அ
ம்மா சின்னபுள்ளையா இருந்தப்போ பெண் பிள்ளைகளுக்கு நிறைய வேலை இருக்குமாம். காலைல எழுப்புறதே வேலை செய்யதானாம். அதுவும் ஐந்து மணிக்கு வாசல்கூட்டி, கோலம் போடணும். வீடு, தோட்டம் கூட்டணும், அடுப்பு மொழுகணும், பாத்திரம் விளக்கணும், தண்ணி எடுக்கணும், தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தணும், அம்மியில துவையல், தேங்காய் சட்னி எல்லாம் அரைக்கணும், இட்லிக்கு ஆட்டுக்கல்லுல அரைக்கணும், கூழுக்குக் கம்பு குத்தணும், இட்லிப் பொடிய இரும்பு உலக்கை வச்சி குத்தணும், அரிசி அரிக்கணும், நெல்லு காயப்போடணும்...
இப்படி வேலைய அடுக்கிக்கிட்டே போனாலும் முடிவே இல்லாம இருக்குமாம். அதோட பொம்பளப் புள்ளைக படிக்கணும். நல்ல புள்ளையா ஊர் சுத்தாம அடங்கி இருக்கணும்.
ஊர் சுத்தின அம்மாவை வீட்டுக்குள்ள அடைக்கிறதுக்காகவே இந்த வேலைகள் தரப்படுமாம். அது மட்டுமல்ல, வேலையில தனியாகச் செய்யும் வேலைகள், சேர்ந்து செய்யும் வேலைகள்னு ரெண்டு விதமா இருக்குமாம். இட்லின்னா ரெண்டு ஆட்டுக்கல் அரிசி, ரெண்டு ஆடுக்கல் உளுந்து ஆட்டணும். அதை ஆளுக்கொண்ணா செய்யணும். இல்லைன்னா ஒருத்தர் ஆட்டுக்கல் குழவியைச் சுத்தணும். ஒருத்தர் மாவைத் தள்ளணும். பாத்திரம் விளக்குறதுன்னா ஒருத்தர் விளக்கணும், ஒருத்தர் கழுவணும். இப்படி வேலைகளைப் பிரிச்சி, பங்குப் போட்டுச் செய்யணுமாம்.
வேலைக்காக வீட்ல பஞ்சாயத்து, அடி, அழுகைன்னு நிறைய தகராறு நடக்குமாம். அதுல அம்மாதான் பல நேரம் குற்றவாளியாம். சில நேரம் பஞ்சாயத்து, தாத்தாவரை போகுமாம். தாத்தா, அம்மாவைப் பக்கத்துல கூப்பிட்டு, “அம்மாகிட்ட திட்டு வாங்காம, அந்த வேலைய செஞ்சுட்டு விளையாட ஓடிடு”ன்னு சொல்லுவாங்களாம். விளையாட ஓடிடுன்னு தாத்தா சொல்றது அம்மாவுக்குப் புடிக்கும். அதுக்காக கட கடன்னு வேலையை செஞ்சு முடிப்பாங்களாம்.
முடித்துவிட்டு ஓட முடியாம பாட்டி இன்னொரு வேலையைக் குடுப்பாங்களாம். வீடு முழுக்க வேலையா கிடக்குமாம். அம்மாவுக்கு நானும் நிறைய வேலை செய்து பழகணும்னு இருக்கும். அதை இப்படித்தான் சொல்லுவாங்க. “வீட்ல அவ்வளவு ஆட்களும் இல்ல. வேலையும் இல்ல. இருக்குற வேலைய ஆளுக்கு ஒண்ணா செஞ்சாதான் என்ன?”அப்டின்னு அடிக்கடி கேட்பாங்க. இதெல்லாம் அம்மா இப்ப பேசுறது.
அம்மா நீங்க எப்படி வேலைய ஏமாத்துவீங்க அப்டின்னு கேட்டா போதும்.
“அது ரொம்ப ஈஸி. அதுக்கு நிறைய வழி இருக்கு. அடுத்து எந்த வடிவத்துல வேணும்னாலும் வேலை வரும். நாம தப்புச்சிடணும்னு மனசுல சொல்லிக்கிட்டே இருக்கணும். நல்லா பொறுப்பா வேலை செஞ்சோம்னு வச்சிக்கோ, நீ செஞ்சா நல்லாருக்கு அப்படின்னு நம்ம தலையில கட்டிடுவாங்க. அதனால வேலை சரியா செய்ய தெரியாதது மாதிரியே காமிக்கணும். அவ அரிசி அரிச்சா கல்லு நிக்காது, அவகிட்ட தர வேணாம். தடி மாடு மாதிரி வளந்துடுச்சே ஒழிய போட்ட கோலத்தையே தினம் போட்டுகிட்டு இருக்கா.
அவளைக் கோலம் போடச் சொல்லாதீங்க அப்டின்னு நம்மள அந்த வேலையில இருந்து ஒதுக்கிடுவாங்க. இப்ப எல்லாம் உக்காந்து பேசுறோம் இல்லன்னா சாப்புட்றோம்னா அடுத்த வேலை என்னவா இருக்கும்னு யோசிக்கணும். கட கடன்னு சாப்பிட்டு முடிச்சிட்டு இடத்தைக் காலி பண்ணிடணும். இதெல்லாத்தையும் தாண்டி திடீர்னு பெரிய வேலை வருதுன்னா அதுக்கு வழி அவசரமா டாய்லெட் வருதுன்னு சொல்றதுதான்.
அப்பல்லாம் நாங்க காட்டுக்குப் போகணும். போயிட்டு வர்றதுக்கு அரை மணி நேரமும் ஆகும். ஒரு மணி நேரமும் ஆகலாம். அதுக்குள்ள வேலை முடிஞ்சிடும். இதல்லாம் தெரியாம மாங்குமாங்குன்னு வேலை செய்துக்கிட்டு இருக்கிற அக்காவைப் பார்த்தா எனக்குச் சிரிப்புகூட வரும்.
பொம்பளப் புள்ளன்னா வேலை செய்யணும், வீட்டுக்குள்ளயே இருக்கணும்னு லட்சம் கோடி தடவை கேட்டிருப்பேன். அதையே அம்மா சொல்லுவாங்க, பாட்டி சொல்லுவாங்க. அடுத்த வீட்டுக்காரவுங்க சொல்லுவாங்க, வழியில பார்க்குறவுங்களும்தான். ஆனா, எங்க பக்கத்து வீட்டு கோகிலா அக்கா மட்டும் வேற மாதிரி சொல்லுவாங்க. இந்தப் புராணத்தை எல்லாம் கேட்டா பொம்பளப் புள்ள வாழ்க்கை விடியாதுன்னு ரகசியமா சொல்லுவாங்க. அவுங்க முன்னாடி யாராவது அறிவுரை சொன்னாங்கன்னா பார்த்துக்கிட்டே இருந்துட்டு பக்கத்துல கூப்புடுவாங்க.
அது சொன்னத எல்லாம் தூக்கி குப்பையில போட்டுட்டு சந்தோஷமா இரு. அழுவுறத்துக்கு வழிசொல்லிக் குடுப்பாங்க. கொழந்தைக்குக் கை வலிக்காது? எவ்வளவு தண்ணியதான் இழுக்குறது அப்படின்னு ஆறுதலா பேசுவாங்க. இவுங்க நமக்கு அம்மாவா இல்லையேன்னு இருக்கும். ஆனாலும் வேலை செய்யாம தப்பிக்க முடியாது. அதனால என்ன செய்வேன் தெரியுமா? புடிச்ச வேலையா எடுத்துக்குவேன். ஈஸியானதா எடுத்துக்குறதுன்னு சில வேலைகள் செஞ்சிடுவேன்.
அம்மியில துவையல் அரைக்கணுமா? நெல்லு காயப்போடணுமா? துணி காயப்போடுறேன்… இப்படிச் சில வேலையெல்லாம் முந்தி முந்தி செய்வேன். நல்ல புள்ளையாவும் இருக்கணும்” .
அம்மா வேலையை ஏமாத்துற கதை சொன்னாங்கன்னு வச்சிக்கோங்க, ஒருவாரம் நான் வேலையை ஏமாத்தப் பார்ப்பேன். ஆனா, அம்மா வேற மாதிரி வேலை வாங்குவாங்க. “கீரைய எங்கூட ஆஞ்சா நான் காட்டுக்கு முயல் புடிக்கப் போனதைப் பத்திச் சொல்லுவேன்னு கதையையே தொடங்கிடுவாங்க. இன்னைக்குச் சேர்ந்து வீடெல்லாம் கழுவணும்னா நாளைக்கு வெளிய போலாம்னு சொல்லுவாங்க.
அம்மாவோட திட்டத்துக்குள்ளே மாட்டக் கூடாதுன்னு நினைச்சாலும் முடியாது. அம்மாவின் சூட்சுமம் தெரிஞ்சி விலகியிருந்தோம்னு வச்சிக்கோங்க. திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. பொறுப்புன்னா என்ன? குடும்பம்னா என்ன? வீடுன்னா… இப்படிதான் திட்டு இருக்கும். இதுக்கு சேர்ந்து வேலை செய்யறதே நல்லாருக்கும்!
(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago