.
“அட, வேலையெல்லாம் முடிஞ்சு கொடுத்திடலாமுன்னு நேத்துதான் எடுத்துக் கழுவி வச்சேன். காலையில பாத்தா உன்னோட மண்வெட்டியையும் கோடாரியையும் எறும்பு தின்னுட்டுப் போயிடுச்சு…!”முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு குப்புசாமி சொன்னான்.
மாடசாமியால் எதுவும் பேச முடியவில்லை.
மனம் நொந்துபோய் வந்த மாடசாமி, மனைவி பார்வதியிடம் குப்புசாமி நடந்ததைச் சொன்னான்.
“ஏங்க, இதைச் சும்மா விடக் கூடாது. ஊரைக் கூட்டுங்க, நியாயம் கேட்போம்…”என்றாள் பார்வதி.
ஊரும் கூடியது.
மாடசாமி நடந்ததைச் சொன்னான்.
குப்புசாமி சளைக்கவில்லை.
“நான் ஒண்ணும் பொய் சொல்லலே. நடந்த உண்மையச் சொல்றேன். வாங்கினதைக் கொடுக்கணும்னுதான் நானும் எடுத்து வச்சேன். எறும்பு தின்னுட்டுப் போயிடுச்சு. நானென்ன செய்ய…?”
அதையே திரும்பத் திரும்பச் சொன்னான்.
ஊர்ப் பெரியவர்களால் எதுவும் பேச முடியவில்லை.
மொத்தக் கூட்டமும் வாய்மூடி நின்றது.
மாடசாமியின் பக்கம் நியாயம் இருப்பதாகப் பலர் நினைத்தாலும், ‘குப்புசாமியப் பத்தித்தான் தெரியுமே…தெரிஞ்சும் ஏன் கொடுத்தான்? அவனுக்கு வேணும்தான்…!’ என்று குப்புசாமிக்கு ஆதரவாகவும் சிலர் இருந்தார்கள்.
என்ன தீர்ப்பு சொல்வதென்று ஊர்ப் பெரியவர்கள் திகைத்து நின்ற வேளையில், மாடசாமி மனைவி பார்வதி திடுதிடுவென ஓடி வந்தாள்.
“அய்யோ…எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்க…எங்க வீட்டு மாட்டுத் தொட்டியில உள்ள தண்ணீ தீப்பிடிச்சு எரியுது…!” என்று பெருங்குரலெடுத்து அலறினாள்.
மொத்தக் கூட்டமும் ‘கொல்’லென்று சிரித்தது.
“எங்கேயாச்சும் தொட்டித் தண்ணீ தீப்பிடிச்சு எரியுமா…?”என்று நக்கலாக கேட்டான் குப்புசாமி.
“இரும்பையே எறும்பு திங்கிற ஊர்ல, தண்ணீ மட்டும் தீப்பிடிக்காதோ…!”என்று பதிலுக்குக் கேட்டாள் பார்வதி.
“சபாஷ், சரியான கேள்விதான்…!” என்று மொத்தக் கூட்டமும் ஆமோதித்தது.
பதிலேதும் பேச முடியாமல், தலை குனிந்தான் குப்புசாமி.
ஓவியம்: ராஜே
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago