வீட்டுச் சுவரில் கிறுக்கி விளையாடி மகிழ்ந்திருப்பீர்கள் இல்லையா? உங்களைப் போலவே அந்தக் குட்டிப் பையனும் கிறுக்கி வைத்து ஏதாவது ஒன்றை வரைவான். பொழுதுவிடிந்தால் போதும் ஸ்கெட்ச் பேனாக்களில்தான் விழிப்பான். ஒரே மாதிரியான வகுப்பறைச் சூழல் அந்தச் சிறுவனுக்குப் பிடிக்கவே இல்லை.
ஆனால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத உருவங்களையெல்லாம் கற்பனையாக வரைவதில் அந்தச் சிறுவனுக்கு அலாதிப் பிரியம். ஜன்னலோரம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்கும் விஷயங்களையெல்லாம் ஓவியமாகத் தீட்டுவான்.
கண்டிப்பான அவனது தந்தையைச் சிறு வயதில் ரோமன் செனட்டர் மாதிரி வரைந்தும், கணித ஆசிரியரைப் புலிக்குட்டி போலவும் வரைந்து தனது கற்பனை ஆற்றலை விந்தையாகக் காட்டினான் அந்தச் சிறுவன். சிறுவனாக இருந்தபோது இப்படி ஓவியம் தீட்டுவதையே உயிராக நினைத்த அந்தச் சிறுவன், பின்னர் நாடு போற்றும் கேலிச்சித்திரக்காரராகப் பெயர் பெற்றார். அவர் யார் தெரியுமா? ஆர்.கே. லக்ஷ்மண்!
சிங்கம், முயல் போன்ற விலங்குகள் பேசுகின்ற, பாடுகின்ற கார்ட்டூன் படங்களைப் பார்த்து ரசிக்கிறீர்கள் அல்லவா? வித்தியாசமான உடையும், விசேஷ சக்தியும் கொண்ட கதாபாத்திரங்கள் தோன்றும் காமிக்ஸ் புத்தகங்களும் உங்களுக்குப் பிடித்தமானவைதானே?
அதேபோல், சாய்வு நாற்காலியில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டிருக்கும் பெரியவர்கள், திடீரென்று வீடே அதிருமாறு சிரிப்பதையும் பார்த்து திடுக்கிட்டிருப்பீர்கள். வேறொன்றுமில்லை, அரசியல் கேலிச் சித்திரம் ஒன்றைப் பார்த்துதான் பெரியவர்கள் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள்.
உங்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன் போன்றதுதான் அரசியல் கேலிச் சித்திரமும். ஆனால் அதில் பொதிந்திருக்கும் செய்தி (பெரும்பாலும்) பெரியவர்களுக்கானது! உலக நடப்புகள், உள்ளூர் செய்திகள், சமூக நிகழ்வுகள் என்று பல்வேறு விஷயங்களை நகைச்சுவையாக விமர்சிப்பவை அந்தக் கேலிச் சித்திரங்கள்.
புகழ்பெற்ற பல கார்ட்டூனிஸ்ட்டுகள் உலகமெங்கும் இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்த உலகை விட்டு மறைந்த ஆர்.கே. லக்ஷ்மண் அவர்களில் ஒருவர்!
ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் எனும் ஆர். கே. லக்ஷ்மண் கர்நாடகா மாநிலம் மைசூரில் 1921-ல் பிறந்தவர். அவரது தந்தை தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார். ஆர்.கே. லக்ஷ்மணின் 5 சகோதரர்களில், புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணும் ஒருவர். இருவருக்கும் இடையில் 15 வயது வித்தியாசம். ஆர்.கே. லக்ஷ்மணின் ஓவியத் திறமையை ஊக்குவித்தவர்களில் அவரும் ஒருவர். பள்ளிப் படிப்பு முடிந்ததும், மும்பையில் உள்ள ‘ஜே.ஜே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் அப்ளைடு ஆர்ட்’ எனும் ஓவியப் பள்ளியில் சேர்ந்து முறைப்படி ஓவியம் பயில விண்ணப்பித்தார்.
எனினும், அவருக்குப் போதிய தகுதிகள் இல்லை என்று ஓவியப் பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. அதன் பின்னர், மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயின்றார். ஓவியத் திறமையை மட்டும் விடவே இல்லை. ‘ஸ்வராஜ்யா’ போன்ற இதழ்களில் கார்ட்டூன் வரைந்தார். அனிமேஷன் படங்களிலும் பணிபுரிந்தார்.
மைசூர் மகாராஜா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குத் தன் அண்ணன் ஆர்.கே. நாராயண் எழுதி அனுப்பும் கதைகளுக்கு ஓவியம் வரையத் தொடங்கினார். ‘ஸ்வதந்திரா’ போன்ற இதழ்களுக்கு அப்போதே அரசியல் கேலிச்சித்திரங்களும் வரைந்தார்.
மும்பையிலிருந்து வெளிவந்த ‘தி பிரெஸ் ஃப்ரீ ஜர்னல்’ எனும் நாளிதழில் முதன்முதலாகக் கேலிச் சித்திரக்காரராக முழு நேரப் பணியில் சேர்ந்தார் ஆர். கே. லக்ஷ்மண். அதன் பின்னர், ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் பணியில் சேர்ந்த பின்னர் அவர் உருவாக்கியதுதான் ‘காமன் மேன்’ எனும் பொதுஜனக் கதாபாத்திரம்.
நாட்டு நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்று பல விஷயங்கள் பற்றிக் கருத்து சொல்லும் கதாபாத்திரம் அது. அதுவும் மென்மையாக, சம்பந்தப்பட்டவர் காயமுறாத வகையில் வரையப்படும் கேலிச் சித்திரங்களைப் ‘பொது ஜன’த்தை வைத்தே வரைந்தார் ஆர்.கே. லக்ஷ்மண். இந்தக் கதாபாத்திரத்தை வைத்து தொலைக்காட்சித் தொடரும் வெளியாகிப் புகழ்பெற்றது.
பத்மபூஷண், பத்ம விபூஷண், ராமன் மகசேசே உள்ளிட்ட உயரிய விருதுகள் அவரைத் தேடி வந்தன. அவரால் கேலிச்சித்திரமாக வரையப்பட்ட தலைவர்களும் அவரை உயர்வாகவே மதித்தனர். இத்தனை சாதனைகளையும் அவர் தனது ஓவியத் திறன் மூலம் செய்துகாட்டினார். சிறு வயதில் ஓவியங்கள் வரைவதில் காட்டிய ஆர்வமும், ஈடுபாடும்தான் அவரை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்றன.
உங்களைப் போன்ற குழந்தைகளுக்குத் தனது சாதனைகள் மூலம் ஒரு செய்தியையும் அவர் விட்டுச் சென்றிருக்கிறார். அது என்ன தெரியுமா? ஓவியமோ, விளையாட்டோ, இசையோ எதுவாக இருந்தாலும் அதில் முழுமூச்சுடன், ஆர்வத்துடன் முயற்சியுங்கள். திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேறுங்கள் என்பதுதான் அது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago