நா
ன். இந்த வார்த்தையைப் பயன்படுத்தாதவர்கள் யாராவது இங்கே இருப்பார்களா? நான் எழுதிய கதை, நான் வரைந்த படம், நான் சமைத்த உணவு, நான் சீவிய பென்சில், நான் படித்த புத்தகம் என்று எல்லாவற்றிலும் நான்தான் முன்னால் வந்து நிற்கிறது. நாம் மட்டும்தான் இப்படியா அல்லது ஆடு, மாடு, சிங்கம் எல்லாம்கூட இப்படித்தான் இருக்குமா? நான் மேய்ந்த புல், நான் கொடுத்த பால், நான் வேட்டையாடிய மான் என்று நம்மைப் போலவே நான், நான் என்று மிருகங்களும் பீற்றிக்கொள்ளுமா?
இந்தச் சந்தேகம் வருவதற்குக் காரணம் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஒரு வழக்கு. டேவிட் ஸ்லேட்டர் என்ற ஒளிப்படக் கலைஞர் மீது ஒரு குரங்கு வழக்கு போட்டிருக்கிறது. இது நான் எடுத்த படம் என்கிறார் ஸ்லேட்டர். இல்லை, இது என் படம், நானே எடுத்தது என்கிறது குரங்கு. யார் சொல்வது சரி என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் நீதிபதிகள் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.
உங்களால் முடிகிறதா என்று பாருங்கள். நடந்தது இதுதான். ஸ்லேட்டருக்கு விலங்குகளை விதவிதமாகப் படம் எடுக்கப் பிடிக்கும். படம் எடுப்பார், விற்பார். பணம் கிடைத்ததும் மீண்டும் ஊர் சுற்றுவார், மீண்டும் படம் எடுக்க ஆரம்பிப்பார். ஒருநாள் இந்தோனேஷியா காட்டில் ‘மகாக்’ வகைக் குரங்குகளைக் கண்டிருக்கிறார்.
சட்டென்று மனதில் ஒரு மின்னல். என்னால் என்னையே படம் எடுத்துக்கொள்ளமுடியும். ஒரு குரங்கால் தன்னையே படம் எடுத்துக்கொள்ள முடியுமா? உற்சாகமாகிவிட்டார் ஸ்லேட்டர். ஒரு திட்டம் உருவானது. காமிராவை ஓரிடத்தில் பாதுகாப்பாகப் பொருத்தினார். பிறகு புதர்களுக்குப் பின்னால் சென்று மறைந்துகொண்டார்.
குரங்குகள் வரத் தொடங்கின. சில குரங்குகள் நெருங்கி வந்து வேடிக்கை பார்த்தன. இன்னும் சில காமிராவைத் தொட்டுப் பார்த்தன. இன்னும் சில ‘டப் டப்’ என்று அழுத்திப் பார்த்தன. அப்போது சில படங்கள் விழுந்திருக்கும். ஆனால் ஸ்லேட்டர் அமைதியாகக் காத்திருந்தார். அவருக்குத் தேவை குரங்கு எடுத்த படம் அல்ல. குரங்கு தன்னையே எடுத்துக்கொண்ட படம்.
அந்த அதிசயம் விரைவில் நடந்தது. பளபளப்பாகக் கறுப்பு நிறத்துடன் ஒரு மகாக் குரங்கு துள்ளிக் குதித்துவந்தது. இதென்ன என்று காமிராவைத் தடவிக்கொடுத்தது. பிறகு கையால் நகர்த்திப் பார்த்தது. தனது அழகிய சப்பை மூக்காமல் முகர்ந்து பார்த்தது. அது காயோ பழமோ அல்ல என்று தெரிந்துவிட்டது. சரி போகட்டும்.
ஆனால் இது என்ன? தெரிந்துகொள்ளாவிட்டால் ராத்திரி தூக்கம் வராதே. இதை இன்று ஒரு கை பார்த்துவிடுவோம் என்று அசைத்தும் திருப்பியும் அழுத்தியும் பரிசோதனை செய்ய ஆரம்பித்தது.
ஒரு வேளை சிங்கமோ புலியோ இந்தப் பொருளை இங்கே வைத்துவிட்டுப் போயிருக்குமோ? அல்லது கரடியாக இருக்குமோ? ச்சே, ச்சே அவர்களுக்கெல்லாம் நிறைய வேலைகள் இருக்கும். இப்படி வெட்டியாக எதையாவது எங்காவது ஒளித்து வைத்துவிட்டு விளையாடும் வழக்கம் அவர்களுக்கு இல்லை. ஒருவேளை அம்மா சொன்ன இரண்டு கால் விலங்காக இருக்குமோ? அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றல்லவா அம்மா சொன்னார்! நமக்கேன் வம்பு என்று துள்ளியபடி ஓடி மறைந்துவிட்டது அந்தக் குரங்கு.
ஸ்லேட்டர் ஓடிவந்து காமிராவை எடுத்துப் பார்த்தார். அடடா, அற்புதம்! ஆழ்ந்த சிந்தனையில் ஒரு படம். சிரிக்கலாமா வேண்டாமா என்று லேசாக வாயைத் திறக்கும் ஒரு படம். பிறகு ஈ என்று பல்லைக் காட்டியபடி ஒரு படம். மகிழ்ச்சியுடன் ஊருக்குத் திரும்பினார் ஸ்லேட்டர். ஆனால், பிரச்சினை அதற்குப் பிறகுதான் தொடங்கியது. ‘நல்ல படம்தான், அழகான படம்தான். ஆனால் இதையெல்லாம் எடுத்தது நீங்கள் கிடையாது, குரங்குதான். எனவே, உங்களுக்குப் பணம் கொடுக்க முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள்.
வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது. ஸ்லேட்டர் சார்பாக ஒரு வக்கீல். அந்தக் குரங்கு சார்பாக இன்னொரு வக்கீல். ‘இது என் கட்சிக்காரரின் காமிரா, பாவம் அவர்தான் சிரமப்பட்டுக் காட்டில் பொருத்தினார். எனவே இது அவர் படம்’.
எதிர் தரப்பு வக்கீல் மறுத்தார். ‘காமிரா அவருடையதாக இருக்கலாம். படம் எடுத்தது குரங்குதான். அதுக்குதான் படம் சொந்தம். பணம் கொடுக்க வேண்டுமானால் குரங்குக்குத்தான் கொடுக்க வேண்டும்.’
விவாதம் சூடு பறந்துகொண்டிருக்கிறது. பெரிய பெரிய சட்டப் புத்தகங்களை எல்லாம் பிரித்து வைத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். விடை மட்டும் கிடைத்தபாடில்லை. டேவிட் ஸ்லேட்டர் நகம் கடித்தபடி காத்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், அந்தக் குரங்குக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. இது நான் எடுத்த படம், கொடு என்று அது சண்டை போடப் போவதில்லை. தன் பெயரில் ஒரு வழக்கு நடைபெற்றுவரும் செய்தியைக்கூட அது இன்னும் படிக்கவில்லை. ஒருவேளை இந்தக் கட்டுரையை அது படித்தால் ஈ என்று பல்லைக் காட்டியபடி விழுந்து விழுந்து சிரிக்கும். ‘இதற்கெல்லாம் ஒரு சண்டையா? இதுக்கு என்னைப் பிடித்து இழுக்க வேண்டுமா? இரண்டு கால் விலங்குகளே, ஏன் இப்படியெல்லாம் விநோதமாக நடந்துகொள்கிறீர்கள்?’
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago