உலகின் முதல் விவசாயி யார்? நிச்சயம் மனிதன் அல்ல. மனிதர்களுக்கு முன்பே விவசாயம் செய்து, உணவைப் பெற்று உயிர் வாழ்ந்து வருகின்றன இலை வெட்டி எறும்புகள்!
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசிக்கின்றன இந்த குறிப்பிட்ட வகை எறும்புகள். மற்ற எறும்புகளைப் போன்றே இவற்றிலும் ராணி எறும்பு, ஆண் எறும்பு, வேலைக்கார எறும்பு என்று இருக்கின்றன. ராணி எறும்பு உருவத்தில் சற்றுப் பெரிதாக இருக்கும். இறக்கையும் உண்டு. ராணியின் வழிநடத்தலில் எறும்புக் கூட்டம் இயங்கும். முட்டையிட்டு சந்ததியை உருவாக்குவதுதான் ராணியின் பிரதான வேலை. ஒரு நாளைக்குச் சுமார் 30,000 முட்டைகள் வரை இடக்கூடியது ராணி. ஆண் எறும்பின் பணி, ராணியுடன் குடும்பம் நடத்துவது மட்டும்தான்.
வேலைக்கார எறும்புகளில் பல வகைகள் உள்ளன. உருவம் சற்றுப் பெரிதாகவும் வலிமையான தாடையும் உள்ள எறும்புகளை வீரர்கள் என்று அழைக்கிறார்கள். இந்த எறும்புகளின் பணி இலைகளை வெட்டிக்கொண்டு வந்து, புற்றில் சேர்ப்பதுதான். உருவத்தில் சிறிய வேலைக்கார எறும்புகளுக்கு ராணியைக் கவனிப்பது, புழுக்களுக்கு உணவளிப்பது, கூட்டைச் சுத்தம் செய்வது, உணவைச் சேமித்து வைப்பது, எதிரிகளிடமிருந்து புற்றைப் பாதுகாப்பது, புற்றைக் கட்டுவது என ஏராளமான பணிகள் இருக்கின்றன.
வீரர்கள் விவசாயம் செய்வதற்கான இலைகளைத் தேடிக் கிளம்பிவிடுகின்றன. புற்றுக்குச் சரியாகத் திரும்பி வரவேண்டும் என்பதற்காக ரசாயனத்தைச் சுரந்தபடியே செல்கின்றன. இலைகளைத் தேடி அலைகின்றன. சரியான இலை கிடைக்காவிட்டால், இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்கின்றன. உரிய இலை கிடைத்தவுடன் வலுவான தாடைகளால் கரகரவென்று மிக வேகமாக இலைகளை வெட்டுகின்றன. இலைகளை வெட்டும்போது எதிரிகள் தாக்காமல் இருக்கவும், இலைகளில் எதிரிகளின் முட்டைகள் ஒட்டிக்கொண்டிருப்பதைப் பரிசோதிக்கவும் சில எறும்புகள் இருக்கின்றன!
ஒவ்வொரு எறும்பும் தன்னைவிட 50 மடங்கு எடையுடைய இலையைத் தூக்கிக்கொண்டு வேகமாகப் புற்றை நோக்கித் திரும்பும். அப்போது பார்த்தால் இலைகள் நடப்பது போலத் தோன்றும்!
எறும்புப் புற்று பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முட்டைகள் இட, புழுக்களைப் பராமரிக்க, விவசாயம் செய்ய, உணவைச் சேமிக்க, தூங்க என்று எல்லாவற்றுக்கும் தனித் தனி அறைகள். இலைகளுடன் நுழையும் எறும்புகள் இருளடைந்த பகுதியை நோக்கிச் செல்கின்றன. அங்கே இலைகளைத் தாடைகளால் வெட்டி, நசுக்கிப் போடுகின்றன. உமிழ்நீரையும் ரசாயனத்தையும் இலை கூழ் மீது பாய்ச்சுகின்றன. பிறகு மீண்டும் இலைகளை வெட்டக் கிளம்பிவிடுகின்றன.
இலை கூழ் நொதிக்க ஆரம்பிக்கும். அதிலிருந்து சில நாட்களில் பூஞ்சைகள் உருவாகும். அந்தப் பூஞ்சைகள்தான் எறும்புப் புழுக்களின் உணவு. விவசாயம் செய்த பூஞ்சைகளைத் தவிர வேறு எந்த உணவையும் இலை வெட்டி எறும்புகள் புழுக்களுக்குக் கொடுப்பதில்லை! பெரிய எறும்புகள் பூஞ்சைகளுடன் இலைகளில் உள்ள சாற்றையும் உண்கின்றன.
எறும்புகளால்தான் பூஞ்சைகளே உருவாகின்றன. அதற்கு நன்றிக்கடனாக நச்சு இலைகளாக இருந்தால், எறும்புகளுக்குக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன பூஞ்சைகள். இதன் மூலம் எறும்புகளின் உயிர் காப்பாற்றப்படுகிறது. விஷப் பூஞ்சைகள் உருவாகிவிட்டால் அவற்றை அப்புறப்படுத்தும் வேலைகளை உடனே செய்கின்றன வேலைக்கார எறும்புகள். விவசாயக் கழிவு, இறந்த எறும்புகள் போன்றவற்றையும் இரவு நேரங்களில் சுத்தம் செய்துவிடுகின்றன.
ஓர் எறும்புப் புற்றில் சுமார் 50 லட்சம் இலைவெட்டி எறும்புகள் வசிக்கின்றன. எறும்பு காலனி ஒரு சிறிய கார் அளவுக்குப் பெரியதாக இருக்கும். ராணி எறும்புதான் எறும்பு காலனிக்கு எல்லாமே. ராணி இறந்துவிட்டால் மற்ற எறும்புகளும் விரைவில் இறந்துவிடுகின்றன.
மழைக்காடுகளின் சூழலியலைக் காப்பதில் இலைவெட்டி எறும்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மிகச் சிறந்த சமூக வாழ்க்கை வாழும் எறும்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. கூட்டு முயற்சி, வேலைப் பகிர்வு, சுறுசுறுப்பு, விடாமுயற்சி போன்றவற்றை நாமும் கற்றுக்கொள்ளலாம் இல்லையா?.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago