உலகின் நம்பர் ஒன் காமிக்ஸ் ஹீரோ யார் தெரியுமா? சந்தேகமில்லாமல் அது சூப்பர்மேன்தான். காமிக்ஸ் ஹீரோக்கள் என்றாலே, அது சூப்பர் ஹீரோக்கள் மட்டும்தான் என்ற தோற்றத்தை உருவாக்கியவரே சூப்பர்மேன்தான்.
உருவான கதை:
ஜெர்ரி சீகலும், ஜோ ஷுஸ்டரும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். இருவரும் இணைந்து ஒரு காமிக்ஸ் கதையை உருவாக்க நினைத்தார்கள். 1933-ம் ஆண்டு ஒரு சிறிய இதழில் சூப்பர்மேன் என்ற ஒரு வில்லனைப் பற்றி ஒரு கதையை இவர்கள் எழுதி இருந்தார்கள்.
அடுத்த ஆண்டு அதே கதாபாத்திரத்தை ஹீரோவாகக் கொண்டு சூப்பர்மேன் என்ற பெயரிலேயே ஒரு காமிக்ஸ் கதையை உருவாக்கினார்கள். அதைப் பதிப்பிக்கவும் முயற்சித்தார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பின் அவர்களுடைய எடிட்டர் வின் சல்லிவன் இந்தக் கதையைப் படித்தார். உடனே கதை உரிமையை அவர்களிடம் இருந்து வாங்கி, ஆக்ஷன் காமிக்ஸ் என்ற புதிய காமிக்ஸ் பத்திரிகையைத் தொடங்கி அதை வெளியிட்டார்.
இந்த காமிக்ஸ் ஹீரோ உருவானதற்குப் பின்னால் ஒரு சோகக் கதையும் உள்ளது. சூப்பர்மேன் கதாசிரியர் ஜெர்ரி சீகலின் தந்தை லித்வேனியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறி, துணிக்கடை வைத்திருந்தார். 1932-ம் ஆண்டு அவரது கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் சீகலின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்தது. அவரைப்போலத்தான் சூப்பர்மேனும் புதிய உலகத்தில் குடியேறியவன், தந்தையை இழந்தவன். அதேநேரம் சூப்பர்மேனுக்கு குண்டுகளால் காயப்படுத்த முடியாத அசாதாரண சக்தி உண்டு.
சூப்பர்மேனின் கதை: ‘கிரைப்டன்’ என்னும் கிரகத்தில் உறுதியற்ற அணுசக்தி மையம் உள்ளது. அந்தக் கிரகமே வெடித்து சிதற இருப்பதை விஞ்ஞானி ஜோர்-எல் முன்கூட்டியே உணர்கிறார். தன்னுடைய மகன் கார்ல்-எல்-ஐ காப்பாற்றுவதற்காக அவனை ஒரு சிறிய ராக்கெட்டில் வைத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறார். அதன்பின் சிறிது நேரத்திலேயே அந்தக் கிரகம் அழிந்துவிடுகிறது.
பூமிக்கு வரும் இந்தச் சிறுவனை அமெரிக்காவின் மெட்ரோபோலிஸ் நகரில் வசிக்கும் ஜோனதன் - மார்த்தா கென்ட் தம்பதி எடுத்து வளர்க்கிறார்கள். சிறுவயதிலேயே பல சாகசங்களைச் செய்யும் இச்சிறுவன் கிளார்க் கென்ட் என்ற பெயரில் வளர்ந்து பெரியவனானதும் டெய்லி பிளானட் என்ற பத்திரிகையில் வேலைக்குச் சேருகிறான்.
நண்பர்கள்
லூயி லேன்: கிளார்க் கென்ட் உடன் பணிபுரியும் சக பத்திரிகையாளரான லூயி, பல நேரங்களில் கிளார்க்தான் சூப்பர்மேன் என்று சந்தேகப்பட்டது உண்டு. ஒரு திறமையான பத்திரிகையாளரான இவர் பலமுறை சண்டைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
இவரைத் தவிர கிரைப்டோ என்ற சூப்பர் நாய், சூப்பர் கேர்ள் ஆகியோரும் அடிக்கடி சூப்பர்மேன் கதைகளில் வருவார்கள். பின்னர் புத்தக விற்பனைக்காக பேட்மேன், சூப்பர்மேன் ஆகிய இருவரும் இணைந்து பல சாகசங்களை புரிந்ததும் உண்டு. ஆனாலும்கூட சூப்பர்மேன் ஒரு தனித்துவிடப்பட்ட மனிதராகவே சித்திரிக்கப்பட்டு இருப்பார்.
எதிரிகள்
லெக்ஸ் லூதர்: சூப்பர்மேன் மனித இனத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாகச் செயல்படுகிறார் என்ற எண்ணம் கொண்டவர் இவர். லூதர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவருக்கு, சூப்பர்மேனை அழிப்பதே வாழ்நாள் லட்சியம். குறிப்பிட்ட கதைத் தொடரில் இவர் அமெரிக்க அதிபராகவும் பதவி ஏற்றுவிடுவார்.
ஜெனரல் ஸாட்: ஆதிக்க மனப்பான்மை கொண்ட இவர், சூப்பர்மேனின் கிரகத்தில் இருந்து வந்தவர்தான். அதனால் இவருக்கும், சூப்பர்மேனைப் போன்ற சக்தி உண்டு. பலம் வாய்ந்த இவருடன் சூப்பர்மேன் மோதுவது திரைப்படங்களிலும் தொடர்ந்தது.
டூம்ஸ்டே: சூப்பர்மேனின் கிரகமான கிரைப்டனில் இருந்து வந்த இந்த விலங்குக்கு சக்தி அதிகம். அதனால்தான் 1993-ம் ஆண்டு கதைத்தொடரில் சூப்பர்மேனை டூம்ஸ்டே கொல்வதாக எழுதப்பட்டிருந்தது.
சூப்பர்மேனின் தாக்கம்: சூப்பர்மேனின் பிரம்மாண்ட வெற்றி அவரைப் போலவே பல சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியது. உதாரணமாக வில் ஐஸ்னர் உருவாக்கிய வொண்டர்மேன், பில் பார்க்கரின் கேப்டன் மார்வல் ஆகியவை சூப்பர்மேனை காப்பியடித்து உருவாக்கப்பட்டவைதான்.
அதனால் இவை நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்டன. சூப்பர்மேனைப் போன்ற ஒரு தொடரை உருவாக்கிக் காட்டுகிறேன் என்று சவால்விட்டு பாப் கேன் உருவாக்கியதுதான் பேட்மேன்.
தமிழில் சூப்பர்மேன்: பத்து ஆண்டுகளுக்கு முன்பாக கோத்தம் காமிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டபோது தமிழில் சூப்பர்மேன் வந்தார். ஏற்கெனவே, உலகம் முழுவதும் பிரபலமான அவர், தமிழ் காமிக்ஸில் ஏன் இவ்வளவு தாமதமாக வந்தார் என்பது இன்னமும் புரியாத புதிரே.
உருவாக்கியவர் : ஜெர்ரி சீகல் (கதாசிரியர்), ஜோ ஷுஸ்டர் (ஓவியர்)
முதலில் தோன்றிய தேதி : ஏப்ரல் 18, 1938 (ஜூன் 1938 தேதியிட்ட ஆக் ஷன் காமிக்ஸ் முதல் இதழில்)
பெயர் : சூப்பர்மேன்
வேறு பெயர்கள் : கிளார்க் ஜெரொம் கென்ட் / கார்ல்-எல் (கிரைப்டன் கிரக பெயர்)
தொழில் : நீதிக்காவலன் / டெய்லி பிளானட் என்ற பத்திரிகையில் நிருபர்
வசிப்பது : அமெரிக்காவில் மெட்ரோபோலிஸ் என்ற கற்பனை நகரில்.
விசேஷ சக்தி : அசாத்திய உடல் வலுவும், புத்திசாலித்தனமும் கொண்ட சூப்பர்மேனை எந்த ஆயுதங்களாலும் அழிக்க முடியாது. மீறி அவர் காயமடைந்துவிட்டால் சீக்கிரம் குணமடைந்துவிட முடியும். அவருக்கு எக்ஸ் ரே பார்வை உண்டு. பறக்கும் சக்தி கொண்ட அவருக்கு மூச்சை அடக்கும் திறன் உண்டு. சூப்பர்மேனுக்கு இருக்கும் ஒரே பலவீனம் அவர் வசிக்கும் கிரைப்டன் கிரகத்தின் பச்சை நிற அணுக் கதிரியக்கம் மட்டுமே.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago