கிட்டத்தட்ட 2,600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் கிரேக்கத்தில் உள்ள மிலேட்டஸ் என்னும் பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சாம்பல் நிறத்திலிருந்த மேகங்கள் மெல்ல மெல்ல ஆரஞ்சு நிறத்துக்கும் பிறகு நல்ல சிவப்புக்கும் மாறிக்கொண்டிருந்தன. சட்டென்று மேகத்தை ஊடுருவிக்கொண்டு சூரியனின் கதிர்கள் வெளியில் வந்து விழுந்தன. கடவுளே, உனக்கு நன்றி!
சொல்லிவிட்டுக் கலைந்து போகும்போதுதான் தேல்ஸைக் கவனித்தனர். இந்தத் தேல்ஸ் ஏன் நம்மைப்போல் சூரியனைக் கண்டோமோ வணங்கினோமா அடுத்த வேலையைப் பார்த்தோமோ என்று இல்லாமல் மணிக்கணக்கில் இப்படியே நின்றுகொண்டிருக்கிறான் என்று ஒருவர் கேட்டேவிட்டார்.
‘‘நானும் ரொம்பக் காலமாகக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். சூரியன், மழை, புயல் எது வந்தாலும் உடனே ஏதோ எழுத ஆரம்பித்துவிடுகிறாய். இரவு நேரங்களில்கூடக் கண்கொட்டாமல் நட்சத்திரங்களைப் பார்த்துப் பார்த்து ஏதோ வரைகிறாய். அப்படி என்னதான் செய்கிறாய் தேல்ஸ்? எங்களுக்கும் சொல்லேன்!’’
தேல்ஸ் வெட்கத்தில் நெளிந்தார். ‘‘வானத்தில் உள்ள ஒவ்வொரு அதிசயத்தையும் ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். எப்படிச் சூரியனால் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தர முடிகிறது? எங்கிருந்து மழை இத்தனை அழகாகப் பொழிகிறது? புதிய புதிய நட்சத்திரங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? இந்த நிலா எப்படி வளர்கிறது, தேய்கிறது?”
‘‘இதில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது தேல்ஸ்? நீ கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நம் முன்னோர்களே விடை கண்டுபிடித்துவிட்டார்களே! கடவுள்தான் இந்த உலகிலுள்ள அனைத்தையும் படைத்தார் என்று உனக்குத் தெரியாதா? மழையும் வெளிச்சமும் நமக்குக் கிடைப்பது அவரால். கனிகளும் காய்களும் பயிர்களும் விளைவது அவரால். இரவும் பகலும் அவர் அளிக்கும் வரங்கள்.”
தேல்ஸ் தன்னிடமுள்ள ஏட்டை எடுத்துப் புரட்டினார். பக்கம் பக்கமாகக் கணக்குகளும் குறிப்புகளும் அதில் நிறைந்திருந்தன. ஒரு பக்கத்தை எடுத்து தன் விரல்களை ஓடவிட்டார்.
‘‘இங்கே பாருங்கள். எந்தெந்த நாட்களில் சூரியன் எப்போது உதயமாகிறது என்பதை இதில் குறித்து வைத்திருக்கிறேன். எப்போது சூரியன் மறைகிறது, எப்போது நிலா தோன்றுகிறது அனைத்தையும் தேதி வாரியாக இதில் நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட காலம் இருக்கிறது.
குறிப்பிட்ட திசையில்தான் சூரியன் உதிக்கிறது, குறிப்பிட்ட இடத்தில் மறைகிறது. ஒரு விதையை இன்று நீங்கள் விதைத்தால் அது எப்போது முளைக்கும், எப்போது செடியாகும், எப்போது வளரும், எப்போது பூவோ கனியோ தரும் என்று கணக்கு போட்டுச் சொல்லிவிட முடியும்.”
உடனே ஒரு கோபக் குரல் எழுந்தது. ‘‘அப்படியானால் கடவுள்தான் அனைத்தையும் உருவாக்கினார் என்பதை நீ மறுக்கிறாயா?”
‘‘இல்லை. உங்கள் கடவுளை நான் உங்களிடமிருந்து பறிக்க மாட்டேன். அதேபோல் என்னுடைய தேடலை என்னிடமிருந்து பறித்துவிடாதீர்கள். ஒரு நட்சத்திரம் மின்னும்போது, சூரியனின் கதிர் தீண்டும்போது, நிலா இரவில் ஒளிரும்போது நான் கணிதத்தையே காண்கிறேன். கனி, இலை, மலர், ஓடை, மலை என்று எதைப் பார்த்தாலும் கணிதமே என் கண்களுக்குத் தெரிகிறது. உங்களுக்குக் கடவுள் தெரிவதைப்போல.
இயற்கையிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அந்த ஒழுங்கைக் கணிதத்திடம் மட்டுமே நீங்கள் காண முடியும். இரண்டும் இரண்டும் நான்கு என்னும் விதி உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மாறாது. அதேபோல், சூரியன் அடுத்த மாதம் இத்தனை மணிக்குச் சரியாக உதிக்கும் என்று சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும்? நிலா எப்போது தோன்றும் என்பதைச் சொல்ல முடிந்தால்? புயல் எப்போது அடிக்கும் என்பதை முன்கூட்டியே ஊகிக்க முடிந்தால்?”
பரபரப்போடு மற்றொரு பக்கத்தைப் பிரித்து அவர்களுக்குக் காட்டினார் தேல்ஸ். ‘‘சில சூத்திரங்களைக் கண்டுபிடித்துவிட முடியுமானால் இத்தனை பெரிய வானத்தையும் ஒரு குழந்தையின் உள்ளங்கைக்குள் அடக்கிவிட முடியும். ஆனால், அதற்கு ரொம்பக் காலம் பிடிக்கும்.
இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நிச்சயம் அந்த அதிசயம் சாத்தியமாகத்தான் போகிறது. வானம் மட்டுமல்ல, இயற்கையின் பல புதிர்களுக்கு அப்போது விடைகள் கிடைக்கும்.”
‘‘அப்படியானால் இனி பூதம் நம்முடைய சூரியனை விழுங்காமல் நீங்கள் பார்த்துக்கொள்வீர்களா?” என்றாள் அதுவரை அமைதியாக இருந்த ஒரு சிறுமி.
தேல்ஸ் சிரித்தார். ‘‘திடீரென்று சூரியன் மறைந்துவிட்டால் பிசாசு விழுங்கிவிட்டது என்று எல்லோரும் பயந்துவிட்டார்கள். சூரியன் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை இப்படி மறையும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டால் யாரும் பயப்படமாட்டார்கள். ஆக, பூதத்தை விரட்டக்கூட கணக்கு தேவைப்படுகிறது.
இருளைக் கிழித்துக்கொண்டு கதிர் வருவதைப்போல் நம் அச்சத்தையும் அறியாமையையும் கிழித்து எறிந்து கணக்கு ஒளி பாய்ச்சும். அடுத்து எப்போது இப்படிச் சூரியன் மறையும் என்று இதோ இப்போதோ சொல்லிவிடுகிறேன். நீ வளர்ந்து பெரிய பெண் ஆனதும் நான் சொன்ன தேதியில் சூரியன் மறைகிறதா என்று நீயே சரி பார்த்துக்கொள்ளலாம்.”
‘‘ஓ, நிச்சயம் செய்கிறேன். இன்னொரு சந்தேகம். உங்கள் ஆடையில் ஏன் சேறு ஒட்டிக்கொண்டிருக்கிறது?’’
தேல்ஸ் மீண்டும் வெட்கத்தோடு புன்னகை செய்தார். ‘‘அதுவா குட்டி? நேற்று இரவு முழுக்க நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தேன். கீழே இருந்த சின்னப் பள்ளத்தைப் பார்க்காமல் தவறி விழுந்துவிட்டேன்.”
சிறுமி சத்தம் போட்டுச் சிரித்தாள். ‘‘தேல்ஸ், எங்கெல்லாம் பள்ளம் இருக்கிறது என்பதையும் கணக்கு போட்டுக் கண்டுபிடித்து வையுங்களேன்.”
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago