நம் உருவமே மறைந்து போகும் அளவுக்கு இருந்தாலும், அப்பாவின் சட்டையை மாட்டிக்கொண்டும், அம்மாவின் செருப்பைப் போட்டுக்கொண்டும் நீங்கள் நடப்பீர்கள் அல்லவா? கொஞ்சம் வளர்ந்த பிறகு என்ன செய்வீர்கள்? பெரியவர்கள் போல வண்டி ஓட்ட வேண்டும் என்று நினைப்போம், டீச்சர் போலப் பாடம் நடத்த வேண்டும், டாக்டர் போல ஊசிப் போட வேண்டும் என்று நினைப்போம். எப்பொழுதும் பெரியவர்கள் செய்யக்கூடிய செயல்கள் மீதுதான் உங்களுக்கு ஆர்வம் இருக்குமில்லையா?
இந்த ஆர்வத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு களமிறங்கியிருக்கிறது கிட்ஸானியா (kidzania). இங்கே பெரியவர்கள் செய்யக்கூடிய எல்லா செயல்களையும் நீங்களும் செய்யலாம். கிட்ஸானியாவில் பெரியவர்களுக்கு அனுமதி இல்லை. முழுக்க முழுக்க உங்களைப் போன்ற குட்டிப் பசங்கதான் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தால், நீங்களும் அவர்களில் ஒருவராக மாறிவிடலாம்! ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம், வாருங்கள்!
பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது இல்லையா? அதனால் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு நேரே வங்கிக்குச் செல்ல வேண்டும். அங்கே ஒரு பாஸ்புக், சில ரூபாய் நோட்டுகள் தருவார்கள். கிட்ஸானியா வரைபடத்தை வைத்துக்கொண்டு, நமக்கு எங்கே செல்ல விருப்பமோ அங்கே எல்லாம் செல்லலாம். தேவையானவற்றை வாங்கலாம். சாப்பிடலாம்!
நீங்க டாக்டராகலாம்
முதலில் மருத்துவனைக்குச் செல்வோம். அங்கு மருத்துவருக்கு உரிய கோட் மாட்டிக்கொள்ள வேண்டும். ஆபரேசன் தியேட்டருக்குள் ஒரு மனித பொம்மை வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பொம்மைக்கு ஊசிப் போட்டுப் பார்க்கலாம். பற்களை ஆராயலாம். வயிற்றைத் திறந்தால், உள்ளிருக்கும் பாகங்கள் அப்படியே தெரியும். கத்தரியை எடுத்து ஆபரேஷன் செய்யலாம். தையல் போட்டு மூடி விடலாம். ரத்தம், குளுக்கோஸ் ஏற்றலாம். ஆசை தீர டாக்டராக இருந்துவிட்டு வெளியே வரலாம்.
பைலட்டாகலாமா?
அட! அங்கே ஒரு விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பைலட்டாக வேண்டும் என்று எத்தனை நாள் கனவு கண்டிருக்கிறோம். பைலட்டுகள் உட்கார்ந்து விமானத்தை ஓட்டுகிற காக்பிட் பகுதியில் நீங்களும் உட்கார்ந்து விமானத்தை இயக்கலாம்.
எதிரே உள்ள திரையில் விமானம் பறந்து செல்வது போலக் காட்சிகள் ஓடும். ஏர்ஹோஸ்டஸ் ஆக நினைப்பவர்கள் சீருடையை மாட்டிக்கொண்டு வேலை செய்யலாம். இதே விமானத்தில் உணவுவகைகளை எடுத்து வந்து, பயணிகளாக அமர்ந்திருக்கும் குழந்தைகளிடம் கொடுக்கலாம்.
ஓட்டலில் வேலை
அடுத்து கால்பந்து வீரராக மாறலாமா? அதற்குள் பசி எடுக்கிறதே? சரி, உணவகத்துக்குச் செல்வோம். உணவகத்தில் பில் போடுபவர், சாப்பாடு தயார் செய்பவர், உணவு கொண்டு வந்து கொடுப்பவர் என்று எல்லோருமே உங்களைப் போல இங்கு விளையாட வந்த குழந்தைகள்தான். அவரவர் வேலைக்கு ஏற்ற உடையை அணிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் மும்முரமாக வேலையில் இருக்கின்றனர்.
பணத்தைக் கொடுத்து, உணவு வாங்கிச் சாப்பிட்ட பிறகு… நாமும் உணவகத்தில் ஒரு வேலையைச் செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது இல்லையா? பத்து நிமிடங்கள் உணவைத் தயார் செய்து கொடுத்துவிட்டுக் கிளம்பும்போது, நாம் செய்த வேலைக்குப் பணமும் தருகிறார்கள்! அடடா, நீங்களும் சம்பாதித்துவிட்டீர்கள்!
தீயணைப்பு வீரராக…
அடுத்து எங்கே என்று யோசிக்கும்போது, எதிரே ஒரு கட்டிடத்தில் தீப்பிடித்து எரிகிறது. நம்மைப் போல பத்துப் பேர் ஃபயர் எஞ்சினில் இருந்து பைப் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறார்கள். நீங்களும் ஒரு பைப்பைப் பிடித்து, தீயை அணைத்துவிட்டுக் கிளம்பலாம். அதற்கு முதலில் தீயணைப்புப் படை வீரர் சீருடையும் தொப்பியும் அணிந்துகொள்ள வேண்டும். சிறிது நேரம் தீயை அணைத்துவிட்டு, ஃபயர் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்று பார்த்துவிட்டுக் கிளம்பினால்… நீங்களும் ஒரு தீயணைப்பு வீரர்தான்!
அங்கே ஒருவர் கேமராவில் ஷுட் செய்துகொண்டிருக்க, எதிரே ஒரு பெண் மைக்கைப் பிடித்தபடி செய்தி சொல்லிக்கொண்டிருந்தார்… இன்னொரு இடத்தில் கேட்பரி சாக்லெட் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை நாமே செய்து பார்க்கும் விதத்தில் அமைத்திருக்கிறார்கள்.
ஏராளமான செயல்கள்
சினிமா எப்படி எடுக்கிறார்கள்? ஓவியம் வரைவது எப்படி?, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இயங்குவது எப்படி?, கட்டிடம் கட்டுவது எப்படி?, டப்பாவாலாக்கள் எப்படி உணவைச் சேகரித்துச் சரியான இடத்தில் சேர்க்கிறார்கள்? காருக்கு பெட்ரோல் போட்டு எப்படி ஓட்டுவது?, காவல்துறை வேலை செய்வது எப்படி? ரேடியோ ஸ்டேஷன் இயங்குவது எப்படி? வங்கி இயங்குவது எப்படி? ... என்று இன்னும் இன்னும் ஏராளமான விஷயங்கள் இங்கே அணிவகுத்து இருக்கின்றன.
கிட்ஸானியாவின் சிறப்பு
கிட்ஸானியாவின் சிறப்பம்சமே விஷயங்களைக் கற்றுக்கொள்வதுதான். இதுவரை படித்த, பார்த்த விஷயங்களை இங்கே நாமே செய்து பார்க்க முடிகிறது. ஒரே நாளில் டாக்டராகவும், எஞ்சினியராகவும், பத்திரிகையாளராகவும், போலீஸ்காரராகவும், விற்பனைப் பிரதிநிதியாகவும், கேஷியராகவும், சர்வராகவும் மாற முடிகிறது.
ஒவ்வொரு துறை குறித்த விஷயங்களைத் தெரிந்துகொள்வதோடு, அது எப்படி இயங்குகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவும் முடிகிறது. குழந்தைகளாகிய நமக்கு நம் விருப்பப்படி செயல்படவும் முடிவெடுக்கவும் வைக்கிறது கிட்ஸானியா.
எப்படி வந்தது?
1999-ம் ஆண்டு மெக்ஸிகோவில், சேவியர் லோபஸ் அன்கோனா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது கிட்ஸானியா. இன்று இந்தியா உட்பட 14 நாடுகளில் இயங்கி வருகிறது. 3.1 கோடி மக்கள் கிட்ஸானியாவுக்கு வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள். குழந்தைகளை கிட்ஸானியாவுக்குள் அனுப்பிவிட்டு, பெற்றோர் வெளியில் அமர்ந்து திரைகளில் தங்கள் குழந்தைகளின் செயல்களைப் பார்த்து ரசிக்கலாம். கடைகளுக்குச் செல்லலாம்.
2013-ம் ஆண்டு முதல் மும்பையிலும் கிட்ஸானியா இயங்கி வருகிறது. 4 வயது முதல் 14 வயது குழந்தைகளுக்கு அவரவர் வயதுக்கு ஏற்றாற் போல விஷயங்களை வடிவமைத்திருக்கிறார்கள். மும்பைக்குச் செல்லும் வாய்ப்புள்ள குட்டீஸ்கள், கிட்ஸானியாவுக்குள் ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம்! ஏனென்றால் இது பொழுதுபோக்கும் தீம் பார்க் இல்லை, பொது அறிவை வளர்க்கும் தீம் பார்க்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago