பா
ர்ப்பதற்கு ஒரு கல்போல் தோற்றமளிக்கிறது அல்லவா? ஆம், இது கல்தான். ஆனால் கம்ப்யூட்டர், செல்போன், ராக்கெட், ரோபோ என்று மனிதன் இதுவரை கண்டுபிடித்த எல்லாவற்றையும்விட ஒரு நவீனமான கண்டுபிடிப்பு இது. இதன் வயது 10 லட்சம் ஆண்டுகளுக்கு மேல். கொஞ்சம் பொறுங்கள், இத்தனை பழைய ஒரு பொருள், அதுவும் ஒரு சாதாரணக் கல் எப்படி நவீனக் கண்டுபிடிப்பாக இருக்க முடியும்?
இந்தக் கல்லின் வாழ்க்கை வரலாறைக் கேட்டால் நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள். பிறந்தது ஆப்பிரிக்காவில் உள்ள டான்சானியாவில். குறிப்பாக, ஓல்டுவாய் கோர்ஜ் என்னும் பகுதியில். கையில் பிடித்துக்கொள்ளும் அளவுக்குச் சிறிய உருவம். சாம்பலும் பச்சையும் கலந்த நிறம். வயதாகிவிட்டதல்லவா, முகம் முழுக்கக் கோடுகள், பள்ளங்கள், குழிகள். ஆனாலும் வலுக் குறையவில்லை. தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் ஓர் அதிசயப் பொருள்போல் இது பாதுகாக்கப்படுகிறது.
இப்படி ஒரு கல்லை இன்று ஒரு நிமிடத்தில் உருவாக்கிவிட முடியும். ஆனால், பழங்காலத்தில் இதை உருவாக்குவதற்கு நிறையக் காலம் பிடித்திருக்கும். காரணம் அந்தக் கற்காலத்தில் கருவிகள் எதுவும் இல்லை. அவர்கள் உருவாக்கிய முதல் கருவியே இந்தக் கல்தான்.
கற்கால மனிதர்களுக்கு வேட்டையாடுவதும் பழம், கொட்டைகள் ஆகியவற்றைச் சேகரிப்பதும்தான் முக்கியமான வேலை. போனோமா வந்தோமா என்று ஒரு விலங்கை வேட்டையாடிவிட முடியாது. காலை, மதியம் என்று பார்க்காமல் துரத்திக்கொண்டு ஓட வேண்டும். சில நேரம் நாள் கணக்கில் ஓடித் திரிந்தாலும் ஒரு விலங்கும் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், வெற்றிகரமாக வேட்டையாடி முடித்தாலும் சாப்பிடுவது சுலபமல்ல. ஒரு காட்டெருமையை அல்லது யானையை, கொய்யா போல் அப்படியே கடித்துத் தின்றுவிட முடியுமா என்ன?
தோல், சதை என்று பிரிக்க வேண்டாமா? அது சுலபம் என்றா நினைக்கிறீர்கள்? ஓர் ஊரே திரண்டுவந்து பிய்த்தாலும் எருமை அசைந்து கொடுக்காது அல்லவா? என்ன செய்யலாம் என்று கற்கால மனிதர்கள் யோசித்திருக்க வேண்டும். விவாதித்திருக்க வேண்டும். யானையை உடைக்க, யானையைவிடப் பெரிய பாறாங்கல்லை எடுத்து வரலாமா என்று ஒருவர் கேட்டிருப்பார். அதை எப்படித் தூக்குவதாம் என்று இன்னொருவர் மறுத்திருப்பார். அதெல்லாம் வேண்டாம், கையடக்கமாக ஒரு சிறிய கல் போதும். ஆனால் அது கூர்மையாக இருக்க வேண்டும் என்று மூன்றாவது நபர் யோசனை சொல்லியிருக்க வேண்டும்.
ஹாஹா, யானைக்குப் போய் ஒரு சிறிய கல்லா என்று ஊரே கைகொட்டிச் சிரித்திருக்க வேண்டும். ஆனால், அந்த மனிதன் கிண்டலையும் சிரிப்பையும் பொருட்படுத்தவில்லை. தனக்குப் பிடித்த ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தான். ஓர் ஓரமாக அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தான். என்னதான் செய்கிறான் பார்க்கலாமே என்று மற்றவர்களும் அடிக்கடி வந்து எட்டிப் பார்த்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கல்லை அவன் செதுக்க ஆரம்பித்தான். ராத்திரி முழுக்க டொக் டொக் என்று கல்லைத் தட்டும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. கொஞ்ச நேரம் அமைதி. பிறகு காலையில் மீண்டும் டொக் டொக்.
இப்போது அந்தக் கல்லின் வடிவம் மாறியிருந்தது. மேல் பக்கம் கூர்மையாகவும் கீழ் பக்கம் அகலமாகவும் இருந்தது. இதென்ன விசித்திரம் என்று மற்றவர்களும் வந்து அமர்ந்தார்கள். நான் ஏதாவது பண்ணட்டுமா என்றான் ஒருவன். நானும் சும்மாதான் இருக்கிறேன், எதையாவது உடைக்கட்டுமா என்றான் இன்னொருவன். ஐயோ உடைக்கக் கூடாது, கவனமாகச் செதுக்கவேண்டும் என்று நம் கதாநாயகன் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான். சரி, இவன் சொல்வதைக் கேட்டுதான் பார்ப்போமே என்று எல்லோரும் ஒன்றுசேர்ந்து பணியாற்றினார்கள்.
விரைவில் அந்தக் கல் ஒரு கோடரியாக மாறியது. கையில் எடுத்துப் பார்த்தார்கள். அழகாகக் கைக்குள் அடங்கியிருந்தது. எடுத்துக்கொண்டு ஓடினார்கள். கொண்டா அந்தக் காட்டெருமையை, ஒரு கை பார்த்துவிடலாம். கூர்மையான மேல் பகுதியைக் கொண்டு கீறினார்கள். அற்புதமாக வெட்டி எடுக்க முடிந்தது. அத்தனை பெரிய உடலை சுலபமாக எடுத்து, பிரித்து, பங்கு போட்டு சாப்பிட முடிந்தது. அது மட்டுமா? பழம், கொட்டை, மரக்கிளை என்று அனைத்தையும் கல்லைக் கொண்டு கிழிக்கவும் உடைக்கவும் பிளக்கவும் முடிந்தது. அவசரப்பட்டுக் கிண்டலடித்த மனிதனை ஊரே தலைக்கு மேல் தூக்கிவைத்துக் கொண்டாடியது. கை தட்டி, நடனம் ஆடி மரியாதை செலுத்தியது.
புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் எல்லாமே இந்தக் கல்லில் இருந்துதான் தொடங்குகின்றன. உழைப்பின் முக்கியத்துவத்தை முதல்முறையாக மனிதன் உணர்ந்துகொண்டது இந்தக் கல்லிடம் இருந்துதான். தனித்தனியாக அல்ல, நாம் அனைவரும் ஒரே சமூகமாக ஒன்றுசேர்ந்து உழைத்தால் நம் அனைவருக்கும் பலன் அதிகம் என்பதை இந்தக் கல் மனிதனுக்குக் கற்றுத்தந்தது.
மேலும், இந்தக் கல்லை உருவாக்கும்போதுதான் மனிதர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வழக்கத்தையும் ஆரம்பித்திருக்க வேண்டும். கிண்டலடிக்கவும் சண்டை போடவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் நட்பு கொள்ளவும் அவர்கள் கற்றுக்கொண்டது அப்போதுதான்.
எனவே, கல்லுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கல் இல்லாவிட்டால் கற்காலம் இல்லை. கற்காலம் இல்லாவிட்டால் இன்றைய நவீன காலம் இல்லை.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago