பூமி என்னும் சொர்க்கம் 05: உயிரினப் பேரழிவு

By என்.ராமதுரை

பூ

மியின் கடல்களில் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உயிரினங்கள் அனைத்தும் இப்போது இருக்கின்றனவா? இல்லை. இப்போது பூமியில் நிலப் பகுதியில் இருக்கின்ற உயிரினங்கள் இன்னும் 50 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு இருக்குமா? சொல்ல முடியாது.

பூமியில் தோன்றிய உயிரினங்கள் அவ்வப்போது பெரும் எண்ணிக்கையில் அழிந்துவந்துள்ளன. கடந்த பல கோடி ஆண்டுகளில் இது ஒரு தடவை அல்ல, குறைந்தது ஐந்து தடவை நடந்துள்ளது. இதை உயிரினப் பேரழிவு என்கிறார்கள். டைனோசர்களின் மறைவு ஓர் உதாரணம்.

பல கோடி ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்திவந்த டைனோசர்கள் அடியோடு அழிந்துபோனதற்குக் காரணம் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அதற்கு முன்னர் இதே போன்று நடந்த உயிரினப் பேரழிவுகளுக்குக் காரணம் தெரியவில்லை.

பூமியில் சூழல் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தது கிடையாது. ஒரு நேரம் பூமியில் கணிசமான பகுதி உறைபனியால் மூடப்பட்டு இருந்துள்ளது. அப்போது கடல் மட்டம் வெகுவாகக் குறைந்துபோனது.Earth -1

சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கிற வெப்பம் சிறிது குறைந்தாலும், பூமியில் விபரீத மாறுதல்கள் ஏற்படலாம்.

பூமியானது இப்போது சுமார் 23 டிகிரியில் ஒரு பக்கமாகச் சாய்ந்தவாறு தனது அச்சில் சுழல்கிறது. இந்தச் சாய்மானம் நிரந்தரமாக இருந்தது கிடையாது. பூமி இப்போது இருப்பதற்கு நேர் எதிரான திசையில் சாய்ந்து இருக்கிற நிலையும் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்துள்ளது. இனி எதிர்காலத்திலும் அப்படி ஏற்படும்.

அப்படி ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்தியா உள்பட பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே உள்ள நாடுகளில் இப்போது மே, ஜூன், ஜூலை மாதங்களில் கோடையாக உள்ளது. பூமியின் சாய்மானம் மாறினால் டிசம்பரில் கோடைக் காலம் ஏற்படும். மே மாதம் குளிர்காலமாக மாறிவிடும். இப்படியான மாறுதல்கள் உயிரின வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியவை.

பூமியானது சூரியனிலிருந்து இப்போது சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனிலிருந்து பூமி மேலும் அதிக தூரம் விலகியிருக்கும் நிலை ஏற்பட்டால் பூமிக்குக் கிடைக்கிற வெப்பம் குறைந்து, பயிர் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படும்.

இவை பற்றியெல்லாம் செர்பிய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி மிலுடின் மிலன்கோவிச் விவரமாக ஆராய்ந்துள்ளார்.Earth -3right

இவை தவிர, பூமியில் விபரீத நிலைமைகள் ஏற்பட ஓர் எரிமலை பொங்கி எழுந்தாலும் போதும். பெரிய எரிமலை மிக ஏராளமான அளவுக்கு நெருப்பையும் புகையையும் தூசையும் கக்கினால் அந்தத் தூசு மேகம் பூமியைச் சூழ்ந்துகொண்டு, பூமிக்குக் கிடைக்கிற வெப்பத்தைக் குறைத்துவிடும். அதன் விளைவாகப் பெரும் பாதிப்புகள் நிகழும்.

1815-ம் ஆண்டில் இந்தோனேசியாவில் டம்போரா எரிமலை வெடித்தபோது ஏற்பட்ட தூசு மேகம் பூமியைச் சூழ்ந்துகொண்டதன் விளைவாக, சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் குறைந்தது. இதனால் பருவ நிலை பாதிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோடைக்குப் பதில் பனிப்பொழிவு ஏற்பட்டது.

இதன் விளைவாகப் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டது. பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்தியாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பருவமழை பாதிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் உள்ள டோபா என்ற இன்னோர் எரிமலை மிரட்டிக்கொண்டிருக்கிறது.

பூமியில் குறிப்பிட்ட பகுதியில் பூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு ஆண்டுக் கணக்கில் பிரவாகமாக வெளிப்படலாம். சைபீரியாவில் இப்படி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தக்காண பீடபூமிப் பகுதியிலும் ஏற்பட்டது. இதுவும் உயிரினத்தைப் பாதிக்கக்கூடியதே.

வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்தும் பூமியில் உயிரினங்களைப் பாதிக்கலாம். விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் சூரியனைச் சுற்றி வந்தபடி உள்ளன. பூமிக்கு அருகில் வந்து செல்கின்ற விண்கற்களும் உண்டு. சிறிய விண்கற்கள் தாக்கினால் பெரிய பள்ளங்கள் ஏற்படும். பெரிய விண்கல் ஒன்று பூமியை மணிக்கு 60 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கினால் பயங்கர விளைவுகள் ஏற்படும். இதனால் பூமியில் உயிரினங்கள் அழிந்துபோக வாய்ப்பு உண்டு. இப்படி ஒரு விண்கல் தாக்கியதன் விளைவாகத்தான் டைனோசர் அழிந்துபோனதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கடந்த காலத்தில் எப்போதெல்லாம் உயிரினங்கள் அழிந்தன என்பதை விஞ்ஞானிகள் கணக்கிட்டு வைத்துள்ளனர்.

1 ஆர்டோவிசியன் காலம் - 44 கோடி ஆண்டுகளுக்கு முன் முதல் பேரழிவு. பூமி குளிர்ந்தது. பனி யுகம் நிலவியது.

2 டெவோனியன் காலம் - 38 கோடி ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது பேரழிவு. கடல்வாழ் உயிரினங்கள் பெரிதும் மடிந்தன.

3 பெர்மியன் காலம் - 25 கோடி ஆண்டுகளுக்கு முன் 80 சதவிகித உயிரினங்கள் அழிந்தன.

4 டிரையாசிக் காலம் - 20 கோடி ஆண்டுகளுக்கு முன் 96 சதவிகித உயிரினங்கள் அழிந்தன.

5 கிரிடேசியஸ் காலம் - 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் அழிந்தன.

இப்போது மனித இனத்தின் செயல்களால் அப்படி ஓர் ஆபத்து ஏற்படலாம். காற்று மண்டலத்தில் அதிகப்படி கார்பன் டை ஆக்சைடு சேர்மானத்தால் பூமியில் விபரீத விளைவுகள் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nramadurai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்