அந்தக் காட்டில் காகம், நரி, சிறுத்தை மூன்றும் நண்பர்களாக இருந்தன. மூன்றுமே முழுச் சோம்பேறிகள். வேட்டைக்குப் போகாமலேயே இரை கிடைக்க வேண்டும், கிடைக்கிற இரையைத் தின்றுவிட்டுத் தூங்க வேண்டும். இதை மட்டுமே மூன்றும் செய்துவந்தன.
நாளாக நாளாகக் காட்டில் இரை கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உட்கார்ந்த இடத்திலேயே இரை கிடைப்பதில்லையே… என்ன செய்யலாம் என மூன்றும் குழப்பத்தில் திண்டாடின.
அப்போது காகம் ஒரு யோசனை சொன்னது.
“காட்டு ராஜாவான சிங்கத்துக்கு மட்டும் தினமும் நல்ல இரை கிடைத்து விடுகிறது. நாம் மூவரும் சிங்க ராஜாவிடம் வேலை கேட்டுப் போகலாமா…?”
“அய்யோ…நம்மளால வேலை எதுவும் செய்ய முடியாது…”என்று அவசரமாக மறுத்தது சிறுத்தை.
“உன்னை யாரு வேலை செய்யச் சொன்னது…? வேலை செய்யிற மாதிரி நடிச்சா போதும்” என்றது நரியும்.
மூன்றும் யோசித்து ஒரு திட்டம் தீட்டின.
அடுத்த நாள் –
சிங்க ராஜாவின் குகையருகே பதுங்கிப் பதுங்கிப் போனது நரி. இதைப் பார்த்த சிங்க ராஜா, “என்ன நரியாரே… யாரைக் கண்டு பயந்து இப்படிப் பதுங்கிப் போறீங்க…?” என்றது.
“வேறு யாரைக் கண்டு…? நம்ம காகம், சிறுத்தையாரின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்….!”என்றது நரி.
“நீ எவ்வளவு பெரிய புத்திசாலி; நீ போய் காகத்துக்கும் சிறுத்தைக்கும் பயப்படலாமா…?” என்று சிங்கம் கேட்டது.
“சரியாகத்தான் கேட்டீர்கள், சிங்க ராஜா. நீங்கள் நினைப்பதுபோல் அந்தச் சிறுத்தையும் காகமும் சாதாரணமானவை அல்ல, அவை இரண்டுக்கும் மிகப் பெரிய சக்தி ஒன்று உள்ளது…” என்றது நரி.
“அப்படியென்ன சக்தி…?” ஒன்றும் புரியாமல் கேட்டது சிங்கம்.
“என்ன சிங்க ராஜா, அப்படிக் கேட்டுட்டீங்க. அந்தக் காகம் உட்கார்ந்த இடத்திலேயே, காட்டில் எந்த மூலையில், எந்த விலங்கிருக்கிறது என்பதைத் தனது சின்ன அசைவிலேயே கண்டுபிடித்துவிடும். அதேபோல், அந்தச் சிறுத்தை லேசாய் ஒரு உறுமு உறுமினாலே போதும். எந்த விலங்கும் தப்பித்து ஓட முடியாமல் உணவாகி விடும்…!”என்றது நரி.
சிங்க ராஜா இவற்றை உண்மையென்று நம்பிவிட்டது. ‘ஆகா, இப்படிப்பட்ட இருவர் நம் அருகில் இருந்தால் நமக்கு மிகுந்த உதவியாக இருக்குமே!’ என்று ஆசைப்பட்டது சிங்கம்.
சிங்க ராஜாவின் மனவோட்டத்தைப் புரிந்துகொண்ட நரி, “சிங்க ராஜா, விருப்பம் இருந்தால், அவர்கள் இருவரையும் தங்களின் உதவியாளராக இருக்க சம்மதிக்க வைத்துவிடுகிறேன்” என்றது.
“அப்படியே ஆகட்டும்” என்று தலையை ஆட்டியது சிங்க ராஜா.
சொல்லிவிட்டுப் போன மறுநாள் –
தனது இரு நண்பர்களோடு வந்து சிங்க ராஜாவின் குகையிலேயே தங்கி விட்டது நரியும்.
தூங்கி எழுந்ததும் காகம் இறக்கையைப் படபடவென அடித்தது. சோம்பல் முறித்தபடி சிறுத்தை உறுமியது. பிறகு இரண்டும் கண்களை மூடி அப்படியே படுத்துக்கொண்டன.
இதுதான் சமயமென்று நரியும், “சிங்க ராஜா, வடக்கு மூலையிலே ஏதோ பெரிய விலங்கு உங்களுக்காகக் காத்திருக்கு. அதைத்தான் இருவரும் உங்களுக்குத் தனது செய்கையால் உணர்த்துகிறார்கள்” என்று சொன்னது.
சிங்க ராஜாவும் வடக்கு மூலை நோக்கி பாய்ந்து சென்றது. ஒரு மானை வேட்டையாடி இழுத்து வந்தது.
‘ஆகா, நாம ஏதோ சொல்லப் போக, அதுவும் பொருத்தமா ஏதோ ஒண்ணு மாட்டிக்கிட்டது!’ என்று உள்ளூர சந்தோஷப்பட்டுக்கொண்டது நரி.
சிங்க ராஜாவோடு சேர்ந்து மூன்றும் மானைத் தின்று முடித்தன. தினமும் வகைவகையான உணவு உட்கார்ந்த இடத்துக்கே தேடி வந்து கிடைத்தால்? காகம், நரி, சிறுத்தையின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை.
மூன்றுக்கும் ஒருநாள் ஒட்டகத்தின் கறி சாப்பிடும் ஆசை வந்தது. மேற்குத் திசையில்தான் ஒட்டகங்கள் இருக்கும். அந்தத் திசை பார்த்து சிறுத்தை உறுமியது. காகமும் இறக்கையைப் படபடவென அடித்தது.
“ம்…கிளம்புங்கள்…சிங்க ராஜா…” என்று நரி சிங்க ராஜாவை உசுப்பி விட்டது.
தூரத்தில் ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த சிங்க ராஜா பாய்ந்தோடியது. போன வேகத்தில் ஒரு பள்ளமிருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்தது சிங்க ராஜா.
“அய்யோ…கால் போச்சே…” என்ற சிங்க ராஜாவின் அலறல் கேட்டு, ஒட்டகங்கள் பயந்தோடின. ஒரு ஒட்டகம் மட்டும் சிங்கத்தின் அருகே வந்தது.
காலில் அடிபட்டுத் துடித்துக் கொண்டிருந்த சிங்க ராஜாவைப் பார்த்து வருத்தப்பட்டது, அந்த ஒட்டகம்.
நடக்க முடியாமல் அவதிப்பட்ட சிங்க ராஜாவை, ஒட்டகம் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு, குகையை நோக்கி வந்தது.
‘ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு சிங்கம் வரும்…’ என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மூன்றுக்கும் பெருத்த ஏமாற்றம்.
குகையில் சிங்க ராஜாவை விட்டுச் சென்ற ஒட்டகம், காலில் அடிபட்ட இடத்தில் இலைதழைகளைப் பறித்து வந்து மருந்துபோட்டது. காயம் குணமாகும்வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டது.
தனக்கு உதவி செய்த ஒட்டகத்தை, தனது நண்பனாகவே ஏற்றுக்கொண்டது சிங்க ராஜா.
சிங்க ராஜாவுக்கு உதவி ஏதும் செய்யாமல், ‘அய்யோ, ஒட்டகக் கறி கிடைக்காமப் போச்சே…’ என்று ஏங்கிக் கிடந்தன மூன்றும்.
நாட்கள் கடந்தன.
சிங்க ராஜாவுக்கோ அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. முன்போல் அதனால் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. இதுதான் சரியான சமயமென்று காகம், நரி, சிறுத்தை மூன்றும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டன.
மூன்றும் சிங்க ராஜாவிடம் வந்தன.
“சிங்க ராஜா, நீங்கள் வேட்டைக்குச் செல்ல முடியாமல் இப்படிப் பசியோடிருப்பதைப் பார்க்க வருத்தமாக இருக்கு. நீங்கள் என்னைத் தின்று பசியாறிக் கொள்ளுங்கள்…”என்றது காகம்.
“ஆமாம், சிங்க ராஜா. எனக்கும் வருத்தமாக இருக்கு. காகத்தின் கறி உங்களுக்குப் பத்தாது. என்னைச் சாப்பிடுங்கள்” என்றது நரியும்.
“இருவரின் கறியும் உங்களுக்குப் போதாது. என்னைச் சாப்பிடுங்கள்” என்றது சிறுத்தை.
மூவர் சொல்வதையும் கேட்டுக் கொண்டிருந்த ஒட்டகம், “வேண்டாம், இந்த மூவரும் உங்களின் நீண்ட நாள் உதவியாளர்கள். என்னைச் சாப்பிடுங்கள். நீங்கள் நால்வருமே பசியாறலாம்” என்று சொன்னது.
ஒட்டகம் சொன்னதும், உடனே மற்ற மூன்றும், “ஆமாம், சிங்க ராஜா…அப்படியே செய்யலாம்…!”என்று ஒரே குரலில் ஆமோதித்தன.
இப்படிச் சொன்னதும் சிங்க ராஜாவுக்கு இவர்களின் திட்டம் புரிந்துபோனது.
“நீங்கள் மூவரும் என் மேல் வைத்திருக்கும் அளவில்லா அன்புக்கு மிக்க நன்றி. அனைவருடைய அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல் என்னால் வேட்டையாட முடியாத நிலையில், நீங்கள் சொன்னது போல ஒவ்வொருவரையும் தினமும் தின்று நான் பசியைப் போக்கிக்கொள்கிறேன்…”என்று சிங்க ராஜா சொன்னதுதான் தாமதம், தலைதெறிக்க ஓட்டமெடுத்தன நரியும் சிறுத்தையும். பறந்தோடி மறைந்தது காகம்.
ஒட்டகம் மட்டும் சிங்க ராஜாவின் அருகிலேயே இருந்தது. அன்று முதல் சிங்க ராஜாவும் ஒட்டகமும் நெருங்கிய நண்பர்களாக சேர்ந்து வாழ்ந்தன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago