யானையின் மூக்கு, அதான் தும்பிக்கை எப்படி இருக்கும்? பாதத்தைத் தொடும் அளவுக்கு நீண்டு வளைந்து இருக்கும் அல்லவா? ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தும்பிக்கை அப்படி நீண்டு இருக்கவில்லை. அது குட்டையாகவே இருந்தது. அப்புறம் எப்படி அது நீண்டது?
ஒரு காட்டுல தம்புன்னு யானைக் குட்டி ஒன்று இருந்தது. குட்டையாக இருக்கும் தும்பிக்கையை பெரியதாக மாற்றவேண்டும் என்று அது நினைத்தது. எப்போ பார்த்தாலும் தன் அம்மாவிடம் ஏதாவது கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும் பழக்கமும் அதற்கு உண்டு. அதுவும் காட்டுல இருக்குற மற்ற விலங்குகளைப் பற்றிதான் கேட்கும்.
நெருப்புக்கோழி பறவைக்கு பெரிய இறக்கைகள் ஏன் இருக்கு? ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து ஏன் மேலே நீண்டு இருக்கு? இந்த நீர்யானையோட கண்கள் எப்போதும் சிவப்பாகவே இருக்குதே? எலுமிச்சம் பழச் சுவையை குரங்குகளுக்கு ஏன் பிடிக்கிறதில்லை?,
முதலைகள் இரவு நேரத்தில் உணவை எப்படித் தேடும்? – தினமும் இப்படி ஏதாவது கேள்வியை அம்மாவிடம் தம்பு கேட்டுக்கிட்டே இருக்கும். ஆனால், சில சமயம் அம்மா யானை பதில் சொல்லும். சில சமயம், “உனக்கு வேலையே இல்லையா?”ன்னு செல்லமாகத் திட்டும்.
ஒரு நாள் எல்லா விலங்குகளும் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தன. அப்போது, தம்பு இப்படி கேள்விகளை கேட்க ஆரம்பித்தது. உடனே மற்ற விலங்குகள், “உஷ்ஷ்ஷ்ஷ்....... ஷ்....... ஷ்.......ஷ்.. அமைதியா இரு” என எச்சரிக்கை செய்தன.
ஆனால் குட்டி யானை தம்பு அமைதியாக இருக்கவில்லை. வாய் ஓயாமல் ஏதேதோ கேட்டுக்கொண்டே இருந்தது.
தம்புவின் இந்த செயலால் கோபமடைந்த பஞ்சவர்ணக்கிளி, “உனக்கென்ன முதலைகள் தங்களோட இரவு உணவை எப்படித் தேடிக்கொள்கின்றன என்பதற்கு விடைதானே... நான் சொல்கிறேன்...” என்றது.
“உண்மையாகவா?” ஆச்சரியத்தோடு கேட்டது குட்டியானை.
“உண்மையாகத்தான்... சேரும் பாசியும் அடங்கிய நீர் நிலைக்கு போ... அங்கு சென்றால் முதலைகள் எப்படி இரவு உணவைத் தேடிக்கொள்கின்றன என்று உனக்குத் தெரியும்...” என்றது பஞ்சவர்ணக்கிளி.
கிளி சொன்னபடியே நீர்நிலைக்குச் செல்லத் தயாரானது தம்பு. தனக்குத் தேவையான வாழைப்பழங்கள், பலாப்பழத்தை எடுத்துக் கொண்டு நீர்நிலையைத் தேடிச் சென்றது தம்பு.
சிறிதுதூரம் நடந்த பின் ஒரு நீர்நிலை தென்பட்டது.
அமைதியாக இருந்த அந்த நீர்நிலையின் பக்கத்தில் நின்றுகொண்டு, பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்தது தம்பு.
அப்போது நீர்நிலையில் சிறிய அசைவு தெரிந்தது. தம்பு கூர்ந்து பார்த்தது.
அந்தநேரம் நீர்நிலையில் இருந்து ஒரு உருவம் வெளியே வந்தது. கரையில் குட்டி யானை ஒன்று நிற்பதைக் கண்ட முதலை, கண்களைச் சிமிட்டிக் கொண்டது.
உற்சாகம் அடைந்த தம்பு, “உனக்காகத்தான் ரொம்ப நேரமாக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்... உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்... உனது இரவு உணவை நீ எப்படித் தேடிக்கொள்கிறாய்...?” என்று கேட்டது.
“ஓ.... அதுவா... பக்கத்துல வா... சொல்கிறேன்...” என்றது முதலை.
ஆர்வமிகுதியால் ஆபத்தை உணராமல் முதலையின் அருகே சென்றது தம்பு. இதுதான் சரியான நேரம் என்று நினைத்த முதலை, லபக் என்று குட்டி யானையின் தும்பிக்கையைக் கவ்வியது.
தான் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டு விட்டோம் என்பதை உணர்ந்த தம்பு, தும்பிக் கையை விடுவிக்க படாதபாடு பட்டது.
தும்பிக்கையைப் பிடித்த பிடியை விடாமல் தண்ணீருக்குள் தம்புவை இழுக்க முயற்சி செய்தது முதலை.
முதலை தண்ணீருக்குள் இழுக்க... தம்பு வெளியே இழுக்க... தும்பிக்கை நீண்டுகொண்டே போனது.
ஒரு கட்டத்தில் தன் சக்தியை எல்லாம் திரட்டி வெடுக்கென்று தும்பிக்கையை வெளியே இழுத்தது தம்பு. ஆபத்திலிருந்து விடுபட்டு, தடுமாறியபடி தரையில் விழுந்தது.
காயம்பட்ட தன் தும்பிக்கையை பரிதாபமாகப் பார்த்தது தம்பு.
அது முன்பைவிட மேலும் நீண்டு இருந்தது. முதலையின் பற்கள் பட்டதால் ஆங்காங்கே வரிவரியாகவும் இருந்தது.
“ தும்பிக்கை பெரியதாகிவிட்டதே” என்று தம்பு நினைத்துக்கொண்டிருந்தபோது அங்கு பஞ்சவர்ணக்கிளி வந்தது.
“தும்பிக்கை மிகவும் குட்டையாக இருக்கிறது என்று கவலைப்பட்டாயே... அது நீண்டு வளர்ந்துவிட்டதா?... இப்போது சந்தோஷமா?...” என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது பஞ்சவர்ணக்கிளி.
அட சரிதான், தும்பிக்கை நீண்டுவிட்டதே... நாம் நினைத்தப்படி தும்பிக்கை மாறிவிட்டதை தன் அம்மாவிடம் சொல்லக் கிளம்பியது தம்பு.
மூலக்கதை: ருட்யார்டு கிப்ளிங்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago