பூ
ங்குன்றம் கிராமத்தில் வசிக்கும் சந்திரன், பானைகள் செய்வதில் வல்லவர். அழகான பானைகளைச் செய்து, பல ஊர்களுக்கும் சென்று விற்றுவருவார்.
அன்று மண்பானைகளைச் செய்து அடுக்கி வைத்தார். பிறகு அந்த மண்பானைகளின் மீது செம்மண் கரைசலைப் பூசினார். களிமண் பானைகள் இப்போது சிவப்பு நிறத்தில் இன்னும் அழகாகப் பளபளத்தன.
அடுக்கி வைக்கப்பட்ட மண்பானைகளுள் ஒரு பானை மட்டும் அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்த்தது. ஏற்கெனவே அது மண்ணாக இருந்தபோது மற்ற மண்பானைகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று பார்த்திருந்தது.
சந்திரன் செம்மண் கரைசல் பூசப்பட்ட பானைகளைச் சூளையில் அடுக்கிவைத்து, நெருப்பால் சுட்டுத் துன்புறுத்துவாரே என்று நினைத்தது அந்தப் பானை.
உடனே அது தன் அருகிலிருந்த பானையிடம், “நண்பரே! நம்மை உருவாக்கியவர் இன்னும் சற்று நேரத்தில் நம்மையெல்லாம் சூளையில் வைத்து, சுட்டுப் பொசுக்கிவிடுவார். நாம் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாவோம். அதனால் நாம் இருவரும் எங்கேயாவது ஒளிந்துகொள்ளலாமா?” என்று கேட்டது.
ஆனால் அருகிலிருந்த பானையோ, “நண்பரே, எல்லோரும்தான் நெருப்பில் வேகப் போகிறோம். நாம் மட்டும் ஒளிந்துகொள்வதில் நியாயம் இல்லை. நான் வரவில்லை” என்று சொல்லிவிட்டது.
ஆனால் ஒளிய நினைத்த மண்பானை, தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.
‘ஐயோ! சுடும் நெருப்பில் என் உடல் வெந்து புண்ணாகிவிடுமே. நான் நிச்சயம் ஒளிந்துகொள்ள வேண்டும்’ என்று நினைத்த பானை தன் எண்ணத்தில் உறுதியாக இருந்தது அது. உடனே சந்திரனுக்குத் தெரியாமல் மெதுவாக உருண்டு, அருகிலிருந்த மரத்தடிக்குச் சென்று ஒளித்துகொண்டது.
சற்று நேரத்தில் சந்திரன் மண் பானைகளைச் சூளையில் அடுக்கி வைத்தார். அவற்றின் மீது வைக்கோலும் விறகுகளும் வைத்து, நெருப்பை மூட்டினார். நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது.
நீண்ட நேரத்துக்குப் பிறகு நெருப்பு அணைந்து, குளிர்ந்தது. பிறகு சுட்ட பானைகளை எல்லாம் வேறோர் இடத்தில் அடுக்கிவைத்தார் சந்திரன்.
ஒளிந்துகொண்டிருந்த மண்பானை மெதுவாக எட்டிப் பார்த்தது. சந்திரனுக்குத் தெரியாமல் மெதுவாக உருண்டு வந்து மற்ற மண்பானைகளின் நடுவே அமர்ந்துகொண்டது.
சிறிது நேரத்தில் ஒருவர் பானைகள் வாங்குவதற்காக வந்தார். அவர் சந்திரனிடம், “ஐயா, ரெண்டு பானைகள் வேண்டும்” என்று கேட்டார்.
அங்கிருந்த இரண்டு பானைகளை எடுத்து வந்து கொடுத்து, அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டார் சந்திரன்.
பானைகளை வாங்கியவர் வீட்டுக்குச் சென்றார். கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் இருந்ததால், தண்ணீர் பிடித்து வைக்கவே இரண்டு மண்பானைகளை அவர் வாங்கிவந்திருந்தார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகக் கார்மேகம் திரண்டு வந்தது. மழை பெய்யத் தொடங்கியது. பானைகளை வாங்கிச் சென்றவருக்கு மகிழ்ச்சி.
‘ஆஹா! பானைகளை வாங்கியவுடன் மழை பெய்கிறதே! இந்த இரண்டு பானைகளிலும் மழைத் தண்ணீரைப் பிடித்து வைத்தால் குடிப்பதற்கு ஆகுமே’ என்று நினைத்தார். மழை நீர் விழும் இடங்களில் மண்பானைகளை வைத்தார்.
பானைகளில் மழை நீர் நிரம்பத் தொடங்கியது. நெருப்பில் சுடப்பட்ட மண்பானை அப்படியே உறுதியாக இருந்தது. சுடாத மண்பானையோ தண்ணீரில் கரைய ஆரம்பித்தது.
அது அருகிலிருந்த மண்பானையைப் பார்த்து, “ஐயோ! நண்பனே, நீ நன்றாக இருக்கிறாய். நான் கரைந்துகொண்டிருக்கிறேனே... ஏன்?” என்று கவலையோடு கேட்டது.
உடனே சுட்ட மண்பானை, “நண்பனே, நம்மை உருவாக்கியவர் எதற்காகச் சூளையில் வைத்து சுடுகிறார் என்று இப்போது புரிகிறது. நீ நெருப்புக்குப் பயந்து ஒளித்துகொண்டாய். அதனால் நீ உறுதி குலைந்து போயிருக்கிறாய். தண்ணீரில் கரைந்து போகிறாய். நான் நெருப்புக்கு அஞ்சாமல் அதைத் தாங்கிக்கொண்டேன். அதனால் இன்று உறுதியாக இருக்கிறேன்”என்று சொன்னது.
அதைக் கேட்ட பச்சை மண்பானை, “யார் திடீர் துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிக்கொள்கிறார்களோ, அவர்கள் பின்னாளில் எதையும் தாங்கும் வலிமையைப் பெறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்” என்று வருந்திய குரலில் சொன்னபடியே முழுவதுமாகக் கரைந்துபோனது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago