எ
துக்கெடுத்தாலும் பாட்டுப் பாடுறது அம்மாவின் பழக்கங்களில் ஒன்று. அவ்வளவு பாட்டு தெரியும். ஆனால், எல்லாமே மூணு வரி நாலு வரிதான். சில நேரம் அது பழைய பாட்டா அல்லது இட்டுக்கட்டிப் பாடுறதான்னு குழப்பமா இருக்கும். முக்கியமா என்னைத் தேடும்பொழுது நான் வீட்டுக்குள்ள போனால், ‘வாங்கோன்னா… அட வாங்கோன்னா…’ன்னு பாடுவாங்க. படிச்சிக்கிட்டே தூங்குனோம்னு வச்சிக்குங்க, ‘தூங்காதே தம்பி தூங்காதே…’ அப்படின்னு பாடுவாங்க. இதுபோல கைவசம் பல பாடல்களை வச்சிருப்பாங்க. அம்மாவின் கிண்டலுக்கும் கேலிக்கும் பாடல்கள்தான் இப்பவும் உறுதுணையா இருக்கு. ஆனா அவங்க சின்னப் புள்ளையில பாடுன பாடல்களைப் பத்திக் கேட்டோம்னு வச்சிக்கோங்க, யோசிச்சி யோசிச்சி அவ்ளோ பாட்டுப் பாடுவாங்க. அதெல்லாம் யார் சொல்லிக்கொடுத்தான்னு கேட்டோம்னா, “நாங்களே பாடுவோம்”னு சொல்லுவாங்க. “இல்ல இல்ல... எங்களுக்கு முன்னாடி செட்டு பாடுனது எங்களுக்கு வந்துடுச்சி” அப்டிம்பாங்க.
“பாடப்பாட இன்பம் இன்பம்தான். பாட்டுக்குப் பஞ்சமே இல்லாமல் பாடுவோண்டா மகனே!
மலையான் மலையாங் கொக்கு
மலைக்கு ரெண்டு பூப்போடு
அருவாமனை அறுத்துத் தரேன்
அதுக்கு ரெண்டு பூப்போடு
சாயாங்கால நேரத்தில் வானத்தில் பறக்கும் கூட்டமான கொக்குகளைப் பார்த்து விரல் நகங்களை ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு பாடுவோம். கொக்கு எறியும் பூ, நகத்தில் பதிந்து இருக்கும். கொக்கு பறந்த பிறகு எத்தனை பூ என்று எண்ணிப் பெருமை பீத்துவோம். நாங்க பாடுவோம், அது பூப்போடும். மேஜிக் பாட்டு நிறைய இருந்தது. குழிக்குள்ள இருக்கிற குள்ளநரிய கூப்புட, காத்தாடிய பறக்க வைக்கன்னு பாடல்கள் வச்சிருந்தோம்.
மொட்டை அடிச்சவுங்களப் பார்த்தாலே பாட ஆரம்பிச்சிடுவோம்.
மொட்ட மண்ட !
மொழுக்கு சாறு!
கேப்ப ரொட்டி!
டமாஸ்…
இப்படி இதைச் சொன்னாலோ நான் மட்டும் பாடுனாலோ அது எடுப்பா இருக்காது. நாலஞ்சி பேரு சேர்ந்து நிக்கும்பொழுது மொட்டத்தலை வரணும். நாங்க பாடணும். அப்பதான் அது நல்லா இருக்கும். மொட்டைக்கு மட்டும் நாலஞ்சி பாட்டு உண்டு.
மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்!
முருங்க மரத்துல ஏறுச்சாம்!
கட்டெறும்பு கடிச்சுதாம்!
காலு காலுன்னு கத்துச்சாம்!
ஒரு சீசன்ல நிறைய பேர் மொட்டை போடுவாங்க. அப்ப பாடுனா நல்லாருக்கும்.
பள்ளிக்கூடத்துல வாத்தியார் கிட்ட ஒண்ணுக்குப் போகறதுக்கு கேக்குறதைப் பத்திகூட பாட்டு இருக்கு.
சார் சார் ஒண்ணுக்கு!
சட்டாம்புள்ள ரெண்டுக்கு!
நாம்போறேன் வீட்டுக்கு!
நாளைக்கு வரேன் பள்ளிக்கு!
நாங்க பாடுற பாட்டுல, கெட்டவார்த்தை, சாதி வார்த்தையெல்லாம் இருக்கும். அதெல்லாம் ஜாலியா பாட ஆரம்பிப்போம். அந்த இடம் வரும்பொழுது மட்டும் மெதுவா சொல்லுவோம். அப்பதான் நாங்க நல்லபிள்ளை. பட்டம் பறந்தாலே பாட ஆரம்பிச்சிடுவோம்.
பட்டம் பறக்குது!
பள்ளிக்கூடம் தொறக்குது!
…….
கொய்யாப்பழம் தொங்குது!
மழை பேஞ்சுதுன்னா, ‘மழை வருது மழை வருது’ பாட்டு, பனை மரத்தைப் பார்த்தோம்னா ‘பனை மரமே பனை மரமே பச்சைக் கண்ணாடி, குளத்துக்குப் போனோம்னா கொளத்துக்குப் போனாரு நண்டைப் புடிச்சாரு நறுக்குனு கடிச்சாரு...’ பாட்டைப் பாடுவோம்”னு சொன்னாங்க அம்மா.
ஒரு நாள் அம்மா டான்ஸ் ஆடுற மாதிரி ஆடிக்கிட்டே,
எம்.ஜி.ஆர் சண்டை
பானுமதி கொண்டை
கொளத்துல கொக்கு
கோழிப்பீய நக்கு…ன்னு சந்தோஷமா பாடுனாங்களாம்.
இந்த மாதிரி கெட்ட வார்த்தை பாட்டெல்லாம் இனிமேல் பாடக் கூடாது அப்டின்னு கூட்டிட்டுப் போய் அம்மாவை வேத பாடசாலையில சேர்த்தாங்களாம்.
“காலைல அஞ்சு மணிக்கு பஞ்சனை எழுச்சி பாடப் போகணும். தூக்கம் கலையாத கண்ணோட குரல உசத்தி
கிழக்கு வெளுத்தது கிளர் மணி கேட்டது!
கெழுமிய தேவர்கள் யாவரும் கூடினர்!
சலங்கை ஒலிக்கவும் சாயுட்சம் ஏவவும்னு பாடணும். அதுமாதிரி சாயங்காலம் நாலு மணிக்கு அடுத்து பாடப் போகணும். சாமிப் பாட்டு பாடுறதுல என்ன லாபம்னா பெரியவங்க கூப்பிட்டுப் பாடச் சொல்லிப் பாராட்டுவாங்க. நம்மளை தெய்வக் குழந்தைன்னு சொல்லுவாங்க. நல்ல புள்ள ஃபீல் கிடைக்கும். உன்னைக்கூட அதுமாதிரி சேர்க்கணும்னுதான் எனக்கு ஆசை” அப்டிம்பாங்க அம்மா. நான் உடனே, “அம்மா அம்மா அந்தக் கெட்ட வார்த்தை பாட்டெல்லாம் நீயாவது ட்யூஷன் மாதிரி எடுக்கலாம்ல” அப்படிம்பேன். அம்மா அதைப் பத்தி யோசிக்கிற மாதிரி இருக்கும்.
“நிறைய பாட்டு மறந்தே போச்சு. ஒரு வேளை எங்க செட்டு ஒண்ணா சேர்ந்து பாட ஆரம்பிச்சா திரும்பி ஞாபகம் வந்துடுமோ” அப்டின்னு அடுத்த கட்டத்தை யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க.
அம்மாவுக்குப் பேசும்போது சின்னப் புள்ளைங்க பாட்டைப் பத்தி பெருமையா பேசுற மாதிரி பாட வரலை. சினிமாப பாட்டு, சித்தர் பாட்டு , சாமிப் பாட்டெல்லாம்தான் பாட வருது. பாட்டை மாத்திப் பாடுறதுல பெரிய ஆளு.
செல்லாத்தா, செல்லா மாரியாத்தா – எங்க
அறிவுமழுங்க ஓடிவரோம் பாராத்தா!
அடி பெசாகாம விஷயத்தை மாத்திப் பாடுவாங்க. அம்மாவோட பாடல்களைப் பாடவைத்து கேசட்டு போடுற திட்டம் ஒண்ணு இருக்கு.
(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago