முள்ளிப்பட்டி ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமத்தின் வடக்கு மூலையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு குருவி கூடு கட்டி வசித்து வந்தது.
ஒருநாள்…
அந்தக் கூட்டிலிருந்து ‘க்கீ…க்கீ…’ என்று சத்தம் வந்தது. அம்மா குருவி அடைகாத்த முட்டையிலிருந்து மூன்று குருவிக் குஞ்சுகள் வெளியே வந்தன.
அம்மா குருவிக்கு ரொம்ப சந்தோசம். இறக்கை படபடக்க குஞ்சுகளைச் சேர்த்து அணைத்துக் கொண்டது.
ஒரு குருவிக்குஞ்சு மட்டும் தலையை மேலே தூக்கி ஆட்டியது.
“ உனக்குப் பசிக்கிதாடா செல்லம்…” என்றது அம்மா குருவி.
“ஆமா…” என்றது குருவிக்குஞ்சு.
உடனே, அம்மா குருவி பறந்துபோய்க் கொஞ்சம் அரிசியைக் கொத்திக் கொண்டுவந்து கொடுத்தது. குருவிக்குஞ்சியும் லபக் லபக்கெனக் கொத்தித் தின்றது. மற்ற இரு குஞ்சுகளுக்கும் ஒரு அரிசிமணிகூட மிச்சம் வைக்கவில்லை.
இரண்டு நிமிடம்கூட ஆகியிருக்காது. திரும்பவும் தலையைத் தூக்கி ஆட்டியது அதே குருவிக்குஞ்சு.
“என்ன…?” என்று கேட்டது அம்மா குருவி.
“எனக்கு இன்னும் பசிக்கிது” என்றது குருவிக்குஞ்சு.
அம்மா குருவி திரும்பவும் இரை தேடிப் பறந்தது. எங்கெல்லாமோ இரை தேடி அலைந்தது. ஒன்றும் கிடைக்கவில்லை.கொஞ்ச நேரம்வரை பொறுத்திருந்து பார்த்தது குருவிக்குஞ்சு. அம்மா குருவி வரவேயில்லை.
“எனக்கு ரொம்பப் பசிக்கிது. நா இரை தேடப் போறேன்…”என்றது பசித்த குருவிக்குஞ்சு.
“பொறு…அம்மா வந்துடுவாங்க…” என்றன மற்ற இரு குஞ்சுகளும்.
“நீங்க வராட்டிப் போங்க…நா போறேன்” என்றபடி இறக்கையை அடித்துப் பறக்க ஆரம்பித்தது குருவிக்குஞ்சு.
மனம்போன போக்கில் பறந்துபோனது. ஒரு இரையும் கண்ணில் படவில்லை. ஊரைக் கடந்து ரொம்ப தூரத்துக்கு வந்துவிட்டது குருவிக்குஞ்சு.
பக்கத்து ஊர் கோயிலில் பொங்கல் வைத்துவிட்டு, எல்லாரும் சாமி கும்பிடக் கோயிலுக்குள் போயிருந்தார்கள். பெரிய அண்டா, அண்டா நிறைய பொங்கச் சோறு. வெல்லம், ஏலக்காய் கலந்த கமகம வாசனை.
குருவிக்குஞ்சுக்கு அடிச்சது லக்கி. நல்ல பசி வேறு. கொஞ்சங்கொஞ்சமா சாப்பிட நேரமில்லை. அதற்குள் அவர்கள் வந்துவிட்டால் மாட்டிக் கொள்வோமே…! என்ன செய்வது…? அண்டா பக்கத்தில போயி ‘ஆ’ன்னு பெரிசா வாயைத் திறந்தது. ஒரே முழுங்குதான். அப்படியே அண்டாவோடு சேர்த்து மொத்தப் பொங்கலையும் முழுங்கிட்டு, அங்கிருந்து ஓடி வந்துவிட்டது.
“யப்பா…இப்பத்தான் லேசா பசி அடங்கியிருக்கு…!”ன்னு சொல்லிக்கொண்டே, தண்ணீர்க் குடிக்க குளக்கரைக்குப் போனது.
அண்டாவோட பொங்கலை முழுங்கியதால், குருவிக்குஞ்சுயோட வயிறு அண்டா மாதிரி பெரிசாகிப் போயிருந்தது.
குளக்கரையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு குடத்தோடு ஒரு அக்கா வந்தாள். குருவியின் வயிற்றைப் பார்த்து, அடக்க முடியாமல் சிரித்தாள்.
“ஏன்..என்னைப் பார்த்து சிரிச்சே…?”என்று கேட்டது குருவி.
சிரிப்பை அடக்கியபடி, “ இத்துனூண்டு குருவி நீ, உன்னோட வயிறு மட்டும் அண்டா மாதிரி இவ்வளவு பெரிசா இருக்கு…!” என்றாள் அக்கா.
“என்னைப் பாத்தா ஒனக்குச் சிரிப்பு வருதா. ம்ம்… நா நெனச்சேன், உன் குடத்தோட சேர்த்து, மொத்தக் குளத்துத் தண்ணீயையும் குடிச்சிடுவேன்…” என்று கோபமாகச் சொன்னது குருவி.
‘குஞ்சுகுருவிக்குக் கோபத்தைப் பாரேன்…’ என்று மனசுக்குள் நினைத்தபடி,
“முடிஞ்சா குடிச்சுப் பாரேன்…” என்றாள் அந்த அக்கா.
சொன்ன அடுத்த நிமிடமே தலையைச் சிலுப்பிய குருவி, ‘லபக்’என்று அக்கா இடுப்பில் வச்சிருந்த குடத்தோட சேர்த்து, மொத்தக் குளத்துநீரையும் முழுங்கிவிட்டது.
அக்கா வெலவெலத்துப் போய் நின்றாள்.
அண்டா பொங்கல், குடத்தோட குளத்துநீரையும் குடித்த களைப்பில், பக்கத்தில் இருந்த வேப்பமரத்தடியில் லேசாய்க் கண்மூடிப் படுத்தது குருவி.
தூங்க முடியாமல் ஒரே சத்தம். வேப்பம்பழம் மரத்திலிருந்து ‘பொத்..பொத்..’தென்று தலையில்வேறு விழுந்தது.
கண்ணைத் திறந்துப் பார்த்தது குருவி. ஏகப்பட்ட குரங்குகள் வேப்பமரத்தில் விளையாடிக் கொண்டிருந்தன.
“ நா தூங்கணும். வேற பக்கமாப் போயி விளையாடுங்க…” என்று அதட்டியது குருவி.
குரங்குகள் எதுவும் சட்டை செய்யவில்லை. “ நீ வேணா வேற பக்கமாப் போயி படு…”என்று சொல்லிவிட்டு, விளையாட்டைத் தொடர்ந்தன.
குருவிக்குப் பொல்லாத கோபம் வந்துவிட்டது. “இப்ப நீங்க போகலே, வேப்பமரத்தோட சேர்த்து, உங்களையும் முழுங்கிடுவேன், ஜாக்கிரதை…” என்று மிரட்டியது குருவி.
“முடிஞ்சா… முழுங்கிக்க…!” என்றன குரங்குகள்.
படபடவென இறக்கையை அடித்த குருவி, வேப்பமரத்தோடு மொத்தக் குரங்குகளையும் சேர்த்து விழுங்கிவிட்டது.
‘ச்சே…கொஞ்ச நேரம் தூங்க முடியல…’ என்று அலுத்துக் கொண்டே, பக்கத்திலிருந்த கீற்றுக் கொட்டகை நிழலில் போய் உட்கார்ந்தது.
ஒரு கொல்லன் தனது பட்டறையில் அருவாளுக்குச் சாணை பிடித்துக் கொண்டிருந்தான். ‘குர்…குர்ர்..’ன்னு சாணைப் பிடிக்கிற சத்தமும், அதிலிருந்து கிளம்பிய நெருப்புப் பொறியும் குருவியின் கண்ணை உறுத்தின.
“ஐயா… கொஞ்சம் வேலையை நிறுத்துங்க. எனக்குக் கண்ணு கூசுது…” என்றது குருவி.
அந்தக் கொல்லனோ, “ என்னோட வேலையே இதுதான். நீ வேற பக்கமா போ”ன்னு சொன்னார்.
“வேலையை நிறுத்தமாட்டீங்களா…? நா நினைச்சா கையிலே இருக்கிற அருவாளோட சேர்த்து, இந்தப் பட்டறையை முழுங்கிடுவேன்…” என்றது குருவி.
“ம்…இத்துனூண்டு குருவி நீ. ஒனக்கு அவ்வளவு பலமா..? எங்கே முழுங்கு, பாக்கலாம்…” என்றார் கொல்லன்.
கோபமாய் எழுந்த குருவி ‘ஆ’வெனப் பெரிதாய் வாயைத் திறந்து, அருவாளோட சேர்த்து, மொத்தப் பட்டறையையும் விழுங்கியது.
கொல்லன் பயந்து போய் அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஒரே நேரத்தில் வயிறு முட்டமுட்ட நிறைய முழுங்கியதால், குருவிக்கு ஏப்பமாக வந்தது. திடீரென்று ஒரு பெரிய ஏப்பம் விட்டது குருவி. அவ்வளவுதான், வயிற்றுக்குள் இருந்த எல்லாமும் வெளியே வந்துவிட்டன. குரங்குகள் வெளியே வந்ததும் ஓடிவிட்டன. இப்போது குருவிக்கு வயிறு காலியாகிவிட்டது. குருவிக்கு மீண்டும் ஒரே பசி. அதற்குள் உணவு தேடிச் சென்ற அம்மா குருவி இரையோடு வந்து சேர்ந்தது. அது இரையைக் கொடுத்ததும், குருவிக்குஞ்சு வேகவேகமாகச் சாப்பிட்டது.
“அவ்வளவுதானா, எனக்கு இன்னும் பசிக்குதே” என்றது குருவிக்குஞ்சு.
“சற்று பொறு. நான் உணவோடு வருகிறேன்” என்று பறந்துச் சென்றது அம்மா குருவி.
அம்மா குருவி சென்றதும், குட்டிக் குருவி அண்டா பொங்கல் எங்கேயாவது கிடைக்குமா என்று தேடப் போனது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago